Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 05, 2010

சோதனை குழாய் குழந்தை உருவாக்கிய பிரிட்டன் டாக்டருக்கு நோபல் பரிசு


ஸ்டாக்ஹோம் : சோதனை குழாய் குழந்தை தொடர்பான ஆராய்ச்சியில் சாதனை படைத்த பிரிட்டன் டாக்டர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு, இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பேறில்லாத தம்பதியருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் சோதனை குழாய் குழந்தை. 20 ஆண்டு கால தீவிர ஆராய்ச்சியில் உருவானது தான் சோதனை குழாய் குழந்தை திட்டம். கடந்த 1978ம் ஆண்டு முதன் முதலாக, சினைப்பைக்கு வெளியே கரு முட்டையை விந்தணுவுடன் சேர்த்து, அதனால் உருவாகும் சினை முட்டையை மீண்டும் கருப்பையில் வைத்து குழந்தை பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் பிரிட்டன் டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ்.

இவரது கண்டுபிடிப்பின் பலனாக இன்று உலகம் முழுவதும் 40 லட்சம் பேர், செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பேற்றை பெற்றுள்ளனர். இன்று இந்த முறைக்கு அமோக வரவேற்பு இருந்தாலும், ஆரம்ப கட்டத்தில் இதற்கு தேவாலயங்களும், பழமைவாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக ராபர்டும், இவரது வழிகாட்டியான பேட்ரிக் ஸ்டெப்டோவும் தங்கள் ஆராய்ச்சித் திட்டத்துக்கு நிதி கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டனர். பேட்ரிக் ஸ்டெப்டோ 1988ல் இறந்து விட்டார்.

மனித சமுதாயத்துக்கு பலனுள்ள ஆராய்ச்சியை மேற்கொண்ட ராபர்ட் எட்வர்ட்சுக்கு, இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு இப்பரிசு மூலம் 7 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த சோதனை குழாய் குழந்தை என்பது, இன்று 30 வயது முதல் 39 வயதுடைய கருவுறாத பெண்களுக்கு வரப்பிரசாதம். அதையும் விட முதலாவது சோதனை குழாய் குழந்தைக்கு வாரிசு, அதற்குப் பின் இம்முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு வாரிசு என்பது தொடர்கிறது. அதிலும் இச்சோதனை முறையில் பாதிப்பு மற்றும் பின்விளைவுகள் இல்லாததால், இதை எல்லாரும் இன்று போற்றிப் புகழும் நடைமுறையாக இருக்கிறது.

ஆங்கிலத்தில், "இன் விட்ரோ பெர்டிலைசேஷன்' என்றும் சுருக்கமாக, "ஐ.வி.எப்' என்று அழைக்கப்படும் இந்த நடைமுறையில் உள்ள அம்சங்களை, ஏதாவது ஒரு விஷயத்தில் ஆறு தம்பதிகளில் ஒருவர் இன்று பின்பற்றுகிறார் என்பது மருத்துவ உலகில் கூறப்படும் தகவல். ஆண்டுதோறும் முதலில் மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப்படும், அதற்குப் பின், மற்ற துறைகளில் சிறப்பு பெற்றவர்களுக்கான பரிசுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...