அக்டோபர் 30, 2010
இந்தோனேஷிய சுனாமி 2 நாளாக மரத்தில் தொங்கி தவித்த 1 1/2 வயது குழந்தை உயிருடன் மீட்பு
ஜகர்தா, இந்தோனேசியாவில் உள்ள மெந்தாவி தீவில் கடந்த திங்கட்கிழமை பூகம்பம் ஏற்பட்டு சுனாமி தாக்கியது. இதில் அந்த தீவில் உள்ள ஏராளமான கிராமங்கள் அழிந்தன. ராட்சத அலைகளில் சிக்கி ஏராளமானோர் உயிர் இழந்தனர். சாவு எண்ணிக்கை 394 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 300 பேரை காணவில்லை. அவர்களில் 3-ல் 2 பங்கினர் பலியாகி இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
எனவே சாவு எண்ணிக்கை 600-ஐ தாண்டும் என்று எதிர்பார்ப்பதாக மீட்பு படை அதிகாரி ஏத்எட்வர்டு கூறினார். சுனாமி பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இப்போதும் சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். 1 1/2 வயது குழந்தை ஒன்று சுனாமி அலையால் தூக்கி வீசப்பட்டு 2 நாளாக மரத்தின் உச்சியில் கிடந்தது. உயிருடன் இருந்த அந்த குழந்தை மரக்கிளைகளை பிடித்தபடி அழுது கொண்டிருந்தது. அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். அதேபோல 10 வயது சிறுவன் ஒருவனும் மரக்கிளைகளை பிடித்தபடி கிடந்தான். அவனையும் மீட்டனர்.
ஆனால் அவனது தாய் -தந்தை இருவருமே சுனாமிக்கு பலியாகி விட்டனர். சுனாமியில் சிக்கியவர்கள் சிலரின் உடல்கள் கால் வேறு, கை வேறாக சிதறின. அவை ஆங்காங்கே மரத்தில் தொங்கியபடி இருந்தது. பல உடல்கள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. அதை தோண்டி எடுத்து வருகின்றனர். சுனாமியில் வடக்கு பெகாய் என்ற இடம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த ஊரை சேர்ந்த சந்திரா என்ற பெண் கூறும்போது, பூகம்பம் ஏற்பட்டதும் நாங்கள் அச்சத்துடன் இருந்தோம். அடுத்த 10 நிமிடத்துக்கு பிறகு வீட்டுக்கு வெளியே பெரிய அளவில் வெடிச்சத்தம் போல கேட்டது. அடுத்த வினாடிகளில் சுனாமி தாக்கியது என்றார்.
மீட்கப்பட்ட பிணங்கள் கூட்டம், கூட்டமாக ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. சதேகங் என்ற இடத்தில் 98 பேர் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற கப்பல் மெந்தாவியை சென்றடைந்துள்ளது. அங்கிருந்து நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சுனாமியில் 468 வீடுகள் முற்றிலும் இடிந்துவிட்டன. அவர்களுக்கு தற்காலிக கூடாரம் அமைத்து கொடுத்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...