Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 22, 2012

அஜ்மல் கஸாபுக்கு தூக்கு: காங்கிரஸ் அரசின் அரசியல் ஆதாயம்!

மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட அஜ்மல் கஸாபை அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் காங். தலைமையிலான ஐ.மு அரசின் அரசியல் ஆதாயங்கள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நவம்பர்26-ஆம் தேதி மும்பை தாக்குதல் நிகழ்ந்து 4 ஆண்டுகள் நிறைவுறும் வேளைக்கு முன்பாகவே இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கவிருக்கும் வேளையில், கஸாபிற்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் காங். தலைமையிலான ஐ.மு அரசு தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க எழுப்பவிருந்தது.

 மேலும் எஃப்.டி.ஐ(சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு) உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் கசாபை அவசரமாக தூக்கிலிட காங். அரசு திட்டமிட்டிருக்கலாம். பொருளாதா சீர்திருத்தங்களின் பெயரால் சாதாரண மக்களிடையே நம்பிக்கையை இழந்து நிற்கும் காங். தலைமையிலான ஐ.மு அரசுக்கு வரவிருக்கும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும், பாராளுமன்ற தேர்தலும் கடுமையான சவால்களாக உள்ளன. குஜராத் மாநில தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சூழலில் கஸாபை தூக்கிலிட்டது ஆதரவான சூழலை உருவாக்கும் என்று காங்கிரஸ் அரசு கணித்தது. கஸாபைத் தொடர்ந்து அஃப்ஸல் குருவை தூக்கிலிடும் விவகாரத்திலும் தீர்மானம் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியிருந்தது தேர்தலை எதிர்நோக்கியே ஆகும். முன்பு எப்பொழுதும் இல்லாத நிகழ்வாக குடியரசு தலைவர் 20 தினங்களுக்குள் அஜ்மல் கஸாபின் மரணத்தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுவை நிராகரித்து தீர்மானம் எடுத்துள்ளார்.

மேலும் அரசும் குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்தவுடன் தூக்குத் தண்டனையை ரகசியமாகவும், அவசர அவசரமாகவும் நிறைவேற்றியுள்ளது. கஸாப் உள்ளிட்டவர்களின் 11 கருணை மனுக்கள் குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக காத்திருந்தன. ஆனால், அதில் கடைசியில் அளிக்கப்பட்ட கருணை மனு மீது குடியரசு தலைவர் முடிவு எடுத்துள்ளார். அக்டோபர் 16-ஆம் தேதி கஸாபின் கருணை மனு குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் கருணை மனுக்களை
முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் தள்ளுபடிச் செய்திருந்தார். ஆனால், அந்த 3 பேருக்கான தண்டனை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மரணத்தண்டனையை தடைச் செய்யக்கோரி ஐ.நாவில் நடந்த வாக்கெடுப்பில் வாக்களித்த இந்தியா, மறு நாள் கஸாபின் மரணத்தண்டனையை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத் தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...