Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 07, 2011

ஜஹாங்கீர் ஓவியம்: ரூ.10 கோடிக்கு ஏலம்

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் ஓவியம் லண்டனில் செவ்வாய்க்கிழமை ரூ.10 கோடிக்கு ஏலம் போனது.


17-ம் நூற்றாண்டில் வரையப்பட்ட மொகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் முழு உருவ ஓவியம் லண்டனில் போன்ஹாம்ஸில் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டது. தங்க சிம்மாசனத்தில் உலக உருண்டையை கையில் ஏந்தியவாறு ஜஹாங்கீர் அமர்ந்திருக்கும் நிலையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற ஓவியர் அபுல் உசேனால் 1617-ல் வரையப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்திய இஸ்லாமிய கலை அமைப்பின் தலைவரான அலிஸ் பெய்லி இந்த ஓவியம் பற்றிக் கூறுகையில், இந்த ஓவியத்தின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடமுடியாது என்று குறிப்பிட்டார். இந்த ஓவியத்துடன் முகலாயர் காலத்திய விலைமதிப்புள்ள கற்கள் பதிக்கப்பட்ட தங்க வளையல் ஒன்றும் ஏலம் விடப்பட்டது.

தமிழகத்தின் முதல் முஸ்லிம் பெண் ஐ.பி.எஸ்.,பணிக்கு தேர்வு!

தமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்.,பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் அஜிதா பேகம்: என் சொந்த ஊர் கோவை. என் அப்பா, அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். நான் 10ம் வகுப்பில், 78 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் 2வில், 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன். பட்டப்படிப்பை முடித்தபின், எம்.பி.ஏ., படித்தேன். பல்கலைக்கழக அளவில் இரண்டாம் இடம் பிடித்தேன்.அப்போதெல்லாம், ஐ.ஏ.எஸ்., பற்றி எந்த கனவும் இல்லை. அப்பாவின் நண்பர், பேராசிரியர் முத்துகுமார், என்னை ஐ.ஏ.எஸ்., படிக்க ஆலோசனை கூறினார். அதையடுத்து, ஐ.ஏ.எஸ்., பயிற்சி அளிக்கும் கனகராஜ் என்பவரிடம் சேர்ந்து படித்தேன்.என் அம்மாவின் எண்ணம், திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான். என் அப்பா, என்னை ஐ.ஏ.எஸ்., படிக்க வைப்பதில் குறியாக இருந்தார். நானும் விடாமுயற்சியுடன் படித்தேன். டில்லி சென்று படித்தால், தேர்வில் எளிதாக ஜெயிக்கலாம் என்று யோசனை கூறினர்.

இதையடுத்து, நானும், என் தோழிகள் சிலரும், டில்லி சென்று படித்தோம்.ஆனால், அந்த சூழ்நிலை எனக்கு பிடிக்காததால், சென்னை வந்து, படிப்பில் கவனம் செலுத்தினேன். தினமும், 13 மணி நேரம் படிப்பேன். சீனியர்கள் உதவியதால், "பிரிலிமனரி' தேர்ச்சி பெற்றேன். விடாமுயற்சியுடன், மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, 169வது இடத்தைப் பிடித்து, ஐ.பி.எஸ்., ஆகிவிட்டேன்.ஜம்மு - காஷ்மீரில் போஸ்டிங் போட்டு விட்டனர். பிரச்னை நிறைந்த பகுதியில் பணி புரிகிறேன் என்ற கவலை, என் குடும்பத்திற்கு உள்ளது. எனவே, மீண்டும் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதியுள்ளேன். இதில், வெற்றி பெற்றால், ஊர் பக்கம் வந்து விடுவேன்.சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள், நம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமையை கடைபிடித்தால், நிச்சயம் ஐ.ஏ.எஸ்., தான்.

source: dinamalar

ஏப்ரல் 06, 2011

பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: நாட்டில் எந்த இடத்திலும் இனி பொது இடங்களில் புதிதாக வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தக் கட்டுப்பாடு கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்வாராக்கள் மற்றும் அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும்.

சாலைகளில் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சட்டவிரோதமாக கட்டுமானங்கள் அனைத்தையும் இடிக்குமாறு உள்ளாட்சி நிர்வாகத்துக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தல்வீர் பண்டாரி, நீதிபதி முகுந்தகாம் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தங்களது இடைக்கால உத்தரவில் இந்தத் தீர்ப்பை வெளியிட்டனர்.

பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் இறுதிமுடிவு எடுக்கப்படும்வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் பொது இடங்களில் தற்போது இருக்கும் வழிபாட்டுத் தலங்கள் குறித்து மாநில அரசுகள், வழக்குகளின் தன்மைக்கேற்ப முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்

உங்கள் வாக்கை யாரேனும் செலுத்தினால் என்ன செய்ய வேண்டும்?

உங்களுடைய வாக்கை வேறு யாரேனும் செலுத்தினால், வாய்ப்பு பறிபோய் விட்டதே எனக் கருதி உடனடியாக வாக்குச் சாவடியை விட்டு வெளியேறாதீர்கள். இதற்கான மாற்று ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.


வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடி சென்றதும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என சரிபார்க்கப்படும். அப்போது, உங்களுடைய பெயரில் வேறு யாரேனும் வாக்களித்து இருந்தால் அந்தத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.நீங்கள் வாக்களிக்காத பட்சத்திலும் உங்கள் வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் இதனை வாக்குச் சாவடி அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இதையடுத்து, தேர்தல் சட்டத்தின் "49 பி' பிரிவின்படி வாக்குச் சீட்டு தரப்படும்.

மேலும், இதற்கான பதிவேட்டில் உங்கள் பெயர் மற்றும் கையெழுத்து பெறப்படும். இதன்பின், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குச் சீட்டைப் போன்றே ஒரு சீட்டு தரப்படும்.அந்தச் சீட்டின் பின்புறம், வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள வாக்குச் சீட்டு (tendered ballot paper) என எழுதப்படும். அதில் தேர்தல் வாக்குச் சாவடி அதிகாரியின் கையெழுத்திடப்படும். அந்தச் சீட்டு உங்களிடம் தரப்படும். அதனுடன் அம்புக்குறியிட்ட ஒரு ரப்பர் சீல் கொடுக்கப்படும்.

சீட்டில் நீங்கள் விரும்பும் நபரின் பெயருக்கு எதிரே அந்த சீலின் உதவியுடன் அச்சிடலாம். இந்தச் சீட்டுகள் தனியாக ஒரு கவரில் வைக்கப்படும்.தண்டனை கிடைக்கும்...வாக்குச் சாவடிக்குள் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த முகவர்கள் இருப்பார்கள். வாக்களிக்கும் ஒவ்வொருவரின் அடையாளத்தையும் அவர்கள் சோதிப்பார்கள். அதாவது, நீங்கள் வாக்களிக்கும் போது உங்களின் அடையாளம் கட்சி முகவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.அந்தச் சூழலில், உங்களது வாக்கு சவாலான வாக்காக (CHALLENGE VOTE) கருதப்படும். அடையாள சான்றாக புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றைக் காட்டலாம்.

சான்றுகளின் உண்மைத்தன்மை அடிப்படையில் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.அவர் வாக்காளர் இல்லை என்ற கட்சிகளைச் சேர்ந்த முகவர்களின் சவால் நிரூபிக்கப்படவில்லை என்றால் வாக்காளருக்கு வாக்குரிமை அளிக்கப்படும். சவால் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வாக்காளர் வாக்களிக்க முடியாது. அதேசமயம், அவர் கள்ள வாக்கு அளிக்க முயற்சித்தார் என காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

ஏப்ரல் 04, 2011

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மக்கள் ஆதரவு யாருக்கு

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அமைச்சரின் பலத்தை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை மக்கள் ஆதரிக்கப்போகிறார்களா அல்லது உள்ளூர் வேட்பாளர் முருகுமாறனை ஆதரிக்க போகிறார்களா என்ற நிலையில் தேர்தல் களை கட்டத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தின் கடைகோடி தொகுதியாக காட்டுமன்னார்கோவில் உள்ளது. விவசாய தொழிலையே நம்பியுள்ள இங்கு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பொருளாதார அளவில் கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் காணாத தொகுதியாக உள்ளது.

தனி தொகுதியான இங்கு கடந்த 62ம் ஆண்டு முதல் 11 சட்டசபை தேர்தலில் 6 முறை தி.மு.க. வும், 2 முறை காங்., கட்சியும், அ.தி.மு.க., மற்றும் சுயேச்சை தலா ஒருமுறை கைப்பற்றின. கடந்த 2006 தேர்தலில் காங்., வேட்பாளர் வள்ளல்பெருமானுக்கும் வி.சி., வேட்பாளர் ரவிக்குமாருக்கும் ஏற்பட்ட போட்டியில் ரவிக்குமார் வெற்றி பெற்றார். படித்தவர், எழுத்தாளர், வங்கி ஊழியரான இவர் சிறப்பாக மக்கள் பணியாற்றுவார் என்று அறிமுகப்படுத்தப்பட்டதால், வெளியூர் வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை என ரவிக்குமாரை அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவரது பணிகள் திருப்தியாக இல்லை என தொகுதி மக்கள் குறைபட்டு கொள்கின்றனர்.

கடலூர் - நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் முட்டம் பாலம், 108 கோடியில் கொள்ளிடம் அணைக்கரை பலப்படுத்தி சாலை போடும் பணி, வீராணம் ஏரியை தூர் வாருவது, வாரியங்கள் அமைத்தது, தமிழகத்தில் வீடு கட்டும் திட்டத்திற்கு தனது கோரிக்கையே காரணம் என நல்ல திட்டங்கள் வர காரணமாய் இருந்திருக்கிறேன் என அவர் கூறினாலும், கடும் வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படும்போது கூட எம்.எல்.ஏ., வரவில்லை என்பது தொகுதி மக்களின் பெரும் குறையாக இருந்து வருகிறது.அதே போன்று அவரது அலுவலகம் ஐந்தாண்டுகளில் திறந்திருந்த நாட்கள் மிகவும் குறைவு. இதனால் அவர் மீது தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

சென்னைப் பல்கலையில் முதுகலைப் படிப்புடன் இலவச டிப்ளமோ!

மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பை பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதியத் திட்டம் வரும் 2011-12 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 72 முதுகலை பட்டப்படிப்பு துறைகளிலும் இதுபோன்ற பட்டயப் படிப்பு, மாணவர்களிடம் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாமல் வழங்கப்பட உள்ளது.

இந்த பட்டயப் படிப்புக்கான பயிற்சிகளை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மட்டும் அல்லாமல், முன்னணி தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோரை பல்கலைக்கழகத்துக்கு வெளியிலிருந்தும் அழைத்து வந்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. கலை, அறிவியல் முதுகலை பட்ட மாணவர்களுக்கு படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பல்கலைக்கழகத்தில உள்ள அனைத்துத் துறைகளும் இந்த முயற்சியை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பட்டயப் படிப்பு, மாணவர் படிக்கும் முதுகலை பட்டப் படிப்பைச் சார்ந்ததாகவும், பயிற்சி சார்ந்ததாகவும், உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடியவகையிலும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தாய்ப்பாலுக்கு நிகராக பசும்பால்!

லண்டன் : மரபணு மாற்றப்பட்ட பசுக்களை சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தாய்ப் பாலில் உள்ள சத்துகள் அடங்கிய பாலை இந்த பசுக்களே தருமென்று அவர்கள் கூறியுள்ளனர்.

தாய்ப் பால் தருவதற்காக மொத்தம் 300 பசுக்களை மரபணு மாற்றம் செய்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளியாகும் "தி சண்டே டெலிகிராப்' பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் மரபணு மாற்ற பசுக்களை உருவாக்கிய குழுவின் தலைமை விஞ்ஞானி நிங் லீ கூறியுள்ளர்.

இந்த பசுக்கள் தரும் பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், தொற்றுநோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும். பொதுவாக தாய்ப் பாலில் குடிக்கும் குழந்தைகளுக்குத்தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும். பசும் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அது கிடைக்காது. ஆனால் எங்கள் குழு உருவாக்கியுள்ள பசுக்களின் பாலில் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துகளும், நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது.

ஏப்ரல் 03, 2011

சாதித்தது இந்தியா!!

மும்பை, ஏப். 2: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது.

1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து இப்போது தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.

சொந்த மண்ணில் முதல்முறை...
இந்த முறை கோப்பையை வென்றதன் மூலம் கோப்பையை நடத்திய நாடுகள் அதன் சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி புதிய சாதனைப் படைத்துள்ளது இந்திய அணி. இதற்கு முன் 1996-ம் ஆண்டு போட்டியை நடத்திய இலங்கை வென்றிருந்தாலும், இறுதி ஆட்டம் பாகிஸ்தானின் லாகூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சச்சின் கனவு நனவானது
6-வது உலகக் கோப்பையில் விளையாடிய சச்சின், மும்பையில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் நீண்ட நாள் கோப்பைக் கனவு நனவாகியுள்ளது.

சாதனை கேப்டன் தோனி
ஒருநாள் கிரிக்கெட், இருபது ஓவர் கிரிக்கெட் என இரண்டிலும் கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் தோனி. டெஸ்ட் அரங்கிலும் அவரது தலைமையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்திய அணி கோப்பையை வென்றதும் மைதானத்தில் சச்சினை தோளில் தூக்கி வைத்து வலம் வந்தார் யூசுப் பதான். இந்திய வீரர்கள் யுவராஜ், ஹர்பஜன் சிங் ஆகியோரின் கண்களில் கண்ணீர்ப் பெருக்கெடுத்தது உணர்ச்சிபூர்வமாக இருந்தது.

ஏப்ரல் 02, 2011

இந்திய வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் எம்.பி,க்களை சந்தித்துள்ளது திட்டக்கு

மாலேகான்:சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக கடந்த வாரம் முஸ்லிம் எம்.பி.க்களை திட்டக்குழு சந்தித்துள்ளது.

இது சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்துவற்கு சாதகமான வாய்ப்பாக அமைந்தது என்று பீஹார் காங்கிரஸ் எம்.பி, மவ்லானா அஸ்ரருல் ஹக் கூறியுள்ளார்.

முஸ்லிம் எம்பிக்களை விழாக்களுக்கு அழைத்து மேடையில் எங்காவது ஒரு இடம் கொடுத்தே, இதுவரை தலைவர்கள் இந்திய முஸ்லிம்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

நாட்டின் ஐந்தாட்டு திட்டத்தைப் பற்றி முடிவெடுப்பதற்கு முன்பு பல தரப்பு மக்களையும், அமைப்புகளை சந்திப்பதையும், ஆலோசனைகளை கேட்பதையுமே கடமையாக பெற்றிருக்கும் திட்டக்குழு, இதற்கு முன்னால் முஸ்லிம் எம்.பி,க்களை அழைத்து அவர்களின் வாதங்களை விவாதிக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை என்றார்.

அறிக்கைகளை நேரடியாக பிரதமரிடமே கொடுக்கும் திட்டக்குழு 1950, மார்ச் 15-ல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவை தலைவராகக் கொண்டு நிறுவப்பட்டது.

மாநிலங்களவை துணைத் தலைவர் கே.ரஹ்மான் கான் தலைமையில் முஸ்லிம் எம்பிக்களை, திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியா சந்தித்து 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்காக செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்து விவாதித்தார்.

கார்கள், இரு சக்கர வாகனங்கள் விற்பனை பன்மடங்கு உயர்வு

சென்னை:சென்ற மார்ச் மாதத்தில், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. உலகளவில், மோட்டார் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், இந்தியாவின் பங்களிப்பு, நல்ல அளவில் உயர்ந்து வருகிறது. கடந்த பல மாதங்களாகவே, உள்நாட்டில் மோட்டார் வாகனங்கள் விற்பனையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் வாங்குவதற்கு வங்கிகள், அதிகளவில் நிதியுதவி அளித்து வருகின்றன. மேலும், இந்தியாவில் செலவிடும் வருவாயும் உயர்ந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், மோட்டார் வாகனங்கள் விற்பனை, தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது என, மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்தார்.இந்தியாவில் கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், சென்ற மார்ச் மாதத்தில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 952 கார்களை விற்பனை செய்து, சாதனை படைத்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 28.2 சதவீதம் (95 ஆயிரத்து 123 கார்கள்) அதிகமாகும்.

கடலூர் மாவட்டத்தில் 4, 5 தேதிகளில் வாக்காளர் சீட்டு

கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கும் 4, 5 தேதிகளில் வாக்காளர் சீட்டு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் 4-4-2011, மற்றும் 5-4-2011 ஆகிய இரு தேதிகளில் வாக்கு நிலை அலுவலர்களால் பொதுமக்களுக்கு வாக்காளர் சீட்டு வீடு வீடாக வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 9 தொகுதிகளுக்கும் வாக்காளர் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் கீழ்காணும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளலாம்.


கடலூர் 04142- 295189,

பண்ருட்டி 04142- 242174,

சிதம்பரம் 04144- 222322,

காட்டுமன்னார்கோவில் 04144- 262053,

விருத்தாசலம் 04143- 238289,

திட்டக்குடி 04143- 255240,

குறிஞ்சிப்பாடி 04142- 258901.

வாக்காளர் சீட்டை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம். வாக்காளர் வசதிக்காக இது வழங்கப்படுகிறது.