Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 11, 2012

தேர்தலை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது-எஸ். ஒய். குரைஷி


பணம் அளித்து செய்தி வெளியிடுவது தேர்தலை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது; அதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் கமிஷனர் பதவியிலிருந்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெற்ற எஸ். ஒய். குரைஷி தெரிவித்தார்.
கடந்த இரு ஆண்டுகளாக தலைமைத் தேர்தல் கமிஷனராக பதவி வகித்து வந்த குரைஷி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் நாளில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
‘தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய காலம் மிகவும் நிறைவானதாக இருந்தது. 2009-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் உள்பட பல மறக்க முடியாத தேர்தல்களில் பணியாற்றினேன். அதிருஷ்டவசமாக சில கடினமான தேர்தல்கள் உள்பட 11 மாநிலங்களில் பேரவைத் தேர்தல்கள் அமைதியான முறையில் நடந்து முடிந்தன.
தேர்தல்களில் பண அதிகாரத்துக்கு எதிராக நடவடிக்கைகள் தாமதமாகத் தொடங்கியிருந்தாலும் உறுதியானவையாக இருக்கின்றன. இவை தேர்தல் நடைமுறைகளில் ஏற்கெனவே நல்ல மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கின்றன. பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்யும் போக்குக்கு எதிரான முன்மாதிரி நடவடிக்கையை எடுத்திருக்கிறோம். இன்னும் செய்து முடிக்க வேண்டியவை ஏராளம் உள்ளன.
தேர்தல்களை நடத்தி முடிப்பதற்கு நடத்தை விதிமுறைகள் பேருதவியாக இருக்கின்றன. தேர்தல் களத்தில் சமவாய்ப்பு அளிப்பதில்
அவற்றின் பங்கு முக்கியமானது. இந்த விதிமுறைகளுக்கு சட்ட அந்தஸ்து வழங்குவது நடைமுறையில் சாத்தியமில்லாதது. இதில் மாற்றத்தைக் கொண்டுவந்தால் தேவையில்லாத எதிர்வினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல்கள் சர்ச்சைகுரியவையாக இருந்தன என்பதை நான் ஏற்று கொள்ள மாட்டேன். விதிமுறைகளை அமலாக்கும்போது அவை செய்திகளாகின்றன. பல்வேறு எதிர் கருத்துகள் வந்து பரபரப்பாகின்றன. நாங்கள் ஒருபோதும் மென்மையாகவோ, கடுமையாகவோ நடந்து கொண்டதில்லை.
தேர்தல் ஆணையர் ஒரு விரிவான தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனக்கு முன் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த இருவர் இதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.
வாக்குப் பதிவின்போது ஒப்புகைச் சீட்டு அளிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் இதற்கான சோதனைகள் தொடங்கப்படக் கூடும்.
எனது பதவிக் காலத்தில் அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையேயான உறவு மிகவும் சுமுகமாக இருந்தது. போதிய ஒத்துழைப்பையும் உதவியையும் அரசு அளித்து வந்தது. அனைத்துத் தேர்தல்களுக்கும் நாங்கள் கோரிய அளவில் மத்திய ஆயுதப் படை போலீஸாரை உள்துறை அமைச்சகம் வழங்கியது. நிதியமைச்சகமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உதவி செய்தது. தகவல் ஒலிபரப்பு, வெளியுறவு அமைச்சகங்களும் தேர்தல் ஆணையத்துக்கு உதவியாக இருந்தன.
சுமார் ஓராண்டுக்கு முன்பாக தேர்தல் அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் மையத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதில் சுமார் 50 வகையான படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த இரு ஆண்டுகளில் தேர்தல் ஆணையத்தில் சர்வதேச நடவடிக்கைகள் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருந்தன. 2004-ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 10 நாடுகளின் தேர்தல் ஆணையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறோம்.
பதவிக்காலம் முடிந்த பிறகும் ஓய்வாக இருக்கப் போவதில்லை. குடும்பம், நண்பர்கள் என சமூகம் மிக விரிவாக இருக்கிறது. இரு புத்தகம் எழுதும் திட்டங்கள் மனதை ஆக்கிரமித்துள்ளன’ என்றார் குரைஷி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...