அக்டோபர் 11, 2010
பாஸ்போர்டடைத் தொலைத்த சென்னை பெண் - இந்திய தூதரகத்தின் அலட்சியத்தால் மஸ்கட் விமான நிலையத்தில் மரணம்
மஸ்கட்,அக்.11:பாஸ்போர்ட்டை பறி கொடுத்து விட்டு 5 நாட்களாக பரிதவித்து வந்த சென்னையைச் சேர்ந்த பணிப்பெண், மஸ்கட் விமான நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது பெயர் பீபி லுமடா. 40 வயதான இவர் மஸ்கட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். மஸ்கட்டிலிருந்து சென்னை செல்வதற்காக இவர் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். அதன்படி மஸ்கட்டிலிருந்து விமானம் சென்னை கிளம்பியது. வழியில் தோஹாவில் அது இறங்கியது.
தோஹாவில் இறங்கி இணைப்பு விமானத்தைப் பிடிப்பதற்காக பீபி சென்றபோது அவரது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டது. இதனால் அவரால் தோஹாவிலிருந்து விமானத்தைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அவர் மீண்டும் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
ஆனால் அவர் ஏற்கனவே ஓமனில் குடியிருப்பதற்கான விசாவை ரத்து செய்திருந்ததால் மஸ்கட் விமான நிலையத்தை விட்டு வெளியேற அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதனால் பீபியால் எங்குமே போக முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரது நிலையை விளக்கி இந்தியத் தூதரகத்திற்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். ஆனால் இந்தியத் தூதரகத்திலிருந்து ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. இதனால் ஐந்து நாட்களாக அந்த அப்பாவிப் பெண் விமான நிலையத்திலேயே முடக்கப்பட்டிருந்தார்.
அவரது நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தினர் அவருக்கு சாப்பாடு, தண்ணீர், படுக்கை உள்ளிட்டவற்றை கொடுத்து உதவியுள்ளனர். மேலும், இந்தியத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்து உடனடியாக அவருக்கு உதவுமாறு கோரியுள்ளனர். ஆனால் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாத இந்திய தூதரக அதிகாரிகள் யாருமே வந்து பார்க்கவில்லை.
இந்த நிலையில் தற்போது அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என விமான நிலைய மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் பலமுறை இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்தும் ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. விமான நிலையப் போலீஸாரும் பலமுறை இந்திய தூதரகத்தை அழைத்தும் கூட யாருமே வரவில்லை. ஏன் இந்தியத் தூதரகம் இப்படி நடந்து கொண்டது என்று தெரியவில்லை என்றனர்.
எல்லாம் நடந்து முடிந்த பின்னர் பீபியின் மரணம் குறித்து இந்தியத் தூதரகம் வருத்தமும், கவலையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியத் தூதர் அனில் வாத்வா கூறுகையில், இது மிகவும் சோகமானது. எக்ஸ்டி பாஸ் தருவதற்குள் அவர் உயிரிழந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிர்வாக தாமதங்களே இந்த மரணத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள பீபியின் உறவினர்களுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது.
தனது நாட்டுக் குடிமகளைக் காக்கக் கூட முன்வராத இந்திய தூதரகத்தின் இந்த இரக்கமற்ற செயல் சக இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...