Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 26, 2011

இந்தியர்களின் பணம் சொற்பமே; போட்டு உடைத்தது சுவிஸ் மத்திய வங்கி

ஜெனீவா:"சுவிட்சர்லாந்து வங்கிகளில், பிற நாட்டவர்கள் சேமித்து வைத்துள்ள பணத்தோடு ஒப்பிடுகையில், இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள பணம் வெறும் 0.07 சதவீதம் தான்' என, அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்குவது குறித்து நீதிக் கண்காணிப்பு மற்றும் அரசியல் ரீதியிலான நெருக்கடி சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில், முதன் முறையாக, சுவிட்சர்லாந்து தேசிய வங்கி (எஸ்.என்.பி.,) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்நாட்டு வங்கிகளில் 2010ன் இறுதி வரையிலும், இந்தியர்கள் 11 ஆயிரத்து 250 கோடி ரூபாய் (2.5 பில்லியன் டாலர்) பதுக்கி வைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எஸ்.என்.பி., செய்தித் தொடர்பாளர் வால்டர் மியர் இதுகுறித்து கூறியதாவது: இத்தொகையில், 2.1 பில்லியன் டாலர் (9,450 கோடி ரூபாய்) சேமிப்பு மற்றும் வைப்புத் தொகையாக, இந்தியாவின் தனிநபர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவை போக, மீதமுள்ள 400 மில்லியன் டாலர் (1,800 கோடி ரூபாய்), இந்தியாவில் உள்ள தனிநபர்கள், தங்களின் கையாட்கள் பேரில் சேமிப்பாக வைத்துள்ளனர். யு.பி.எஸ்., மற்றும் கிரெடிட் சூசி என்ற சுவிசின் மிகப் பெரிய இரு வங்கிகளில் தான், இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் பெரும்பான்மையாக தங்கள் பணத்தை சேமித்து வைத்துள்ளன.இவ்வாறு வால்டர் மியர் தெரிவித்தார்.
கடந்த மூன்றாண்டுகளில், சுவிஸ் வங்கிகளில் இருந்த இந்தியர்களின் பதுக்கலில், 500 மில்லியன் டாலர் (2,250 கோடி ரூபாய்) குறைந்துள்ளதாக, எஸ்.என்.பி., வங்கியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, 2009ல் 2.7 பில்லியன் டாலரில் இருந்து (12,150 கோடி ரூபாய்) 3 பில்லியன் டாலர் (13,500 கோடி ரூபாய்) வரை இருந்த இந்தியர்களின் சேமிப்பு, 2010 இறுதியில், 2.5 பில்லியன் டாலராக (11,250 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.


இதற்கிடையில், சுவிஸ் வங்கிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2010 இறுதி வரையில், சுவிஸ் வங்கிகளில் உள்ள அனைத்து நாட்டவரின் சேமிப்பு 3.5 டிரில்லியன் டாலர் (157.5 லட்சம் கோடி ரூபாய்) ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் தரப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, சேமிப்பில் பிற நாடுகளுக்கும் இந்தியாவுக்கும், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் தெரிகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், லக்சம்பர்க் மற்றும் ஹாங்காங் நாட்டவர்களின் சேமிப்போடு இந்தியர்களின் சேமிப்பை ஒப்பிட்டால், அது ஒன்றுமே இல்லை எனலாம்.அதேபோல், ரஷ்யா, பிரேசில், சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து நாட்டவர்களும் இந்தியர்களை விட அதிகமாக குவித்து வைத்துள்ளனர். இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள், 2.4 மில்லியன் டாலர் (11 கோடி ரூபாய்) அதிகமாகவே சேமித்து வைத்துள்ளனர்.


நாடு மதிப்பு (டாலரில்)


பிரிட்டன் 400 பில்லியன்
அமெரிக்கா 300 பில்லியன்
ரஷ்யா 12 பில்லியன்
தைவான் 12 பில்லியன்
பிரேசில் 6 பில்லியன்
சீனா 5.3 பில்லியன்
இந்தியா 2.5 பில்லியன்


1 பில்லியன் - 100 கோடி. 1 டாலர் - ரூ.45/-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...