Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 14, 2010

கடலூர் மாவட்டத்தில் செங்கல், ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை கடும் உயர்வு நடுத்தர மக்கள் கடும் அவதி!!!


மாவட்டத்தில் செங்கல், ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டதால் நடுத்தர மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இரு மடங்கு உயர்வு

கடலூர் மாவட்டத்தில் வழக்கமாக மழைகாலங்களில் செங்கல் உற்பத்தி குறைவாக இருப்பதால் விலை உயருவது வழக்கம். அதுவும் ஒரு லோடுக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை உயரும். ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் செங்கல் விலை இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது நடுத்தர மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு லோடு செங்கல் அதாவது 4 ஆயிரம் செங்கற்கள் கொண்ட ஒரு லோடு 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் ஆக விற்றது, அதாவது ஒரு கல் 2 ரூபாய் 50 காசுக்கு விற்றது, ஆனால் இப்போது ஒரு லோடு செங்கல் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது, அதாவது ஒரு கல் விலை 5 ரூபாய் ஆக உயர்ந்து விட்டது.

தட்டுப்பாடு:
இதேபோல் ஒரு லோடு ஜல்லி கல்(அதாவது 3 ïனிட்) 6 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகி எகிறி விட்டது. மணல் விலை லோடு(3 ïனிட்) 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 4 ஆயிரம் ரூபாய் ஆக அதிகரித்து விட்டது.

இரும்பு கம்பி விலையும் கிலோ 30 ரூபாயில் இருந்து 37 ரூபாய் ஆக கூடி விட்டது. சிமெண்டு விலையோ இறக்கை கட்டி பறப்பது போல், ஒரு மூட்டை 190 ரூபாயில் இருந்து 280 ரூபாய் ஆக உயர பறந்து விட்டது. அதுவும் அல்லாமல் செங்கல், மணல், ஜல்லிக்கற்கள், சிமெண்டு ஆகிய கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடும் காணப்படுகிறது.

விண்ணை முட்டியது:
இதனால் வீடு கட்டும் செலவு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டதால் கட்டுமான பணிகள் அனைத்தும் தடைபட்டு நிற்கின்றன. இதனால் ஒரு வீடு கட்ட 10 லட்சம் ரூபாய் ஆகும் என்று எஸ்டிமேட் போட்டு இருந்தால், இப்போது 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

இதேபோல் கட்டுமான பணி காண்டிராக்ட்காரர்கள் புதிதாக கட்டுமான பணிகள் எடுப்பதை நிறுத்தி விட்டனர்.
இது பற்றி கட்டுமான பணி ஒப்பந்தக்காரர் ஒருவர் கூறியதாவது:-

புதிய பணிகள் எடுக்கவில்லை:
பொதுவாக மழைகாலத்தில் செங்கல் உற்பத்தி குறைவாக இருக்கும் என்பதால் ஓரளவுக்கு விலை அதிகரிக்கும். இதை கணக்கில் எடுத்து கட்டுமான வேலைகளையெடுத்து செய்து வந்தோம். ஆனால் ஒரு லோடு செங்கல் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து விட்டதால் புதிதாக கட்டுமான பணிகள் எடுப்பதை நிறுத்தி விட்டோம்.

ஏனெனில் செங்கல் விலை உயர்ந்து இருப்பதால், ஏராளமானவர்கள் செங்கல் உற்பத்தியில் ஈடுபடுவார்கள் என்பதால் வருகிற மார்ச் மாதம் விலைகள் குறைய வாய்ப்பு இருக்கிறது என்பதால் புதிய பணிகளை எடுக்க வில்லை.

தடுக்க வேண்டும்:
கட்டுமான பொருட்கள் விலைகள் உயர்ந்ததற்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டம் தான் காரணம். ஏனெனில் ஒரே சமயத்தில் வீடுகள் கட்டும் போது கட்டுமான பொருட்கள் விலை உயர்வதும், தட்டுப்பாடு ஏற்படுவதும் இயற்கை தானே! ஆனால் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் மளிகை சாமான்கள் விலை உயர்ந்த போது, ரேசனில் அந்த சாமான்களை கொடுத்து விலையை கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுத்தது போல கட்டுமான பொருட்களின் விலையையும் கட்டுப்படுத்த அரசால் முடியும்.

ஆனால் கட்டுமான பொருட்கள் விலை உயர்வினால் கலைஞர் வீடு திட்ட பயனாளிகள் பாதிக்கப்படக்கூடாது, என்பதில் தான் அரசு அக்கறை செலுத்துகிறதே தவிர நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொள்ள அரசு தவறிவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...