Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 01, 2011

மத்திய அரசு இழுத்தடிப்பால் முடங்குகிறது உடன்குடி அனல்மின் திட்டம்

உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்தில், முந்தைய தி.மு.க., அரசு விதிப்படி நிலக்கரி ஒப்பந்தம் செய்யாததால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பணி மேற்கொள்வதற்கான அனுமதியை தாமதப்படுத்தி உள்ளது. இதனால், திட்டப் பணிகள் முடங்கி, நிர்ணயிக்கப்பட்ட காலவரையரைக்குள் முடிக்க முடியாத நிலை எழுந்துள்ளது.
அதிகரிக்கும் தேவையை சமாளிக்க தமிழக மின்வாரியம், மூன்று தொலைநோக்கு கூட்டு திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்தது. இதில், மத்திய அரசின் என்.டி.பி.சி., நிறுவனத்துடன் இணைந்து வல்லூர் அனல்மின் திட்டமும், நெய்வேலி நிலக்கரி கழகத்துடன் இணைந்து தூத்துக்குடி அனல்மின் திட்டமும், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் (பெல்) நிறுவனத்துடன் இணைந்து உடன்குடி அனல்மின் திட்டமும் நிறைவேற்றப்பட உள்ளன. இதில், வல்லூர் திட்டப் பணிகள் மட்டும் விரைவுபடுத்தப்பட்டு, மின் உற்பத்தி துவங்கும் நிலையில் உள்ளது. ஆனால், உடன்குடி சிறப்பு அனல்மின் நிலையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்னும் அனுமதி தரவில்லை.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடியில், 1,600 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையம், முதல் பகுதி மே 2013லும், இரண்டாவது பகுதி செப்., 2013லும் நிறைவேற்ற, காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு, கடந்தாண்டு பிப்ரவரியில், பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்தப்பட்ட பின், நிலம் கையகப்படுத்தப்பட்டது. திட்டத்திற்கு விமான போக்குவரத்து துறை மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டுத் துறை சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன. மின் நிலையத்திற்கு கடல்நீரையும், கடலோர பகுதியையும் பயன்படுத்த, மாநில கடலோர பகுதி ஒழுங்குமுறை ஆணையமும், உடன்குடி சிறு துறைமுகத்தை பயன்படுத்த, தமிழக சிறு துறைமுக துறையும் அனுமதியளித்து விட்டது.

தடையில்லா சான்று கேட்டு, 2010 மே மாதம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு, தமிழக மின்வாரியம் விண்ணப்பித்தது. இதை, சுற்றுச்சூழல் துறை நிபுணர் குழு ஆய்வு செய்து, தடையில்லா சான்றுக்காக ஒரு அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி விட்டது. ஆனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், இதுவரை அனுமதி வழங்கவில்லை. ""விதிப்படி கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி வழங்குவதற்கு மத்திய அரசிடம் ஆணை பெற்று, கோல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு தான், சுற்றுச்சூழல் ஆய்வு நடத்தப்படும். ஆனால், முந்தைய தி.மு.க., அரசு, மத்திய அரசில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் ஆய்வுக்கும், சான்றுக்கும், நிலக்கரி ஆணை பெறாமலே ஏற்பாடு செய்தது. இப்போது நிலை மாறிவிட்டதால் தாமதம் ஏற்படுகிறது,'' என, பெயர் வெளியிட விரும்பாத திட்டப்பணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோல் இந்தியா நிறுவனத்திடம் நிலக்கரி பெறும் போது, அதன் எரிசக்தி திறன், அதன் பயன்பாட்டிற்கு பின் அச்சாம்பலை கையாளும் விதம் ஆகிய மதிப்பீட்டை தயாரித்து தர வேண்டும்.

அதேபோல, முன்னுரிமை அடிப்படையில் அனல்மின் நிலையத்திற்கு தேவைப்படும் நிலக்கரியை பெற, அடிப்படை புரிந்துணர்வு ஒப்பந்தமும் தேவை. இவற்றை, ஆளும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த தி.மு.க., எளிதாக கையாண்டிருக்கலாம். ஏனெனில், 2007 டிசம்பரில் முதல்கட்டமாக, 76 லட்சம் டன் நிலக்கரி கேட்டு, தி.மு.க., அரசு விண்ணப்பித்த பின், அதற்கு அடுத்த நடவடிக்கை என்ன என்பது புதிராகும். இதற்கு, மத்திய நிலக்கரித் துறையும், கோல் இந்தியா நிறுவனமும் இதுவரை அனுமதி தரவில்லை. "நிலக்கரி அனுமதி கிடைத்த பிறகே, சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி தரும்' என, தமிழக மின்துறைக்கு மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உடன்குடி அனல்மின் நிலைய பணிகள் முடங்கி கிடக்கின்றன. உடன்குடி மின் நிலைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சசிகுமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர், வேறு பணிகளை தொடர முடியாமல் தவிக்கின்றனர். மத்திய அரசின் அனுமதி தாமதமாவதால், திட்டமிட்ட காலத்தில் மின் நிலைய பணிகள் துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, உடன்குடி மின்நிலைய திட்டப்பணி அதிகாரி ஒருவர், ""கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. எந்த நேரத்திலும் அனுமதியை எதிர்பார்க்கிறோம்,'' என தெரிவித்தார்.

ஜூலை 2ல் பிரதமருடன் பேச்சு: உடன்குடி அனல்மின் நிலைய பணிகள் குறித்து, மின்வாரிய சேர்மன் ஹன்ஸ்ராஜ் வர்மா, வாரிய இயக்குனர்கள் மற்றும் உடன்குடி திட்டப்பணிகள் அதிகாரிகள் குழுவுடன், கடந்த 28ம் தேதி, டில்லியை சேர்ந்த பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் (பெல்) நிறுவன அதிகாரிகள், சென்னையில் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறும் போது, ""நாளை (2ம் தேதி) பிரதமர் மன்மோகன் சிங், எரிசக்தி துறை, நிலக்கரித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடனும், கோல் இந்தியா நிறுவன அதிகாரிகளுடனும் சிறப்பு கூட்டம் நடத்தவுள்ளார். அப்போது, தமிழக மின் திட்ட பணிகளுக்கான அனுமதி குறித்தும் பேசப்படும்,'' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...