Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 13, 2011

உணவு உற்பத்தி பாதிப்பு ஏற்படும் அபாயம்! : வீட்டு மனைகளாக மாறும் விளை நிலங்கள்

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தினால், பயிர்களில் களை எடுக்க ஆட்கள் இன்றி, பல விவசாயிகள் தங்களது விளை நிலங்களை, வீட்டு மனைகளாக மாற்றி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், உணவு உற்பத்தி பாதிக்கும் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் (100 நாள் வேலை) ஏரி தூர்வாருதல், குளம் சீரமைத்தல் என பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், கிராமங்களில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என, சில ஆண்டுகளாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நெல், வேர்க்கடலை என பயிரிடும் விவசாயிகளுக்கு நாற்று நடவும், களை எடுக்கவும், அறுவடை செய்யவும் ஆட்கள் தேவைப்படுகின்றனர். தற்போது களை எடுக்க ஆள் இல்லையே என, கிராமங்களில் விவசாயிகள் தினசரி புலம்பி வருகின்றனர். சில விவசாயிகள் களை எடுக்க ஆட்கள் தேடி, அதிகாலை 5 மணிக்கெல்லாம் ஊர் ஊராக டிராக்டரை வைத்துக் கொண்டு அலையும் காட்சியை, கிராமங்களில் பார்க்க முடிகிறது.
கிராமங்களில் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்களோ 100 நாள் வேலைக்குத் தான் செல்கிறார்களே தவிர, விவசாய வேலைக்கு வர மறுக்கின்றனர்.
ஆட்களைத் தேடி அலைந்து வெறுத்த சில விவசாயிகள், "அரசு 100 நாள் வேலைக்கு கொடுக்கும் கூலியை விட அதிகம் தருகிறேன்' எனக் கூறி, ஆட்களை அழைத்துச் செல்கின்றனர்.
இது குறித்து, பேரம்பாக்கத்தை அடுத்த, நரசிங்கபுரம் விவசாயி ராமலிங்கம் கூறும் போது,""கிராமங்களில் உள்ள விவசாய பெண் தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்கு சென்று விடுகின்றனர். இதனால், வயலில் களை எடுக்க, பல கிராமங்களுக்குச் சென்று அழைத்துவர வேண்டியுள்ளது,'' என்றார்.
நடவு, அறுவடை நேரத்தில் பணியை தள்ளி வைக்கலாம்: கிராமங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பாதிப்பின்றி 100 நாள் வேலை திட்டத்தை நடத்தினால் உணவு உற்பத்திக்கு பாதிப்பு வராது. குறிப்பாக நெல் நடவு மற்றும் அறுவடைக் காலங்களில் அரசின் 100 நாள் வேலை திட்டத்தை மேற்கொள்ளக் கூடாது என, அரசு உத்தரவிட வேண்டும்.
இதுகுறித்து, கடம்பத்தூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் அலுவலர் ஒருவர் கூறும் போது, ""கிராமங்களில் விவசாய வேலை இல்லாத காலத்தில் 100 நாள் வேலை நடத்துவது குறித்து, அரசுதான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
நெல் நடவு மற்றும் அறுவடைக் காலங்களில் அரசின் 100 நாள் வேலை திட்டத்தை மேற்கொள்ளக் கூடாது என அரசு அறிவித்தால், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் 100 நாள் வேலை போக, மற்ற நாட்களிலும் வேலை கிடைக்கும்.
அவர்களின் வருமானமும் உயரும். கிராம விவசாயிகளுக்கும் நடவு, களை எடுத்தல், அறுவடை ஆகிய பணிகளுக்கு ஆட்கள் இல்லையே என்ற, நீண்ட நாள் பிரச்னையும் தீரும் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சில பெருவிவசாயிகள் களை எடுக்க வரும் பெண் தொழிலாளர்களுக்கு, இலவச "ஜாக்கெட் பிட்' வழங்கி ஊக்குவிக்கின்றனர். மேலும் கிலர், டிராக்டர்களில் அழைத்துச் சென்று, அதே வாகனத்தில் வீட்டுக்கு கொண்டு வந்து விடுகின்றனர். சிறு விவசாயிகளோ, பயிரிடலாமா வேண்டாமா என்ற யோசனையில் உள்ளனர்.
பல கிராமங்களில் உள்ள விவசாயிகள், இதனால் தங்களது விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி, விற்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதே நிலை தொடர்ந்து நீடித்தால், உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்பது நிச்சயம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...