Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 15, 2013

பொறியியல் - தெரிந்து கொள்ள வேண்டியவை....+2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டதால் அடுத்தக்கட்டத்திற்கு மாணவர்கள் தங்களை தற்போது தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். எந்த பாடப்பிரிவை தேர்வு செய்யலாம்? எந்தக் கல்லூரியை தேர்வு செய்யலாம்? எந்தக் கல்லூரியை தேர்வு செய்தால் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்? உள்ளிட்ட எண்ணற்ற சந்தேகங்கள் மாணவர்கள் மனதில் எழாமல் இல்லை. இன்ஜினியரிங், MBBS, கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் எது தனக்கு பொருத்தமானது என்பதை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

கலை அறிவியல் படிப்புகள் சிறந்த படிப்புகள் இல்லை என்று கூறி விட முடியாது . அதேபோல் பொறியியல் மட்டும் தான் சரியான தேர்வு என்றும் கூறி விட முடியாது. மாணவருக்கு எதில் தகுதி இருக்கிறதோ அதை சரியாக அடையாளம் கண்டு, அத்துறையில் தடம் பதிக்க வேண்டும். பொறியியல் மட்டும் தான் கல்வி என்பது அல்ல. எந்த படிப்பு படித்தாலும் அதிலிருந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பெற்றோர்களைப் பொறுத்தவரை எப்படியாவது கஷ்டப்பட்டு தனது மகனையோ மகளையோ இன்ஜினியர் ஆக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, நான்கு ஆண்டுகள் படிப்பை தொடர்வதில் சிக்கல்கள் இருக்குமா என்பதைப் பற்றி ஒருபோதும் அவர்கள் யோசிப்பதில்லை. தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புக்கு வங்கிக் கடன் கிடைக்குமா, அப்படிக் கிடைத்தால் எவ்வளவு சதவிகிதம் கிடைக்கும் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. மீதம் எவ்வளவு கட்ட வேண்டியிருக்கும். அதை நம் குடும்பத்தின் தற்போதைய சூழ்நிலையில் கட்ட முடியுமா? இதையெல்லாம் பெற்றோர்கள் முதலில் யோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யும் முன் இவற்றையெல்லாம் திட்டமிட வேண்டும். பள்ளிப் படிப்பு வரை பொதுவாக பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதுவே கல்லூரியில் சேர்ந்த பிறகு அது படிப்படியாக குறைகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை அவர்களின் வளர்ச்சியில் அக்கறை கட்டாயம் செலுத்த வேண்டும்.. இன்றைய மாணவர்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிக்கும் முதன்மையான படிப்புகளில் ஒன்றாக, பொறியியல் துறை கருதப்படுகிறது. இறைவன் படித்த இந்த உலகை, இறைவன் கொடுத்த கல்வியாற்றலின் மூலம் கட்டமைத்தவர்கள் பொறியாளர்களே என்று சொல்லும் அளவுக்கு இன்றைய பொறியாளர்கள் செய்யும் பணிகள் ஏராளம். எனவே இந்த துறையில் நாமும் தடம் பதிக்க வேண்டும்.

பொறியியல் தொடர்பாக எழும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவே இந்த பதிவு கட் ஆஃப் மதிப்பெண்கள்! +2 மதிப்பெண்கள் அடிப்படையில் தான் ஒருவரது ரேங்க் நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், அதிக மதிப்பெண் பெற்றவர் களுக்கு கவுன்சிலிங்கின் முதல் நாளில் இருந்து அழைப்பு இருக்கும். +2 தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைத் தலா 200 மதிப் பெண்களுக்கு எழுதி இருப்பீர்கள். இதில் ஒரு மாணவர் கணிதத்தில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 100-க்குக் கணக்கிடுவார்கள். அதேபோல இயற்பியலில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 50-க்குக் கணக்கிடுவார்கள். வேதியியலுக்கும் இதே நிலை. ஆக, கணிதம் 100, இயற்பியல் மற்றும் வேதியியல் தலா 50 என மொத்தம் 200-க்குக் கணக்கிடப்படும் மதிப்பெண்கள்தான் அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள்!

 ரேண்டம் நம்பர் என்றால் என்ன? ஒரே கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரேங்க் நிர்ணயிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வு காணத்தான் கவுன்சிலிங் விண்ணப்பத்தில் ‘ரேண்டம் நம்பர்’ (random number) என்ற ஒன்றைக் குறிப்பிட்டு இருப்பார்கள். கிட்டத் தட்ட ஒரு டோக்கன் போலத்தான் இந்த ரேண்டம் எண். இரண்டு மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண்களில் 200-க்கு 190 எடுத்திருக்கும் போது, அவர்கள் இருவருக்கும் ஒரே ரேங்க் தர முடியாது. அப்போது அவர்களில் யார் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்களோ, அவருக்கு அதிகப்பட்ச ரேங்க் வழங்குவார்கள். இருவரும் கணிதத்தில் நூற்றுக்கு நூறோ அல்லது அதிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருந்தால், இயற்பியலில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாரோ அவருக்கு முன்னுரிமை அளிப்பார்கள். அதிலும் ஒரே மதிப்பெண் சிக்கல் இருந்தால், வேதியியல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த மூன்று பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அடுத்து அவர்களின் பிறந்த தேதியைக் கணக்கில்கொள்வார்கள். அதில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை. இருவரும் ஒரே தேதி, ஒரே வருடத்தில் பிறந்திருந்தால், அப்போதுதான் இந்த ரேண்டம் நம்பருக்கு வேலை வரும். இருவருக்கும் வழங்கப்பட்ட ‘ரேண்டம் நம்பரில்’ எவருடையது குறைந்த மதிப்பு உள்ளதோ, அவருக்கு ரேங்கில் முன்னுரிமை தரப்படும். தவிர்க்கவே முடியாத சூழலில்தான்
இந்த ரேண்டம் நம்பர் பயன்பாட்டுக்கு வரும். இதனால், நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

 கவனத்தில் கொள்ள வேண்டியவை: கவுன்சிலிங் வருவோர், 5 ஆயிரம் ரூபாய்க்கான அட்வான்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும். மாணவர் தொடர்பான விபரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். விளக்க உரை நடக்கும் ஹாலுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். அங்கு மாணவர் வந்ததற்கான வருகை பதிவு செய்யப்படும். பின், கவுன்சிலிங் ஹால் செல்வதற்காக விளக்கவுரை ஹாலில் அமர வேண்டும். அங்கு கவுன்சிலிங் நடைமுறைகள் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவு கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதை விளக்கவுரை ஹாலில் தெரிந்து கொள்ளலாம். பின்னர், கவுன்சிலிங் அறைக்கு மாணவர்கள் அழைக்கப்படுவர். அங்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ்களில் ஏதாவது விடுபட்டு போயிருந்தால், வேறு சிக்கல்கள் இருந்தால் தங்களைப் பற்றி முழுத் தகவல்களை அப்டேஷன் பிரிவில் பதிவு செய்யலாம். பின் கவுன்சிலிங் நடைபெறும். பகுதிக்கு அழைக்கப்படுவர். இங்கு கல்லூரியை தேர்வு செய்யும் போது, ஒரே மாதிரியான பெயர்களில் பல கல்லூரிகளில் இருக்கும். கவுன்சிலிங்கில் ஒரு முறை கல்லூரியையும், பாடப் பிரிவையும் தேர்வு செய்துவிட்டால், அதுவே இறுதியானது. மாற்ற இயலாது.

 மறுகூட்டலுக்குப் பிறகு புதிய மதிப்பெண்கள், புதிய ரேங்க் பெற்றிருந்தால், பழைய மதிப்பெண்ணுக்குக் கொடுத்த தேதி மாறி இருந்தாலும் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளலாம்! பிடித்த பாடத்தை, பிடித்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பல சமயங்களில் பிடித்த பாடம் கிடைக்கும். ஆனால், விரும்பிய கல்லூரியாக இருக்காது. இல்லையென்றால், விரும்பிய கல்லூரி கிடைக்கும். ஆனால், பிடித்த பாடத்தில் இடம் கிடைக்காது. இதுபோன்ற சமயத்தில், எது நமக்குக் கிடைக்கிறதோ அதை நாம் விரும்பிப் படிக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்தால், 40 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே, என்ன பாடம், எந்தக் கல்லூரியில் கிடைத்தாலும், அதை விரும்பிப் படியுங்கள். மாணவர்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம், சிறந்த முறையில் அடிப்படை வசதிகள்கொண்ட கல்லூரியாக இருக்கிறதா என்பதுதான்.

 பேராசிரியர்களின் படிப்பு, அனுபவம் ஆகியவையும் ஒரு மாணவனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இவையனைத்தையும் கவனத்தில் கொண்டு நீங்கள் கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும்.. கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் சேர்ந்த பிறகு, அங்கு போதிய வசதிகள், தரமான கல்வி அனுபவங்கள் கிடைக்கவில்லை என்றால் முதல் வருடம் அந்தக் கல்லூரியில் படித்துவிட்டு மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு இரண்டாவது வருடப் படிப்பை வேறு ஒரு கல்லூரியில் தொடரலாம்.மேலும் உங்களின் பொறியியல் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் TNTJ மாணவர் அணியை தொடர்பு கொள்ளவும்

 - அஜ்மல்

source:http://www.tntjsw.net

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...