Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 04, 2011

நேர்முகத் தேர்வும் - வெற்றி பெறுதலும்!

ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வு என்பது, ஒரு குறிப்பிட்ட பணிக்கான, ஒரு குறிப்பிட்ட நபரை தேர்வு செய்யும் நடைமுறையில், அந்நபரைப் பற்றிய விவரங்களை அறியும் செயல்பாடாகும்.

பணிக்கான நேர்முகத்தேர்வு என்பது தொழில்முறை மதிப்பீடு சார்ந்த ஒரு அமைப்பு ரீதியான செயல்பாடாகும். ஒரு நபரை இன்டர்வியூ எடுப்பதானது, பேசுதல் மற்றும் குழு கலந்துரையாடல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி இருந்தாலும், கேள்வி - பதில் என்ற வாய்மொழி பகுதியின் மூலமாக, ஒரு பணிக்கு தேவையான பொருத்தமான நபரை அடையாளம் காண முடிகிறது என்று பணி அமர்த்தும் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த கேள்வி - பதில் பகுதியானது, நேரடியானதாகவோ, தொலைபேசி மூலமானதாகவோ அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலமானதாகவோ இருக்கலாம்.

இன்றைய நவீன உலகில், பணிக்கான இன்டர்வியூ என்பது, சிறிது காலத்திற்கு முன்பு இருந்ததைவிட சவாலானதாக மாறிவிட்டது. பணிக்கு தேவையான சரியான நபரை பெறும் செயல்பாடு சிக்கலானது என்பதால், ஆட்களை தேர்வு செய்யும் மனிதவள நிபுணர்கள், ஒரு நபரின் தனிப்பட்ட மதிப்பீடுகள், தகுதிகள், திறன்கள், குண நலன்கள் மற்றும் பணிக்கான பொருத்தங்கள் ஆகியவற்றை பற்றி நுட்பமான மதிப்பீடுகளை மேற்கொள்கின்றனர். சிறிதுநேரம் ஒரு நபரிடம் பேசிவிடுவதால் மட்டுமே அவர் ஒரு குறிப்பிட்ட பணிக்கு பொருத்தமானவரா? என்பதை கணித்துவிட முடியாது. எனவே, பல நிறுவனங்கள் இன்டவியூ செயல்பாட்டில் பலவித அம்சங்களை கடைபிடிக்கின்றன. இறுதி நேர்முகத் தேர்வுக்கு முன்னதாக சில ஆரம்பநிலை இன்டர்வியூ செயல்பாடுகள் நடைபெறுகின்றன.
சில நிறுவனங்கள் தங்களுக்கென சொந்தமாகவே, நன்கு பயிற்சிபெற்ற மனிதவள நிபுணர்களை வைத்துள்ளன. சில நிறுவனங்கள தங்களுக்கு பொருத்தமான ஆட்களை தேர்வுசெய்ய வெளி ஏஜென்சிகளின் உதவியை நாடுகின்றன. இந்த ஏஜென்சிகள் பலவிதமான நுட்ப முறைகளைப் பயன்படுத்தி, பணிக்கு பொருத்தமான நபர்களை தேர்வு செய்கின்றன.

இன்டர்வியூ செயல்பாடானது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடலாம். மேலும், பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும் அரசு ஏஜென்சிகளுக்கும், தனியார் ஏஜென்சிகளுக்கும் வித்தியாசங்கள் இருக்கலாம். பொதுவாக, சிறிய நிறுவனங்களின் இன்டர்வியூ செயல்பாடுகளை விட, பெரிய நிறுவனங்களின் செயல்பாடானது அதிக அடுக்குகளை கொண்டதாக இருக்கும்.

நேர்முகத் தேர்வின் பணி கூறுகள்

திட்டமிடுதல்

ஒரு இன்டர்வியூ என்பது முன்னேற்பாடு மற்றும் முன் திட்டமிடுதலுடன் கூடியது. இன்டர்வியூ நடைபெறும்போது, சில நெகிழ்வுத் தன்மைகள் பின்பற்றப்பட்டாலும், சரியான முடிவுகளைப் பெறும்பொருட்டு, இன்டர்வியூவின் அடிப்படை தன்மைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். நேரம், இடம், நிபுணர்களின் எண்ணிக்கை, இன்டர்வியூவில் இடம்பெறக்கூடிய பகுதிகள், அதற்கு தேவையான உபகரணங்கள் போன்ற விஷயங்களில் மாற்றம் இருக்காது. ஒரு நேர்முகத் தேர்வை எவ்வாறு வெற்றிகரமாக நடத்துவது என்பதைப் பற்றி அதுசார்ந்த நிபுணர்கள் திட்டமிடுவார்கள். ஒரு நேர்முகத் தேர்வு என்பது சம்பிரதாய ரீதியில் வெறுமனே கேள்வி-பதில்கள் அடங்கிய விஷயம் அல்ல. சரியான நபர்களிடம் சரியான நேரத்தில் பொருத்தமான கேள்விகளைக் கேட்டு அதன்படி முடிவு செய்வதே ஒரு இன்டர்வியூவின் நோக்கம்.

நோக்கம்

ஒரு நிறுவனம் தனக்கு பொருத்தமான பணியாட்களை தேர்ந்தெடுக்க நேரத்தையும், பணத்தையும் செலவழித்து இன்டர்வியூ நடத்துகிறது. எனவே, இது ஒரு விளையாட்டான காரியம் அல்ல. இந்த நேர்முகத் தேர்வில் உங்களின் குண நலன்கள், பணி தொடர்பான தொழில்நுட்ப அறிவு, பிரச்சினைகளை தீர்க்கும் சமயோசித திறன்கள் போன்றவை சோதிக்கப்படும். நிறவனத்திற்கு நிறுவனம், இன்டர்வியூ முறைகள் மாறினாலும், நோக்கம் ஒன்றுதான்.

கேள்வி-பதில் பகுதி

நேர்முகத் தேர்வில் இந்த கேள்வி-பதில் பகுதி முக்கியமான ஒன்றாகும். வாய்மொழியாக கேட்பதாகவும் இருக்கலாம், எழுத்து மூலமானதாகவும் இருக்கலாம். இந்த கேள்விகளுக்கு பொருத்தமான மற்றும் சமயோசிதமான பதில்கள் முக்கியம். கேள்விகள் கேட்கப்படும்போது மிகவும் நுட்பமாக கவனிக்க வேண்டும். பதில்கள் தெளிவாகவும், எளிமையாகவும் இருந்தால் இன்டர்வியூ எடுக்கும் நபர்கள் கவரப்படுவார்கள்.

இரட்டை வழி உரையாடல்

பொதுவாகவே, நேர்முகத் தேர்வு என்பது இரட்டைவழி உரையாடல் சார்ந்தது. பணி தேடும் ஒருவர், ஒரு நிபுணராலோ அல்லது பல நிபுணர்களாலோ கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுவார். இத்தகைய நடைமுறையில், இன்டர்வியூ குழப்பமின்றி செல்லும்பொருட்டு, குறிப்பிட்ட வகை கேள்விகளை குறிப்பிட்ட நிபுணரே கேட்பார். அதாவது, நேர்முகத் தேர்வுக்கு வந்துள்ள ஒவ்வொருவரிடமும், ஒரே வகையான கேள்விகளை ஒரு நிபுணரே கேட்பார். இதன்மூலம் ஒரு நபரை பற்றிய சரியான முடிவினை விரைவாக மேற்கொள்ள முடியும்.

சகஜநிலை

ஒரு நேர்முகத் தேர்வு என்பது சகஜநிலை உடையதாக இருத்தல் முக்கியம். பதட்டம், பயம் போன்றவை இருந்தால் நமக்கான பணியை நாம் பெற முடியாது. ஒரு பணிக்கான இன்டர்வியூ என்பது ராணுவத் தேர்வு போன்றதல்ல. அங்கே சகஜநிலை நிலவ வேண்டும். நேர்முகத் தேர்வை கண்டு பயப்பட வேண்டாம். அதை விரும்ப தொடங்குங்கள். பொருத்தமான சூழலில் நம்மை நாம் சிறப்பாக வெளிப்படுத்தி இன்டர்வியூ எடுக்கும் நிபுணர்களை திருப்திபடுத்தி, நமக்கான பணியை பெறுவதில் வெற்றிபெற வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...