Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 31, 2010

கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரம்


கடந்த 10 நாள்களாக அவ்வப்போது பரவலாக பெய்துவரும் மழை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு, 2.41 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்படுகிறது. இதில் 1.25 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளாகும். இந்த ஆண்டு பி.பி.டி., பொன்னி, ஏடிடி 43 சம்பா நெல் ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக டெல்டா பாசனப் பகுதிகளில் 10 நாள்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் நாற்றங்கால் பணிகளும் நடவுப் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளன.

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கும் சென்னை குடிநீருக்கும், கொள்ளிடம் கீழணையில் இருந்து 1,207 கன அடி வீதம் வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. வீராணம் ஏரி பாசனத்துக்காக வடவாறில் 862 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ÷வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரதான ஏரிகளில் நீர்மட்டம், வீராணம் 43.6 அடி (மொத்த உயரம் 47.5 அடி), பெருமாள் 4.8 அடி (மொத்த உயரம் 6.5 அடி), வாலாஜா 5 அடி (மொத்த உயரம் 5.5 அடி) என இருந்தது. கொள்ளிடம் கீழணையில் நீர்மட்டம் 7.8 அடி (மொத்த உயரம் 9 அடி).

சம்பா சாகுபடி குறித்து வேளாண் துறை அளிக்கும் தகவல்:

மாவட்டத்தில் 97 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை 78,421 ஹெக்டேரில் நடவு முடிந்துள்ளது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 44,988 ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிந்துள்ளன.

பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

""வீராணம் ஏரியின் கடைமடைப் பகுதிகளில் நாற்றங்கால் பணிகள் முடிந்துள்ளன. நடவுப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன. டெல்டா பாசனப் பகுதிகளில், சில நாள்களாக பெய்து வரும் மழை, கடைமடைப் பகுதிகளில் நடவுப் பணிகளுக்கு ஏற்றதாக உள்ளது. சம்பா நடவுப் பணிகள் நவம்பர் 20 வாக்கில், முடிவடையும்'' என்றார்.

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார் கூறுகையில்,

""வீராணம் ஏரி பாசனப் பகுதிகளில் (50 ஆயிரம் ஏக்கர்) 20 சதவீதமும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப் பகுதிகளில் (44 ஆயிரம் ஏக்கர்) 5 சதவீதமும் மோட்டார் பம்ப்செட் வசதி உள்ளது. இப்பகுதிகளில் காவிரி நீரை எதிர்பார்க்காமல் முன்னரே சம்பா சாகுபடிப் பணிகள் தொடங்கப்பட்டன. அப்பகுதிகளில் நடவுப் பணிகள் முடிவுற்றுள்ளன. தற்போது பெய்துள்ள மழை காரணமாக கடைமடைப் பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் வரத் தொடங்கி இருக்கிறது. எனவே நாற்றங்கால் பணிகளும், நடவுப் பணிகளும் துரிதம் அடைந்துள்ளன'' என்றார்.

டெல்டா பாசனப் பகுதிகள் அல்லாத ஆழ்குழாய்ப் பாசனத்தை நம்பி இருக்கும் மற்ற பகுதிகளில் தற்போது, நடவுப் பணிகள் முடிந்துவிட்டன. நட்டு 15 நாள்கள் முடிவடைந்த வயல்களில் முதல் களையெடுக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைநெல், ரசாயன உரங்கள், நுண்ணுயிர் உரங்கள் முறையாக கையிருப்பில் உள்ளதால், சாகுபடிப் பணிகள் சிரமமின்றி நடைபெற்று வருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

தண்ணீர் முறையாகக் கிடைத்து, இயற்கைச் சீற்றம் மற்றும் பூச்சி, பூஞ்சாணம் தாக்குதல்கள் இன்றி இருந்தால் கடலூர் மாவட்டத்தில், சம்பா பருவத்து நெல் உற்பத்தி 45 லட்சம் குவிண்டாலுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...