அக்டோபர் 25, 2010
ஈராக் போரில் அமெரிக்கா நடத்திய படுகொலை:அதிர்ச்சி தரும் ,லீக் பற்றி விசாரிக்க ஐ.நா., கோரிக்கை
ஈராக் போர் தொடர்பாக, "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்ட ரகசிய ஆவணங்களின் அடிப்படையில், ஈராக்கின் பொதுமக்களைக் கொன்றதில் அமெரிக்காவின் ராணுவத்திற்கு பங்கு இருக்கிறதா என்பது குறித்து, அமெரிக்க அரசு விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா., கூறியுள்ளது.ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க போர் குறித்து, 92 ஆயிரம் ஆவணங்களை வெளியிட்ட, "விக்கிலீக்ஸ்' இணையதளம், சமீபத்தில், ஈராக் போர் தொடர்பான நான்கு லட்சம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியது.
"இதுபோன்று ரகசிய ஆவணங்களை வெளியிடுவது கண்டனத்திற்குரியது' என, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், கண்டனம் தெரிவித்தது. எனினும், இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஈராக்கில், 2004 முதல் 2009 வரை அமெரிக்கா தலைமையில், "நேட்டோ' படைகள் போரில் ஈடுபட்டன. அமெரிக்கப் படையுடன் இணைந்து, பிரிட்டன் ராணுவமும் பங்கேற்றது. அதில் மொத்தம், ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 32 பேர் கொல்லப்பட்டனர்.
இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், அதாவது, 66 ஆயிரத்து 81 பேர் பொதுமக்கள்; 23 ஆயிரத்து 984 பேர் ஈராக்கிற்குள் ஊடுருவ முயன்றவர்கள்; 15 ஆயிரத்து 196 பேர், ஈராக் போலீசார், மூன்றாயிரத்து 771 பேர், "நேட்டோ' ராணுவத்தினர். இதில், ஐ.நா., விதித்துள்ள, சித்திரவதைக்கு எதிரான நடைமுறைகளை மீறி, கூட்டுப் படையினர், ஈராக் பொதுமக்களை, தொந்தரவு, சித்திரவதைக்கு ஆளாக்கி, கற்பழித்துக் கொலை செய்த கொடூரங்கள், "விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது.மேலும், ஈராக்கில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம் இப்படுகொலையில் ஈரான் அரசு ஈடுபட்டுள்ளதும், இதை ஈராக் அரசு வேடிக்கை பார்த்துள்ளதும் இப்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஐ.நா.,வின் சித்திரவதைப் புலனாய்வுக் குழுத் தலைவர் மேன்ப்ரட் நொவாக் கூறுகையில், "ஐ.நா., விதித்துள்ள மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து ஒபாமா நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஈராக் பொதுமக்கள் கொல்லப்பட்டதில் பிரிட்டன் ராணுவத்தினரும் ஈடுபட்டது குறித்து பொது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாக மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் செய்ததாக இருக்கும்' என கூறியுள்ளார்.இந்நிலையில், "விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ரகசிய ஆவணங்களால், ஈராக் பிரதமருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஈராக்கின் தற்போதைய பிரதமர் நூரி அல் மாலிகி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்த ஊடகப் பிரசாரத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கிறது. இந்த ஆவணங்களை ஈராக்கின் தேசியத் தலைவர்களுக்கு குறிப்பாக பிரதமருக்கு எதிராக பயன்படுத்தலாம் என, ஊடகங்கள் நினைக்கின்றன. ஈராக் ராணுவத்துக்குப் பிரதமர் தான் தலைவர் என்றாலும், நீதித்துறையின் உத்தரவுப் படி தான் ராணுவத்தினர் செயல்படுவர்' என, கூறப்பட்டுள்ளது.
ஆனால், முன்பு ஈராக்கில் மோதல் நடந்தபோது, அதிபர் புஷ் தலைமையிலான நிர்வாகம் அங்கு நடக்கும் சண்டையில் இறப்பவர்கள் குறித்த கணக்கு முழுவிவரம் கிடையாது என்று கூறியது. தற்போது இந்த, "விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ரகசிய ஆவணங்களால், அவர் கூறியது பொய் என்று ஆகியிருக்கிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...