Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 06, 2012

பஞ்சாபில் வரலாறு படைத்த பாதல்- முதல் முறையாக ஆட்சியை தக்க வைக்கும் அகாலிதளம்!

சண்டிகர்: பஞ்சாபில் முதல் முறையாக தனது ஆட்சியை தக்க வைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளது சிரோமணி அகாலிதளம். மேலும், 5வது முறையாக பிரகாஷ் சிங் பாதல் முதலமைச்சராகிறார். இதுவும் ஒரு சாதனையே.

2012 சட்டசபைத் தேர்தலில் வரலாறு படைக்கும் வெற்றியை பாதல் தலைமையிலான கூட்டணி பஞ்சாபில் பதிவு செய்துள்ளது. ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை நிலவி வந்த போதிலும் அதையும் மீறி, காங்கிரஸின் கடும் எதிர்பார்ப்புகளையும் மீறி அங்கு ஆட்சியை தக்க வைக்கிறார் பாதல். இப்படி ஆட்சியை தக்க வைப்பது அகாலிதளத்திற்கு இதுவே முதல் முறையாகும்.

பஞ்சாபைப் பொறுத்தமட்டில் இதுவரை மொத்தம் 30 முறை முதல்வர்கள் பதவியேற்றுள்ளனர். அதில் 22 முறை காங்கிரஸ் அல்லது சிரோமணி அகாலிதளம் ஆகியவற்றைச் சேர்ந்த யாராவது ஒருவர்தான் முதல்வராகியுள்ளனர். இந்த இரண்டு கட்சிகளைத் தவிர அதிக அளவில் அங்கு ஆட்சி புரிந்திருப்பவர் யார் என்றால் குடியரசுத் தலைவர்தான். பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை மொத்தம் 8 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட தமிழகத்தைப் போலத்தான் பஞ்சாபும். தமிழகத்தில் எப்படி திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சியில் அமருகிறதோ அதேபோலத்தான் பஞ்சாபிலும் காங்கிரஸ் அல்லது அகாலிதளம் கையில் ஆட்சி மாறி மாறி போய்க் கொண்டிருக்கிறது. இருப்பினும் எந்தக் கட்சியும் இதுவரை ஆட்சியை தக்க வைத்ததில்லை. ஆனால், தற்போதைய தேர்தலில் இதை மாற்றி எழுதி புதிய வரலாறு படைத்துள்ளது அகாலிதளம்.

முதல் முறையாக தனது ஆட்சியை அக்கட்சி தக்க வைத்து அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

தற்போதைய முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், கடந்த தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி புரிந்தார். தற்போது இந்தக் கூட்டணிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது. அதேசமயம், வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. ஆனாலும் ஆட்சியை அகாலிதளம்-பாஜக கூட்டணி தக்க வைத்துள்ளது.

இந்தத் தேர்தலில் அகாலிதளம் கூட்டணிக்கு இடங்கள் குறைவாகக் கிடைக்க பாஜகவே காரணம். கூட்டணிக் கட்சியான பாஜக தான் அதிகளவில் தோல்வியைக் கண்டுள்ளது.

ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை, பல்வேறு குற்றச்சாட்டுக்கள், காங்கிரஸின் கடும் போட்டி ஆகியவற்றையும் மீறி அகாலிதளம் ஆட்சியை தக்க வைத்து புதிய வரலாறு படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

மேலும் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இன்னொரு சாதனையையும் படைத்துள்ளார். இதுவரை நான்கு முறை முதல்வராக இருந்துள்ள பாதல், தற்போது 5வது முறையும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். இதன் மூலம் பாதல் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அதிக காலம் முதல்வர் பதவியில் அமர்ந்த முதல் முதல்வர் இவர்தான். இதற்கு முன்பு அதிகபட்சமாக டாக்டர் கோபிசந்த் பார்கவா 3 முறை முதல்வராக இருந்துள்ளார். அதற்குப் பின்னர் அதிக காலம் முதல்வர் பதவியில் அமர்ந்த ஒரே தலைவர் பாதல் மட்டுமே.

எனவே பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் முடிவு நிச்சயம் பாதலுக்கும், அவரது அகாலிதளம் கட்சிக்கும் விசேஷமானது மட்டுமல்லாமல், பஞ்சாப் மாநில அரசியலிலும் புதிய அத்தியாயம் என்பதில் சந்தேகமில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...