Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 22, 2011

சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

செலவைக் குறைக்கும் காய்கறி!

இன்று பல நாடுகளில் மக்களின் பசியையும் மிருகங்களின் பசியையும் தீர்த்து வரும் மிக முக்கியமான உணவாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது சோயாபீன்ஸ்.

இது அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதனால் சோயா மொச்சை என்றும் இதனை வழங்குகிறோம்.

சோயா மொச்சையை அரைத்து மாவாகப் பயன்படுத்தலாம். இந்த மாவு கோதுமை மாவைவிடப் பல மடங்கு ஊட்டம் மிகுந்த உணவாகும். உடலின் கட்டுமானப் பணிக்கு கால்சியம் தேவை. கோதுமையில் உள்ளதைவிட 15 மடங்கு கால்சியம் சோயாமாவில் இருக்கிறது.

மூளை வளர்ச்சிக்கு…
இதே போல மூளை வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் பயன்படும் பாஸ்பரஸ் ஏழு மடங்கு உள்ளது. இரத்த விருத்திற்கு பயன்படும் இரும்புச்சத்து பத்து மடங்கு இருக்கிறது.

பசியைத் தூண்டும் தயாமின் பத்து மடங்கு இருக்கிறது. இளமைத் துடிப்புடன் உடல் உறுப்புகள் இருக்கப் பயன்படும் ரிபோபிளவின் ஒன்பது மடங்கும் இருக்கிறது. கோதுமையைவிட இத்தனை மடங்கு சத்துணவு அம்சங்கள் கொண்டதாய் இருப்பதால் இது நோய் தீர்க்கும் உணவு மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.

புரதத்தின் அளவை அதிகரிக்க ஒர் எளிய வழி!
குழந்தைகளின் வளர்ச்சிக்கு டின்களில் அடைத்து விற்கப்படும் அனைத்துச்சத்து மாவுப் பொருள்களிலும் சோயா உணவு சேர்க்கப்படுகிறது.

சப்பாத்தி செய்யக் கோதுமை மாவைப் பயன்படுத்தும்போது அதனுடன் இரு தேக்கரண்டி சோயா மாவையும் சேர்த்துப் பிசையுங்கள். அதனால் சப்பாத்தியில் புரதத்தின் அளவு அதிகரிக்கும். பன்னிரண்டு முட்டைகளில் உள்ள புரதத்திற்கு இணையானது இரு தேக்கரண்டி சோயா மாவு.

100 கிராம் சோயாவில் 432 கலோரி கிடைக்கிறது. புரதம் மட்டும் 43.2% இருக்கிறது. அதுவும் உயர்தரமாய் இருக்கிறது. இரும்புச்சத்து 11.5 மில்லிகிராம் இருக்கிறது. எனவே, நோயாளிகளும், குழந்தைகளும் இரத்த விருத்தி பெற்று உடல் தேற முடிகிறது. ‘பி’ குரூப் வைட்டமின்களால் உடலும் தேறி விடுகிறது. நோயாளி திடமான உடலுடன் எழுந்து நடப்பார்.

இதோ ஒரு புதிய வகைப்பால்!
குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் சோயா பால் மிகச் சக்தி வாய்ந்தது. எல்லா வயதினர்களும் சோயாபாலையும், சோயா தயிரையும் பயன்படுத்தினால் வாழும்வரை ஆரோக்கியமாய் வாழலாம்.

சோயா பால் தயாரிக்க சோயா மொச்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, தோலை உரித்துவிட்டு, ஆட்டுக்கல் (கிரைண்டர்) மூலம் அரைக்க வேண்டும். எவ்வளவு மாவு உள்ளதோ அதைவிட மூன்று மடங்குத் தண்ணீர் சேர்த்து பாலாகக் கரைக்கவும். பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். ஆறியதும் துணியினால் பாலை வடிகட்டிச் சர்க்கரை சேர்த்து அருந்தவும். குழந்தைகள் உள்பட அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும் பால் இது. பசுவின் பால் சிலருக்கு எளிதில் ஜீரணமாகாது.

ஆறிய பாலில் சிறிது தயிரை ஊற்றி உறைய வைத்துத் தயிராகப் பயன்படுத்தலாம். சாதாரணத் தயிர் உடலுக்கு மினுமினுப்பைத் தரும். சோயா தயிர் உடலுக்கு மேனி வண்ணத்தையும் தந்து அறிவையும் வளர்க்கும். குழந்தைகள் அறிவுடன் வளர சோயா தயிர் சேர்ப்பது மிகவும் நல்லது.

இன்றைய ஆய்வுகள் சோயா பீன்ஸில் உள்ள 90 சதவிகித புரதச் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்கிறது என்கிறது. 100 சதவிகித சோயா பாலும் ஜீரணமாகிவிடுகிறது.

சோயாவின் சிறப்பு!
சோயாவில் லெசித்தின் என்னும் முக்கியமான நார்ப்பொருள் இருக்கிறது. இது பாலாக உடலுக்குள் செல்லும் போது, அடைத்துக்கொண்டு இருக்கும் கொழுப்பில் பொருள்களைக் கரைத்துவிடுகிறது. இதனால் இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன, குணப்படுத்தப்படுகின்றன.

நீரிழிவுக்காரர்கள் நன்றாய் சாப்பிடலாம்!
சோயா மொச்சையில் மாவுப் பொருளே இல்லை எனலாம். இதனால் இதில் உள்ள கார்போஹைடிரேட் உடலக்கு வெப்பத்தையும் சக்தியையும் தந்துவிடுகிறத.அதே நேரத்தில் சிறுநீரில் சர்க்கரை எதுவும் சேருவதில்லை. இதனால் நீரிழிவு நோயாளிகள் சாதாரண மொச்சையுடன் சிறிதளவு சோயா மொச்சையையும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது சோயாவிலேயே பலகாரம் செய்து சாப்பிடலாம்.

சோயா மாவு சேர்த்த பலகார வகைகளையும் வியாதிக்காரர்கள் அளவுடன் ஆசைக்காகப் பயம் இன்றிச் சாப்பிடலாம்.

எளிதில் ஜீரணமாக….
இரத்தச்சோகை நோயாளிகளுக்குத் தேவையான இரும்புச்சத்து சோயாமாவில் அபரிதமாய் இருக்கிறது. இவர்களுக்கு ஜீரணமாவது சற்றுக்கடினம். எனவே, இவர்கள் பாலோ உணவில் இரு தேக்கரண்டி மாவோ சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகி இரத்த விருத்தி ஏற்படும்.

குடல் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள், இரத்தம் கெட்டு விடுதல் ஆகியவற்றைக் குணமாக்கத் தினமும் சோயா தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பசி தீர்க்கும் சோயா!
நல்ல எண்ணெயைப் போலவே உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காதது சோயா எண்ணெய்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றியது, சோயா மொச்சை, சோஜா, சோயா என்றும் அதனை வழங்குகிறார்கள்.

கிளைசின் மாக்ஸ் மெர் என்பது இதன் தாவர விஞ்ஞானப் பெயராகும். சோயாவில் ஆயிரம் இனங்கள் உள்ளன.

சீனாவில் ஐந்து தானியங்களை இறைவனுக்கு இணையாக புனிதத் தானியங்களாகப் போற்றுகின்றனர். அவற்றுள் இதுவும் ஒன்று. (மற்ற நான்கு : அரிசி, கோதுமை, பார்லி, தினை).

1804ஆம் ஆண்டு சீனாவுக்குச்சென்று திருப்பிய அமெரிக்கக் கப்பல் ஒன்று சோயாபீன்ஸையும் எடுத்துக் கொண்டு வந்தது.

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் போது காபிக்குப் பதிலாகச் சோயாவைப் பயிர் செய்ய ஆரம்பித்தார்கள். இன்று சோயாபீன்ஸின் உலக உற்பத்தியில் 60% அமெரிக்காவைச் சேர்ந்ததாகும்.

ஜப்பானியர்கள் நீண்ட நாள் வாழ்வதற்குரிய காரணங்களுள் சோயாவும் ஒன்றாகும். அவர்கள் தினமும் தக்காளி சாஸ் போல சோயா சாஸும் சேர்த்துக் கொள்கின்றனர். சோயா மாவு சேர்த்தும், சோயா மாவிலேயே பலகாரங்களை செய்தும் சாப்பிடுகின்றனர். இதனால் நரம்புகளும் மூளையைச் சுற்றியுள்ள திசுக்களும் வலுவுடன் தொடர்ந்து இருக்கின்றன. கொலாஸ்டிரலும் சேர்வதில்லை. இதனால் ஆயுள் நீடிக்கிறது.

உடலில் சொறி சிரங்கு உள்ளவர்கள் நிரந்தரமாய்க் குணம் பெறச் சில நாள்கள் தொடர்ந்து சோயா மொச்சையும், சோயா பாலும் சேர்க்க வேண்டும்.

எதிர்காலத்திலும் பல நாட்டு மக்களின் பசியையும், மிருகங்களின் உணவுத் தேவையையும் தீர்ப்பதில் சோயா பீன்ஸிற்கும் முக்கிய இடம் உண்டு.

நலமுடனும் அறிவுத் தெளிவுடனும் வாழ விரும்புகிறவர்கள் தினசரி சோயா பால், சோயா தயிர் சேர்த்துக்கொள்வார்கள். மூன்றாவதாக சோயா மாவு சேர்த்தே இட்லி, குழம்பு, பச்சடி போன்றவற்றையும் தயாரித்துக் குறைந்த செலவில் தரமான புரதச் சத்தை அதிக அளவில் உங்கள் உடலில் சேர்த்துக் கொண்டு நலமுடன் வாழுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...