Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 19, 2012

இன்று உலக மனிதநேய தினம்!

உலக மனிதநேய தினம் World Humanitarian Day (WHD). ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையிலும், துன்பத்திலிருந்து விடுவிக்கப் படுவோருக்காகப் பணியாற்றுவோர் மற்றும் இப் பணிகளின் போது கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் ஆகியோரையும் நினைகூரும் வகையிலும் இத்தினத்தைஅனுஷ்டிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.2008 டிசம்பர் 11 ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் A/RES/63/139 இலக்கத் தீர்மானப்படி இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

 ஒரு தனிமனிதனின் சுதந்திரத்திற்காக இஸ்லாம் பல்வேறு மனித உரிமைச் சட்டங்களை இந்த மனித குலத்திற்கு வழங்கியுள்ளது.அவற்றில் சிலவற்றை இங்கே தருகின்றோம். முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களது இரத்தமும், உங்களது உடமைகளும் மற்றும் உங்களது கண்ணியமும் வரம்பு மீறமுடியாதவைகளாகும். (நூல்கள் : முஸ்னத் அஹ்மத் ஹதீஸ் எண் : 2037 மற்றும் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண் : 1739). இனப்பாகுபாடும் இஸ்லாத்தினால் அங்கீகரிக்கப்பட்டதல்ல.

இதைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான். மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்: இன்னும், ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்: நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடையவர்கள்; தான்: நிச்சயமாக அல்லாஹ், (யாவற்றையும்) நன்கறிந்தவன்: நன்குணர்பவன்.(அல் குர்ஆன் 49-13). மேலும், தனிப்பட்ட ஒருவரையோ அல்லது ஒரு நாட்டையோ அவர் பெற்றிருக்கும் செல்வம், ஆட்சி, அல்லது குலத்திற்காக இஸ்லாம் முன்னிலைப்படுத்துவதில்லை. இறைவன் அனைவரையும் சமமான அளவில் தான் படைத்துள்ளான், அவர்களிடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்வதற்கு அவர்கள் கொண்டுள்ள இறைநம்பிக்கையும், நற்செயல்களும் தான் காரணமாக அமைகின்றன. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ஓ! மனிதர்களே! உங்கள் இறைவனும் ஒருவன் தான், உங்களது மூதாதையரும் (ஆதம்) ஒருவர் தான். ஒரு அரபியானவன் அரபி அல்லாதவனை விடச் சிறந்தவன் அல்ல, ஒரு அரபி அல்லாதவன் ஒரு அரபியை விடச் சிறந்தவன் அல்ல, ஒரு சிவந்த நிறத்தை உடையவன் கறுப்பு நிறத்தை உடையவனை விடச் சிறந்தவன் அல்ல. ஒரு கறுப்பன் சிவந்த நிறத்தை உடையவனை விடச் சிறந்தவன் அல்ல. மாறாக உங்களில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே. (நூல்கள் : முஸ்னத் அஹ்மத் ஹதீஸ் எண் : 22978). இன்று உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற மாபெரும் பிரச்னைகளில் ஒன்று தான் இனவெறி. மனிதனை நிலவுக்கு அனுப்பத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முடிந்த மனிதனுக்கு, தன்னுடைய தன்னுடன் வாழும் சக மனிதனை வெறுக்காமல், சண்டையிடாமல் நேசிக்கக் கற்றுக் கொடுக்க முடியவில்லை.

முஹம்மது (ஸல்) அவர்கள் மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்த நாளிலிருந்து, இந்தக் கொடுமையான இனவெறிப் பழக்கத்தை எவ்வாறு துடைத்தெறிந்தார்கள் என்பதற்கு நாம் இஸ்லாத்தில் எண்ணற்ற உதாரணங்களைக் காட்ட முடியும். இஸ்லாத்தின் இறுதிக் கடமையாகிய ஹஜ் என்னும் யாத்திரையின் போது, பல்வேறு நாடுகள், இனங்கள், நிறங்கள், மொழிகளைச் சேர்ந்த இரண்டு மில்லியன் முஸ்லிம்கள் ஒரே இடத்தில் மக்கா நகரில் கூடுவது என்பது, இனவெறியை வேரடி மண்ணோடு துடைத்தெறியக் கூடிய, இஸ்லாமிய உலகளாவிய சகோதரத்துவத்தைக் காட்டுகின்றது. இஸ்லாம் நீதியை நிலைநாட்டக் கூடிய ஒரிறைவனின் மார்க்கமாகும். இதைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: (விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுமாறும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால், (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். (அல் குர்ஆன், 04-58).

 மேலும் இறைவன் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான். நீங்கள் நீதியாகவும் நடந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான். (அல் குர்ஆன், 49-9). தம்முடைய பகை வெறுப்பு காரணமாக, அவர்களிடையே
ஏற்படும் பிரச்னைகளில் அநீதமாக நடக்காமல் நீதமுடன் நடக்குமாறு இறைவன் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான். எந்த சமூகத்தவரின் விரோதமும், நீங்கள் நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களைத் திண்ணமாக தூண்டிவிட வேண்டாம்: (எவ்வளவு விரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அது தான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும். (அல் குர்ஆன், 05-08). இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் அநீதி செய்வதிலிருந்து உங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அது இறப்பிற்குப் பின் உள்ள மறுமை வாழ்க்கையில் இருளை (நட்டத்தை) உண்டாக்கும். யார் இந்த உலக வாழ்க்கையில் தமக்கு சேரக் கூடிய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவில்லையோ, அதை அவர்கள் மறுமை நாளில் பெற்றுக் கொள்வார்கள். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 மறுமை நாளில், இந்த உலக வாழ்க்கையில் எவருக்கு உரிமைகள் கிடைக்கவில்லையோ அவருக்கு வழங்கப்பட்டு, அவருடைய பாவங்கள் அல்லது தவறுக்கு ஈடாக அவைகள் ஏற்றுக் கொள்ளப்படும். (ஸஹீஹ் புகாரி எண்-2447, முஸ்னத் அஹ்மத் எண்-5798) (ஸஹீஹ் முஸ்லிம் எண்-2582, முஸ்னத் அஹ்மத் எண்-7163) யாரும் யாருடைய உரிமைகளையும், அவருக்குச் சேர வேண்டிய நியாயமான நீதிகளையும் புறக்கணித்து விடமுடியாது. அத்தகையவர்களுக்கு அநீதியிழைப்பதானது மிகப் பெரும் பாவமாக இஸ்லாத்தில் கருதப்படுகின்றது. அவ்வாறு அநீதி செய்யபவர் மறுமை நாளின் போது நடைபெறவிருக்கும் இறைவனின் நீதி மன்றத்திலே குற்றவாளியாக நிறுத்தப்பட்டு, அவருக்குத் தண்டனையும், இவ்வுலகில் பாதிப்புக்குள்ளானவருக்கு இறைவன் மன்னிப்பையும் வழங்கி இறைநீதியை நிலைநாட்டுவான். இத்தகைய இறைவனின் நீதி முறைகள் மனிதனை தன்னுடன் வாழும் சக மனிதனுக்கு அநீதி செய்வதிலிருந்தும் தடுக்கின்றன.

மேலும், நியாயமான மனிதனாக ஒருவன் தன்னை மாற்றிக் கொள்வதற்கும், பிறருக்கு அநீதி செய்வதிலிருந்தும், தனக்கு அநீதி இழைக்கப்படுவதிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அவன் கண்டிப்பாக இறைவன் மீதும் அவனது மார்க்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட சமூகத்தைச் சூழ உள்ளவனாகவும், அத்தகைய சமூக வாழ்வில் இவன் ஒரு அங்கமாக இருக்கும் போது தான், இத்தகைய இறைச் சட்டங்கள் மனிதன் சக மனிதனுடன் அமைதியாக வாழ்வதற்கு முழுமையான பயனைத் தரும். மேலும், மறுமையையும், ஓh இறையின் தூதையும் பின்பற்றி வாழாத சமூகத்தில் சமூக அமைதி சீர் கெட்டுக் கிடப்பது ஒன்றே, இஸ்லாத்தைப் பின்பற்றுவதன் மூலமே அத்தகைய சமூக அமைதியை மனிதனால் மீட்டுக் கொண்டு வர இயலும் என்பதை நிரூபிப்பதாய் உள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...