அக்டோபர் 24, 2010
விவசாய பணிக்கு ஆட்கள் கிடைப்பது...குதிரைக்கொம்பு வட மாநில தொழிலாளர்களால் ஆறுதல்
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், பயனாளிகளை சேர்க்கும் பணி தீவிரமாகியுள்ளதால், கிராமங்களில் விவசாய கூலி தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகியுள்ளது. இதனால், வட மாநிலங்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பணி மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும், மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை துரிதப்படுத்தும் வகையில், கிராமப்புறங்களில் மக்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தில், தினசரி கூலியாக 100 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு கூலி உயர்ந்துள்ளதால், கிராமப்புறங்களில் விவசாய தொழிலுக்கான கூலிகள் உயர்ந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில், பயனாளிகள் அதிகளவில் சேர்க்கும் முயற்சி நடக்கிறது. ஏற்கனவே, 100 நாட்கள் வேலை செய்த பயனாளிகளை கொண்டு மகளிர் சுயஉதவிக்குழு அமைக்கும் பணி நடக்கிறது. கிராமப்புறங்களிலுள்ள மக்களிடம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சேரும் ஆர்வம் அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி தாலுகாவிலுள்ள ஊராட்சிகளில், மக்கள் அதிகமுள்ள ஊராட்சிகளில், 200 பயனாளிகள் வரையும், குறைந்த அளவு மக்கள் தொகையுள்ள ஊராட்சிகளில் 150 பயனாளிகளையும் சேர்க்கும் பணி நடைபெறுகிறது. பெரும்பாலான ஊராட்சிகளில் சராசரியாக 130 பயனாளிகள் வரை பணியாற்றுகின்றனர்.
இதனால், விவசாய கூலி தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைகொம்பாகியுள்ளது. கேரள எல்லையோர கிராமங்களில், கூலியாட்கள் பற்றாக்குறையாக உள்ளதால், கேரளப்பகுதிகளிலிருந்தும், வட மாநிலங்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பணிகள் மேற்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. வெளி மாநில ஆட்களை அழைத்து வரும் போது, தற்போது வழங்கும் கூலியை விட கூடுதலாக சம்பளம் வழங்க வேண்டியுள்ளதால் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகள் துரிதப்படுத்த பயனாளிகள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஒன்றியத்திலும் சராசரியாக 500 முதல் 900 பயனாளிகள் வரை சேர்ந்துள்ளனர். மக்கள் தொகை அதிகமுள்ள பெரிய அளவிலான ஊராட்சிகளில் 110 பயனாளிகளும், குறைந்த மக்கள் சிறிய ஊராட்சிகளில், 90 பயனாளிகள் வரையும் சேர்ந்துள்ளனர்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கூறியதாவது: உள்ளூரில், விவசாய கூலி தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகியுள்ளது. கிடைக்கும் ஆட்களை கொண்டு பணி மேற்கொண்டாலும், கூலி அதிகரித்துள்ளதால் சிரமம் ஏற்படுகிறது. வட மாநிலங்களிலிருந்தும், கேரள மாநிலங்களிலிருந்தும் குடும்பம், குடும்பமாக ஆட்களை அழைத்து வந்து பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், கூடுதல் செலவு ஏற்படுகிறது. விளைச்சலுக்கு ஏற்ப விலை கிடைக்காத நிலையில், கிடைக்கும் வருவாயில், பெருந்தொகையை சம்பளமாக கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...