Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 05, 2012

அன்னிய முதலீடு: இன்று ஓட்டெடுப்பு!

புதுடெல்லி: சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று ஓட்டெடுப்பு நடைபெறுகிறது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு நிலவி வருகிறது.இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று பெரும்பாலான எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. முதலில் இக்கோரிக்கையை ஏற்காத மத்திய அரசு பின்னர் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்படும் என்று அறிவித்தது.அதன்படி, இப்பிரச்சினை குறித்து ஓட்டெடுப்புக்கு வகை செய்யும் 184-வது பிரிவின் கீழ் நேற்று நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் தொடங்கியது.

 அன்னிய முதலீடு விவகாரத்துடன், அது தொடர்பான அன்னிய செலாவணியை முறைப்படுத்தும் சட்ட (பெமா) திருத்தங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு விவாதத்துக்கு அப்போது முன்வைக்கப்பட்டது. அதற்கு பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரண்டையும் தனித்தனியாக விவாதித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாசுதேவ ஆச்சாரியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோரும் அதே கோரிக்கையை விடுத்தனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சருமான,அவை முன்னவருமான சுஷில்குமார் ஷிண்டே, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோர் அந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. எனவே, ஒன்றாக நடத்துவதுதான் சரியானது என்று அவர்கள் கூறினர். இறுதியாக, சபாநாயகர் மீராகுமார், இரண்டு பிரச்சினைகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று தீர்ப்பு அளித்தார். அதன்பிறகு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிரான தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.

 ஒன்றரை மணி நேரம் ஆவேசமாக பேசிய அவர், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சிறு வணிகர்களுக்கு எதிரான சதி என்று கூறினார். அவ்வப்போது, ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் நடந்தது. சோனியா காந்தி, அத்வானி ஆகியோர் உறுப்பினர்களை அமைதிப்படுத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் பேசுகையில், அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால், அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். அவர் பா.ஜனதா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார். கூட்டணி கட்சியான தி.மு.க. சார்பில் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், சில்லறை வர்த்தகத்தில் 30 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலன்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை கடுமையாக எதிர்க்கிறோம். ஆனால், இந்த அரசு கவிழ்வதை
நாங்கள் விரும்பவில்லை. எனவே, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிப்போம் என்று கூறினார்.

 அன்னிய முதலீடு அனுமதிக்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் அனைத்து வாதங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அவர் கூறினார். பின்னர், அன்னிய முதலீடு முடிவை ஆதரித்து பேசிய மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி கபில்சிபல்"10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நகரங்களில்தான் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில், அதுபோல் 53 நகரங்கள் உள்ளன. பா.ஜனதா கூட்டணி ஆளும் மாநிலங்கள், இந்த முடிவை அமல்படுத்தாது. எனவே, மீதி 18 நகரங்களில்தான் அன்னிய முதலீடு திட்டம் அமல்படுத்தப்படும்" என்றார். இன்று ஓட்டெடுப்பு இந்நிலையில் தீர்மானத்தின் மீது இன்றும் விவாதம் நீடிக்கிறது.அதன் முடிவில், ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.இதையொட்டி,தவறாமல் சபைக்கு வந்து,கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப ஓட்டு போடுமாறு முக்கிய கட்சிகள் தங்கள் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.

 மக்களவையை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு சாதகமான நிலையே உள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் ஓட்டெடுப்பு என்று வரும்போது அதில் பங்கேற்காமல் புறக்கணிக்கும் என்று தெரிகிறது. இது மத்திய அரசுக்கு சாதகமான நடவடிக்கை ஆகும். இதுபோல திமுக சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்தபோதிலும், ஓட்டெடுப்பில் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று அறிவித்து இருக்கிறது.எனவே மத்திய அரசு பெரும்பான்மைக்கு தேவையான 272 உறுப்பினர்களின் ஆதரவை எளிதாக பெற்றுவிடும். மாநிலங்களவை மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 245 உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சிக்கு 70 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளான பகுஜன் சமாஜ், லோக் ஜனசக்தி, ராஷ்டிரீய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெற்றாலும் 117 பேர் ஆதரவு தான் உள்ளது.

மெஜாரிட்டிக்கு தேவையான 123-ஐ எட்ட முடியாத நிலை இருக்கிறது. பா.ஜனதா கூட்டணி கட்சிக்கு 110 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. 7 சுயேச்சைகள், 10 நியமன உறுப்பினர்கள், சிறிய கட்சிகளின் 5 உறுப்பினர்களின் ஆதரவையே ஆளும் காங்கிரஸ் அரசு நம்பி உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...