Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 12, 2012

அரசு கேபிள் "டிவி' திட்டம் புஸ் : நலிவடையச் செய்ய சூழ்ச்சி?

கடலூர் : அரசு கேபிள் "டிவி' சரியாக தெரியாததால் வாடிக்கையாளர்கள் "டிஷ் டிவி' க்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க., அரசின் தேர்தல் அறிக்கையில் கேபிள் "டிவி' யை அரசே ஏற்று நடத்தும் என அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு பொறுப்பெற்ற பின்னர் கட்டண சேனல்கள் உட்பட 91 சேனல்கள் 70 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. இதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹெச்.பி.ஓ., டிஸ்கவரி, நேஷனல் ஜியாகரபி உட்பட ஏராளமான சேனல்கள் தமிழில் ஒளிபரப்பப்படுகின்றன. இதற்காக மாவட்டம் தோறும் வாடகை அலுவலகத்தில் தாசில்தார் மற்றும் 2 டெக்னீஷியன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். "தானே' புயலால் சேதம் இதற்கிடையே "தானே' புயல் காரணமாக "டிஷ்' ஆண்டனா சேதமடைந்தது. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததில் கேபிள்களும் சேதமடைந்தன. இதனால் மரங்களை திருடிச்சென்ற சமூக விரோதிகள் கேபிள்களையும் களவாடிச் சென்றனர்.

 அத்துடன் ஒரு மாத காலமாக மின் தடை ஏற்பட்டதால் கடலூர் மாவட்ட மக்கள் "டிவி' பார்ப்பதையே மறந்து விட்டனர். தற்போது அறுந்து போன ஆப்டிக் பைபர் கேபிள் ஒயர்களுக்கு பதிலாக சாதாரண ஒயர்கள் போடப்பட்டுள்ளன. இதனால் சிக்னல் சரியாக "டிவி' க்கு வராததால் படங்கள் தெளிவாக தெரியவில்லை. இதைப்பற்றி யாரும் கண்டு கொண்டுகொள்வதில்லை. தம் விருப்பம் போல... மாவட்டத் தலைநகர் அலுவலகத்திலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் இணைப்பு கொடுத்து முழுக்கட்டுப்பாட்டையும் வைத்திருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் உள்ளூர் சேனல்கள் துவங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைப்பு செய்யாததால் டெண்டர் எடுத்தவர்களில் 2 சேனல்கள்
மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற சேனல்கள் நடத்துவதற்கு அரசுக்கு பணம் செலுத்தவில்லை.

    அரசு உத்தரவை புறந்தள்ளி விட்டு ஆபரேட்டர் விருப்பம் போல ஆங்காங்கே "டிஷ்' வைத்து இணைப்பு கொடுத்து வருகின்றனர். இதனால் சேனல்கள் ஆங்காங்கே வேறுபடுவதுடன் கட்டணம் வசூலிப்பதும் வேறுபடுகிறது. மேலும் ஒவ்வொரு ஆபரேட்டர்களும் ஒருவர் 40 சேனல்களும், மற்றொரு ஆப்ரேட்டர் 50 சேனல்களும், இன்னும் சில ஆபரேட்டர்கள் சன் "டிவி' உட்பட 60 சேனல்களும் கொடுத்து விட்டு அதற்கேற்ப கட்டணத்தை 100 ஆக உயர்த்தி வாங்குகின்றனர். நலிவடைய வைக்க திட்டமா? ஒரே நகரத்தில் வசிக்கும் ஒரு பகுதி மக்களுக்கு ஒரு மாதிரியாகவும், மற்றொரு பகுதி மக்களுக்கு வேறு மாதிரியாகவும் கட்டணம் மாறுபடுவதுடன் சேனல்களும் மாறுபடுகின்றன.

  இந்த பாரபட்சமான நிலையை களைய நடவடிக்கை மேற்கொள்ளாமல் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு வருகிறது. தெளிவான படங்கள் தெரியாமை, அறிவித்த சேனல்களை வழங்காமை, கூடுதல் கட்டணம் வசூலிப்பது, தலைமையிடத்திலிருந்து இணைப்பு கொடுக்காமை, அறிவிக்கப்பட்ட சேனல்களை கொடுக்காமல், பட்டியலில் இல்லாத சேனல்களை வழங்குவது போன்ற குறைபாடுகளால் மக்கள் தனியார் "டிஷ் டிவி' களுக்கு மாறி வருகின்றனர். அரசு அறிவித்த சலுகை விலை கேபிளை விட ஏற்கனவே ஆபரேட்டர் கொடுத்த சேனலே தேவலாம் என மக்கள் நினைக்கும் அளவுக்கு அரசு கேபிள்களின் நிலை போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் அரசு கேபிள் என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
thanks:DM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...