Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 10, 2012

அடுத்த ஜனாதிபதி யார் என்ற விவாதம் விறுவிறுப்பு: பிரபலமானவரை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு?

புதுடில்லி : உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக, ஜனாதிபதி தேர்தல் குறித்த விஷயம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரும் ஜூலை மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், அரசியல் பின்னணி உடையவர், அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவாரா அல்லது அரசியல் பின்னணி அல்லாத பிரபலமான நபர், தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் ஒரு வழியாக முடிந்துவிட்டன. குறிப்பாக, உ.பி., மாநில தேர்தல் முடிவுகளை பெரிதும் எதிர்பார்த்த காங்கிரசுக்கு, பலத்த அடி கிடைத்துள்ளது. மற்றொரு தேசியக் கட்சியான பா.ஜ.,வுக்கும், சொல்லிக் கொள்ளும்படியாக வெற்றி கிடைக்கவில்லை. மாநில கட்சிகளின் கைதான், இந்த தேர்தலில் ஓங்கியிருந்தது.உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சிக்கு கிடைத்த வெற்றி, தேசியக் கட்சிகளான காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. விரைவில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தங்கள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமானால், மாநில கட்சிகளின் உதவி, இந்த இரண்டு கட்சிகளுக்கும் கட்டாயம் தேவை.

ஜனாதிபதி பதவி:இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பொறுத்தவரை, நாட்டின் மிக உயர்ந்த பதவி ஜனாதிபதி பதவி தான். முப்படைகளின் தலைவர் என்ற மிகப் பெரிய பொறுப்பும் ஜனாதிபதிக்கு உண்டு. அரசியல் காரணங்களால், நம் நாட்டில் சமீபகாலமாக ஜனாதிபதி பதவி என்பது, வெறும் ரப்பர் ஸ்டாம்ப் பதவியாக மாறி விட்டதாகவும் பரவலாக ஒரு பேச்சு உள்ளது. ஆனாலும், ஜனாதிபதி தேர்தலில், தங்கள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதில், அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

தேர்தல்:தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரதிபாவின் பதவிக் காலம், வரும் ஜூலையுடன் முடிவடைகிறது. எனவே, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூலையில் நடக்கும். இந்த தேர்தலின் மூலம், ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுபவர், அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு (2017 வரை) பதவியில் இருப்பார். வரும் 2014ல் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், இதில் வெற்றி பெற்று, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளவர்களுக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் மிகப் பெரிய பொறுப்பும், புதிய ஜனாதிபதிக்கு உண்டு.


அரசியல் பின்னணி:ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது, தங்களுக்கு வேண்டிய, அரசியல் பின்னணி உடைய நபர்களை தேர்வு செய்யும் வழக்கம், அரசியல் கட்சிகளுக்கு உண்டு. தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரதிபா, முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்.இதுதவிர, அரசியல் பின்னணி அல்லாத, ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கும் நபர்களும், ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்படும் வழக்கமும் உள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருமனதாக முடிவு செய்து, யாராவது ஒரு பிரபலத்தை தேர்வு செய்வது உண்டு. பிரதிபாவுக்கு முன் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், அரசியல் பின்னணி இல்லாதவர் தான்.

யாருக்கு வாய்ப்பு:இந்நிலையில், விரைவில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், அரசியல் பின்னணி அல்லாதவர் தேர்வு செய்யப்படுவாரா, அரசியல் பின்னணி உடையவர் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரிக்கு, அடுத்த ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. துணை ஜனாதிபதி பதவியை, சிவசேனாவைச் சேர்ந்த மனோகர் ஜோஷிக்கு விட்டுக் கொடுப்பதன் மூலம், ஹமீத் அன்சாரியை ஜனாதிபதியாக்க, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சம்மதிக்கலாம். திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்துல் கலாமை ஜனாதிபதியாக்குவதற்கு தே.ஜ., கூட்டணி எதிர்ப்பு தெரிவிக்காது என்பதால், அவரின் பெயரை, காங்கிரஸ் பரிந்துரைக்கலாம்.

மன்மோகன் சிங்?எதிர்க்கட்சிகளின் சம்மதம் இல்லாமல், காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக வேட்பாளரை அறிவிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. ராகுலை, பிரதமர் பதவியில் அமர்த்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம். அப்படி செயல்படுத்தப்பட்டால், தற்போது பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சபாநாயகர் மீரா குமார் ஆகியோரில் யாராவது ஒருவரை, ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

பொருத்தமானவர் யார்?அரசியல் பின்னணி அல்லாத பிரபலங்களை பொறுத்தவரை, இன்போசிஸ் நாராயணமூர்த்தி, விப்ரோ அஜீம் பிரேம்ஜி, தொழில் அதிபர் ரத்தன் டாடா, நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் அமர்த்தியா சென், வங்கதேச பெண் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவி, இந்திய மகளிர் சுய உதவிக் குழு நிறுவனர் எலா பட், மேற்கு வங்க முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்டவர்களில் யாராவது ஒருவரை நியமிக்கலாம் என்ற வாதம், கல்வியாளர்கள், அரசியல் விமர்சகர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...