Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 30, 2013

கடலூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள்?

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் தடை செய்வது குறித்து அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புகையிலை உபயோகிப்பதால் புற்றுநோய், ஆஸ்துமா, நுரையீரல் உட்பட பல்வேறு நோய்கள் வர காரணமாக இருப்பதால் புகையிலையை அறவே தடை செய்ய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் புகையிலை அறவே ஒழிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் கடலூர் மாவட்டம் வரும் 2014க்குள் புகையிலை இல்லா மாவட்டமாக அங்கீகரிப்பு செய்யப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டு அதற்குரிய ஆயத்த பணிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இச்சட்ட அமலாக்கம் மற்றும் விழிப்புணர்வு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கலெக்டருமான கிர்லோஷ்குமார் தலைமையில் பிற துறைகளுடன் கூடிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

பொது இடங்களில் புகை பிடித்தால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். மேலும் அலுவலகம், ஓட்டல், கடைகள் மற்றும் பொது இடங்களில் புகைபிடித்தல் குற்றம் என்ற வாசகம் அமைக்கப்பட வேண்டும். புகையிலை பொருட்கள் சம்மந்தமான விளம்பரம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, விளம்பரம் அமைத்தல் கூடாது. 18 வயதுகுட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. அதேப்போன்று 18 வயதினருக்குட்பட்டவர்களைப் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய ஈடுபடுத்தக்கூடாது. கல்வி நிறுவனத்தைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனமும் மேற்கண்ட அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். புகையிலை பொருட்களின் மீது 40 சதவீதம் அளவு எச்சரிக்கை படம் இருக்க வேண்டும்.

கடைக்காரர்கள் கயிறு, நெருப்பு, தீப்பெட்டி போன்றவைகளை வெளியில் புகை பிடிப்பவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. மேற்கண்டவற்றில் விதிமீறல் இருந்தால் புகையிலை
பொருட்கள் மற்றும் விளம்பர பலகைகள் பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படும். எனவே, மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுவினர் இப்பணிகளை இதர பிற சுகாதாரப் பணிகளைப் போன்றே விழிப்புடன் செயல்படவும், இதற்கென அமைக்கப்பட்ட தண்டம் வசூலிப்பு மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்புக் குழுவினர் செம்மையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கிர்லோஷ்குமார் பேசினார். இக்கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜவகர், இணை இயக்குனர் கோவிந்தராஜ், அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
-Dinamalar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...