Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 09, 2011

கொள்ளிடக்கரையில் முதலைகளால்...திக் திக் : மழைக் காலமானால் தொடரும் அச்சம்

   சிதம்பரம் : தொடர் மழையால் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பியதாலும் ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதாலும் கொள்ளிடக்கரையொட்டி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் கிராமங்களைச் சேர்ந்த மக்களை முதலைகள் அச்சுறுத்தி வருகின்றன. கொள்ளிடக்கரையொட்டிய சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் காவிரி டெல்டா பகுதி பாசன வாய்க்கால்கள், ஆறுகள் வழியாக மழை வெள்ள காலங்களில் முதலைகள் அதிக அளவில் வந்து விடுகிறது. இந்த முதலைகள் அப்பகுதிக்கு வருபவர்களை கடித்தும், இரவு நேரங்களில் கிராமத்திற்குள் நுழைந்து கால்நடைகளை விழுங்கி வருவதும் வழக்கமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலைகள் கடித்து 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

     பலர் காயமடைந்துள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடந்த ஆண்டு உயிரிழப்பு அதிகரித்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி பழைய கொள்ளிடம்
 ஆற்றைக் கடந்து சென்ற நந்திமங்கலம் இளங்கோவன் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த வீரய்யன், அஞ்சலை, சுப்ரமணியன், ராஜேந்திரன், சிங்காரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் முதலை கடித்து இறந்துள்ளனர். அதே ஆண்டு நவம்பர் 18ம் தேதி கொள்ளிடம் ஆற்றையொட்டி வேளக்குடியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சாவித்ரி என முதலை வாயில் சிக்கி இறந்தவர்கள் பட்டியல் நீண்டு வருகிறது.

பருவமழை துவங்கி விட்டாலே இப்பகுதி மக்களுக்கு முதலை அச்சம் வந்து விடுகிறது. முதலையால் உயிரிழப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. கடந்த சில நாட்களாக பருவமழை பெய்யத் துவங்கி விட்டதால் துவக்கத்திலேயே முதலை அச்சம் வந்து விட்டது. கடந்த மாதம் 8ம் தேதி சிதம்பரம் அடுத்த பழைய கொள்ளிடத்தில் குளிக்கச் சென்ற புதுப்பூலாமேட்டைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற 62 வயது மூதாட்டியை முதலை கடித்துக் குதறியது. அத்துடன் சிவாயம், சிவபுரி, கீழ குண்டலபாடி உள்ளிட்ட பல பகுதிகளில் வாய்க்கால்கள் முதலையை பார்த்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கொள்ளிடக்கரை மற்றும் நீர் நிலையொட்டிய கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எந்த நேரத்திலும் முதலை தங்களை தாக்கும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் முதலைகள் பிடிக்கப்பட்டு வண்டலூர் முதலை பண்ணைக்கு கொண்டு விடுவது வழக்கம். சமீபகாலமாக சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குளத்தில் விடுகின்றனர். அந்த முதலைகள் மீண்டும் கொள்ளிடம் ஆறு மற்றும் வாய்க்கால் வழியாக ஊருக்குள் வந்து விடுகிறது. எனவே சிதம்பரம் பகுதியில் பிடிக்கப்படும் முதலைகளை நிரந்தரமாக வண்டலூர் முதலைப் பண்ணையில் விட வேண்டும். அல்லது முதலை பண்ணை அமைத்து பாதுகாத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும்.

கிடப்பில் முதலை பண்ணைத் திட்டம் : நெய்வேலி அல்லது சிதம்பரத்தில் முதலை பண்ணை அமைக்க வனத்துறை சார்பில் 75 லட்சம் ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இத்திட்டம் குறித்து அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ இதுவரை கண்டு கொள்ளவே இல்லை. இனியும் தாமதிக்காமல் பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் முதலை அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தற்போது மக்களிடையே எழுந்துள்ள முதலை அச்சத்தைப் போக்க தற்காலிகமாக வனத்துறை சார்பில் முதலை உள்ள பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மேலும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...