Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 31, 2010

மின்கட்டண உயர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது : நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டணம் அமல்?

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக, மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ள மனு மீதான கருத்துக் கேட்பை தொடர்ந்து, புதிய மின் கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. புதிய மின் கட்டண ஆணையில், கட்டண உயர்வு தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த கட்டண உயர்வு, நாளை (1ம் தேதி) முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு கோடியே 38 லட்சம் பேர், வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2003 மார்ச் மாதம் 15ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பலமுறை பரிசீலனை செய்தாலும், இது ஓட்டுக்கு வேட்டு வைக்கும் விவகாரம் என்பதால் அதை தள்ளிப் போட்டு வந்தது. நாடு முழுவதும் மின்தட்டுப் பாடு அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறையை சரிசெய்ய, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைக்கு மின் வாரியம் தள்ளப் பட்டது. இதனால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் அதிகமானது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதியன்று, மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான மனுவை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்வாரியம் விண்ணப்பித்தது. இதில், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து நான்கு ரூபாயாக உயர்த்த அனுமதி கோரப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கான உயர் மின் அழுத்த இணைப்பு பெற்றவர்களுக்கு, ரூ.3.50லிருந்து, ரூ.4.20 ஆகவும், உயர் அழுத்த இணைப்பு பெற்றுள்ள வணிக நிறுவனங்களுக்கு, ஐந்து ரூபாயில் இருந்து, ரூ. 5.80 ஆக உயர்த்த மனு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு இணைப்புகளைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து 4 ரூபாயாகவும், 401 முதல் 600 யூனிட் வரை உபயோகிப்போருக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து 4.25 ஆகவும், 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ. 4.75லிருந்து, 5.75 ஆகவும் உயர்த்த அனுமதி கோரியுள்ளது. இது தவிர தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள கல்லூரி, சினிமா தியேட்டர்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவகையான இனங்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்குமாறு மின்வாரியம் மனுவில் கோரியிருந்தது. இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பொதுமக்கள் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியை நடத்தியது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங் களில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில், தொழில் அமைப்புகளும், பொதுமக்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், புதிய மின்கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் கபிலன் மற்றும் உறுப்பினர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மின்கட்டண உயர்வு குறித்து அறிவிக்கவுள்ளனர். கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தும் மின்வாரியத்தின் அறிவிப்பு தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஆஜரான பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் கருத்துகளை பரிசீலித்துள்ள ஆணையம், அதற்கேற்ப, மின்வாரியத்தின் வேண்டுகோளில் சிலமாற்றங்களைச் செய்து, இன்று அறிவிக்கவுள்ளது. வீடுகளுக்கான மின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், வீட்டு இணைப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கான இணைப்பு பெற்றுள்ள பெரும்பாலானவர்களுக்கு கட்டண உயர்வு பொருந்தும் எனக் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...