Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 16, 2011

மாநிலங்களில் செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ்

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு வலு சேர்ப்பதாக இருந்தாலும், உண்மையில், அசாம் தவிர மற்ற மாநிலங்களில், காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து வருகிறது என்பதை காட்டுகிறது.
தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. பயங்கர இழுபறிக்கு பின், காங்கிரசுக்கு இக்கூட்டணியில் 63 இடங்கள் ஒதுக்கப்பட்டது. கட்சிக்குள் சீட் ஒதுக்கீடு செய்வதில் எழுந்த கோஷ்டி பூசல், கட்சியை சந்தி சிரிக்க வைத்தது. அப்போதே தமிழகத்தில், காங்கிரசின் தலையெழுத்தை மக்கள் கணித்து விட்டனர்.தேர்தல் பிரசாரத்திற்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, பொதுச் செயலர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் வந்தனர். இவர்களால், கட்சிக்கு செல்வாக்கு சேர்க்க முடியவில்லை. வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. தி.மு.க., தலைமையிலான கூட்டணியை ஒட்டு மொத்தமாக பின்னுக்குத் தள்ளி, அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்கத்தில் திரிணமுல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு கிடைத்த வெற்றி எளிதானது அல்ல; குறைத்தும் மதிப்பிட முடியாதது.டில்லியை அடி பணிய வைக்கும் அளவிற்கு, அரசியல் பலம், அதிகார பலம் படைத்தவர்கள். ஏற்கனவே, முதல்வராக இருந்த அனுபவம் ஜெயலலிதாவுக்கு உண்டு. ஆனால், மேற்கு வங்க மாநில முதல் பெண் முதல்வராக மம்தா அமரவிருக்கிறார்; அனுபவமில்லை.மத்தியில், தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தொடர, மம்தாவின் திரிணமுல் மற்றும் கருணாநிதியின் ஆதரவு முக்கியம். இவர்களில், தற்போது அதிக பலத்துடன் இருப்பவர் மம்தா. ஏற்கனவே, 2 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் மேற்கு வங்க மாநிலத்திற்கு உடனடியாக தேவைப்படுவது, மத்திய அரசின் நிதியுதவி.மம்தா கேட்கும் அனைத்து நிதியுதவிகளையும் செய்ய வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், ஆதரவை வாபஸ் பெறுவேன் என்ற குரலை மம்தா எழுப்புவார். மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், பிராந்திய கட்சிகளுக்கு அடிபணியும் கட்சியாக காங்கிரசின் செல்வாக்கு சரிந்துவிட்டது.இப்படி, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தனது செல்வாக்கை இழந்த காங்கிரஸ், கேரளாவிலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 72 இடங்களில் வெற்றி பெற்றது; இடதுசாரி கூட்டணி 68 இடங்களில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் 2006ம் ஆண்டு தேர்தலில், 24 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது, கூடுதலாக 14 இடங்களில் வென்று, 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.இத்துடன், கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கடந்த தேர்தலை விட 12 இடங்களை கூடுதலாக பெற்று, 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.கூட்டணியில் இருப்பவர்களை நம்பி, அவர்கள் கொடுக்கும் இடைஞ்சல்களை எதிர்கொண்டு, காங்கிரஸ் கட்சியால் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஆட்சி செய்ய முடியுமா என்பது சந்தேகமே.

கேரள காங்கிரசுக்கு, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலின் பிரசாரம் கை கொடுக்கவில்லை. முதல்வர் அச்சுதானந்தன் வயதானவர் என்ற ராகுலின் பேச்சும் பலிக்கவில்லை. இடதுசாரி எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக பலத்துடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. இது, காங்கிரசுக்கு நெருக்கடி தான்.

அசாம் மாநிலத்தில், முதல்வர் தருண் கோகாய் தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்றது என்றாலும், இந்த வெற்றி தருண் கோகாய்க்கு மட்டும் சேர வேண்டியது என்ற கருத்து எழுந்துள்ளது. உல்பா பிரிவினைவாத அமைப் பை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரவழைத்தது, இவரது வெற்றிக்கு முதல்படி என்று கூறப்படுகிறது.

அடுத்தது, ஆந்திராவில், கடப்பா லோக்சபா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும், புலிவெந்துலு சட்டசபை தொகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மனைவியும், ஜெகனின் தாயுமான விஜயலட்சுமி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இங்கு, காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி. மேலிட காங்கிரசின் உடனடி கவனம் தேவைப்படும் மாநிலமாக, ஆந்திர காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.


புதுச்சேரியில், முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி தலைமையிலான அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி, 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் இங்கு பலத்த தோல்வியை சந்தித்துள்ளது.சமீபத்திய சட்டசபை தேர்தல் முடிவுகள், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு வலு சேர்ப்பதாக இருந்தாலும், மாநிலத்தில் காங்கிரஸ் செல்வாக்கு இழந்து வருவது தெளிவாகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...