Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 08, 2013

சாவேஸ்:தென் அமெரிக்காவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி

கராக்கஸ்:ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த உடனேயே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் நல்லுறவை ஸ்தாபிக்க முயற்சிப்பதுதான் 3-ஆம் உலக நாடுகளின் முக்கிய செயல்திட்டமாக இருக்கும். ஆனால், அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் நட்புநாடுகளுக்கு எதிரான அணியில் உறுதியாக நிற்கவேண்டும் என்பது ஹியூகோ சாவேஸின் பாணியாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஈராக் அதிபர் ஸதாம் ஹுஸைன், ஈரானின் தற்போதைய அதிபர் அஹ்மத் நஜாத், சிரியாவின் பஸ்ஸாருல் ஆஸாத், வடகொரியாவின் கிம் ஜோங் இல் ஆகியோருடன் சாவேஸ் நல்லுறவை பேணியதன் காரணமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாடாகும்.

 பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து ஆட்சி கட்டிலில் அமர்ந்த சாவேஸ் ஏழைகளுக்காகவும், சாதாரண மக்களுக்காகவும் நடைமுறைப்படுத்திய நலத்திட்டங்கள் அவரை மக்கள் தலைவராக மாற்றியது. வளர்ச்சியடையாத நாடான வெனிசுலாவை வளரும் நாடுகளில் ஒன்றாக மாற்றியது சாவேஸின் திறமை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு, கல்வியறிவின்மை, கடுமையான நோய்கள் ஆகியவற்றை ஒழிக்க கொண்டு வந்த திட்டங்கள் பாராட்டைப் பெற்றன.அண்மையில் இயற்கை பேரழிவில் வீடுகளை இழந்தவர்களை தனது வீட்டில் தங்கச் செய்து அனைவரது கவனத்தையும் சாவேஸ் ஈர்த்தார். சாதாரண மக்களின் ஆதரவு இல்லையென்றால் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ பல தடவை மேற்கொண்ட சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெற்றிருக்க முடியாது.எதிர்கட்சியினர் ராணுவத்தை பயன்படுத்தியும், அமெரிக்காவின் ஆதரவோடும் சாவேஸை எதிர்கொண்ட பிறகும் மக்கள் ஆதரவு அவருக்கு பலத்தை தந்தது. 48 மணிநேரத்தில் ராணுவ புரட்சி தோல்வியை தழுவியது. சாவேஸ் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமர்ந்தார்.

 நாட்டின் வளமான எண்ணெயை பொருளாதார-அரசியல் ஆயுதமாக பிரயோகித்தார் சாவேஸ். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளான பிரிட்டன், இஸ்ரேல் ஆகியவற்றுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிடவும் சாவேஸ் தவறவில்லை. பேரழிவு ஆயுதம் என்ற பொய்யைக்கூறி சதாம் ஹுஸைனை அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் தனிமைப் படுத்தி தாக்குதல் நடத்தியபொழுது ஈராக் சென்று அவருக்கு ஒற்றுமை உணர்வையும், ஆதரவையும் தெரிவித்தார் சாவேஸ். 2009-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு கிடைத்தபொழுது அதனை கடுமையாக விமர்சித்தவர் சாவேஸ் ஆவார். தென் அமெரிக்காவிலும், மேற்காசியாவிலும், இந்தியாவின் கேரளத்தில் கூட சாவேஸால் ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளம்.

இந்நிலையில் சாவேஸ் தனக்கு புற்றுநோய் என்பதை வெளிப்படையாக அறிவித்தார். தனக்கும், கியூபா, அர்ஜெண்டினா நாட்டு இடது சாரி தலைவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட காரணம் அமெரிக்கா தான் என்று சாவேஸ் மருத்துவமனையில் வைத்து கூறியிருந்தார். சிகிட்சைக்காக க்யூபாவுக்கு
அடிக்கடி சென்ற சாவேஸ், நோய் விரைவில் குணமடையும் என்று அறிவித்தார். 2012-ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி நடந்த தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் சாவேஸ் வெற்றிப் பெற்றார். ஆனால் பதவி பிரமாணம் எடுக்க கூட அவரைப் பீடித்திருந்த நோய் அனுமதிக்கவில்லை.புதன் கிழமை மருத்துவமனையில் சாவேஸ் தனது இறுதி மூச்சை விட்ட பிறகு செய்தியை நம்ப முடியாமல் பலரும் வீதியில் இறங்கி அங்கலாய்த்தனர். சதாமை தூக்கிலிட்டு கொலைச் செய்த அமெரிக்கா, புற்றுநோய் அணுக்கள் மூலம் சாவேஸை கொலைச் செய்ததாக குறிப்பிட்ட சதவீத வெனிசுலா மக்கள் நம்புகின்றனர்.
-thoothuonline

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...