Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 16, 2014

சிதம்பரம் (தனி) தொகுதி கண்ணோட்டம்!

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இது கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பரந்து விரிந்து காணப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில், அண்ணாமலை பல்கலைக்கழகம், லால்பேட்டை மதரசா,பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகள் ஆகியவை இந்த தொகுதியின் சிறப்பம்சங்களாகும்.

1957–ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது இத்தொகுதி இரட்டை உறுப்பினர்களை கொண்ட தொகுதியாக இருந்தது. 2004–ம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை இத்தொகுதியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில்(தனி), மங்களூர்(தனி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. 2008–ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது மங்களூர்(தற்போதைய திட்டக்குடி தொகுதி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகள் பிரிக்கப்பட்டு கடலூர் பாராளுமன்ற தொகுதியுடன் சேர்க்கப்பட்டது. அவற்றுக்கு பதிலாக அரியலூர் மாவட்டத்தைச்சேர்ந்த அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த குன்னம் தொகுதியும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.

இதனால் இப்போது சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த

சிதம்பரம்,
புவனகிரி,
காட்டுமன்னார்கோவில்(தனி)
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயங்கொண்டம்,
அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த குன்னம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன.

இதுவரை நடந்த 14 பாராளுமன்ற தேர்தல்களில் இத்தொகுதியில் காங்கிரஸ்தான் அதிக தடவை(5) வெற்றி பெற்றுள்ளது. அதுபோல் தி.மு.க. 4 தடவையும், பா.ம.க. 3 தடவையும் அ.தி.மு.க., விடுதலைசிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா ஒரு தடவையும் வென்றுள்ளன. இத்தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று வந்த பா.ம.க.வை கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் தோற்கடித்து தொகுதியை கைப்பற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் பொன்னுசாமி தோல்வி அடைந்தார். ஆனால் 2011–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்திருந்தும் இத்தொகுதிக்குட்பட்ட அரியலூர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில்(தனி) ஆகியவற்றை அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சிதம்பரம் தொகுதியையும்
கைப்பற்றியது. தி.மு.க.வுக்கு குன்னம் தொகுதியும், அதன் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க.வுக்கு ஜெயங்கொண்டமும் கிடைத்தன.

பின்தங்கிய சிதம்பரம் தொகுதியில் விவசாயமே பிரதானமாகும்.. இந்த தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் அதிகமாக உள்ளனர். அந்த அளவுக்கு சுகாதார வசதியில் பின்தங்கிய பகுதியாக உள்ளது. ஜெயங்கொண்டத்தில் என்.எல்.சி. அனல்மின்நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கு தொழிற்சாலைகள் எதுவும் இல்லை என்பது போன்ற குறைகள் உள்ளன. இந்த பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வளர்ச்சிப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாக்களித்ததால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

இத்தொகுதி எம்.பி.யான தொல்.திருமாவளவன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.19 கோடி ரூபாயில் 40 சதவீதத்தை சிமெண்டு ரோடுகளுக்கும், 20 சதவீதத்தை குடிநீர் வசதிக்கும், பள்ளிக்கட்டிடங்களுக்கு 10 முதல் 15 சதவீதமும், தார் சாலைகளுக்கு 5 சதவீதமும் ஒதுக்கியுள்ளார். இதுதவிர தனது செல்வாக்கால் தமிழகத்தைச்சேர்ந்த ராஜ்யசபை உறுப்பினர்களிடம் இருந்தும் நிதியைப்பெற்று கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளார். தேர்தலின்போது இவர் அளித்த வாக்குறுதிகளான சிதம்பரத்தில் அரசு மகளிர் கல்லூரி, ஜெயங்கொண்டத்தில் அனல்மின்நிலையம், மற்றும் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவருதல், புவனகிரியில் மலர்களில் இருந்து சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை, குடிசை வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றுதல் ஆகிய வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி உள்ளது.

இத்தொகுதியில் அதிக அளவில் ஆதிதிராவிடர்களும், அடுத்தபடியாக வன்னியர்களும் உள்ளனர். இதுதவிர உடையார்கள், பிள்ளைமார்கள், யாதவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தினரும் கணிசமாக உள்ளனர். நெல், பருத்தி, கரும்பு, மக்காச்சோளம் ஆகியவை இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. அரியலூரில் 6 சிமெண்டு ஆலைகளும், ஒரு சர்க்கரை ஆலையும், சேத்தியாத்தோப்பில் ஒரு சர்க்கரை ஆலையும் உள்ளன. இதுதவிர தொழிற்சாலைகள் வேறு எதுவும் கிடையாது.

வாக்காளர்கள் எண்ணிக்கை: இந்த பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 33 ஆயிரத்து 823 ஆகும். இதில் 6 லட்சத்து 71 ஆயிரத்து 434 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 62 ஆயிரத்து 376 பெண் வாக்காளர்களும், 13 திருநங்கைகளும் அடங்குவர்.
source-தினமணி 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...