Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 04, 2012

தமிழகம் மற்றும் புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது!

சென்னை:தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு தொடங்கியது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி நடைபெறும் முதல் பொதுத்தேர்வு இதுவாகும். தமிழ்நாட்டில், நடைமுறையில் இருந்துவந்த எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி.,மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ-இந்திய பாடமுறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, 2011-2012-ம் கல்வி ஆண்டிலிருந்து சமச்சீர் கல்வித்திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

 2012 முதல் நடைபெற இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குநர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.12.45 மணி வரை தேர்வு நடைபெறும். எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு (புதிய பாடத்திட்டம்) 4 ம் தேதி, தமிழ் முதல் தாள் பரீட்சையுடன் தொடங்கி, 23 ம் தேதி சமூக அறிவியல் பாடத்துடன் முடிவடைகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10,312 பள்ளிக்கூடங்களில் இருந்து ஏறக்குறைய 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ, மாணவிகள் இந்த தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்துள்ளனர். இதில், 5 லட்சத்து 45 ஆயிரத்து 707 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 38 ஆயிரத்து 868 பேர் மாணவிகள் ஆவர். புதிய பாடத்திட்டத்தில் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்கு 19 ஆயிரத்து 574 பேர் பதிவு செய்துள்ளனர்.

 7 லட்சத்து 87 ஆயிரத்து 374 மாணவ-மாணவிகள் தமிழ் வழிக் கல்வியில் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி.பரீட்சைக்காக, சென்னையில் 223 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 596 பள்ளிக்கூடங்களில் இருந்து 58,098 மாணவ-மாணவிகள்
தேர்வு எழுதுகிறார்கள். புதுச்சேரியில், 260 பள்ளிக்கூடங்களில் இருந்து, 18,116 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 47 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களும், முதல்முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களும், புதிய பாடத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி.பரீட்சை எழுதுவார்கள்.

 எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி.தேர்வுகளில், ஏப்ரல் 2012-க்கு முந்தைய ஆண்டுகளில் தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவர்கள் அனைவரும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவார்கள். பழைய பாடத்திட்டத்தில் மொத்தம் 61,497 மாணவ-மாணவிகள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்துள்ளனர். மெட்ரிக்குலேஷன் பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 04 ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20 ம் தேதி முடிவடைகிறது. தேர்வில், மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தடுக்கவும், கண்காணிக்கவும், மாவட்டந்தோறும், முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...