அக்டோபர் 19, 2010
போலிஸ் நிலையங்களில் ஆயுத பூஜை
சேலம் அருகே மேட்டூர் நகரில் போலிஸ் நிலையம் ஒன்றில் போலிசார் ஆயுத பூஜையை ஒட்டி, தங்களது போலிஸ் நிலையத்தில் இருக்கும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுக்கு பூஜை செய்ய முனைந்தபோது, அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த பெரியார் திராவிட கழகத்தினர் போலிஸ் நிலையத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்ததாகச் செய்திகள் வந்தன.
இந்த ஆயுத பூஜை நடைமுறை குறித்து கருத்து தெரிவித்த பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலர் விடுதலை ராசேந்திரன், ஒரு மதச்சார்பற்ற நாட்டில், அரசு அலுவலகங்களில் இது போன்ற மத நடைமுறைகள் மற்றும் பண்டிகைகளைக் கொண்டாடக்கூடாதென்ற அரசாணை இருந்தும் இதை மீறி போலிசார் இதைச் செய்வதைக் கண்டிக்கும் விதமாக தங்களது இயக்கத்தினர் போலிஸ் நிலையத்துக்கு சென்று அந்த பூஜை செய்யப்படுவதை மொபைல் தொலைபேசி மூலம் புகைப்படம் எடுக்க முயன்றபோது, போலிசார் அவர்களது மொபைல் தொலைபேசிகளைப் பிடுங்கி உடைத்துவிட்டதாகக் கூறினார்.
தாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்ட ராசேந்திரன், போலிசார் ஒரு குறிப்பிட்ட மதப்பண்டிகையை நடத்துவது என்பது சரியல்ல, மதத்தைப் பின்பற்றாதவர்களுக்கும், பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இது கவலையை அளிக்கும் என்றார்.
இது குறித்து தமிழோசைக்கு கருத்து வெளியிட்ட தமிழகக் காவல் துறைத் தலைமை இயக்குநர் , லெத்திகா சரண், 'எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் ஒரு மதச்சார்பற்ற படைதான். இந்த விஷயத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த ஒரு விஷயமாக நாங்கள் பார்க்கவில்லை' என்று கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...