Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 05, 2011

கத்தரி வெயில் : சூடானது தமிழகம்

சென்னை: கத்தரி வெயில் தொடக்க நாளான நேற்று வேலூரில் 106 டிகிரியும், சென்னையில் 105 டிகிரி வெயிலும் நிலவியது. இந்நிலையில் அரக்கோணத்தில் ஐஸ்கட்டி மழை பெய்துள்ளது. கோடை காலத்தில் வரும் கத்தரி வெயில் காலம் நேற்று தொடங்கியது. இந்த காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்கத் தொடங்கிவிட்டது.


கடந்த வாரம் குமரிக் கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் காற்றுடன் மழை பெய்தது. இதனால் சில இ டங்களில் வெயிலின்தாக்கம் குறைந்து கடல் பகுதியில் இருந்து தரைப் பகுதி நோக்கி குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனால் அதிகாலைநேரங்களில் லேசான குளிர் நிலவியது.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மேலும் லேசான காற்று சுழற்சி ஏற்பட்டது. இதன் காரணமாக கேரளாவில் பலத்த மழை பெய்தது. இதன் சாரல் மழைபோல் தமிழகத்திலும் கோத்தகிரியில் 90 மிமீ மழை பெய்துள்ளது. சேலம், தருமபுரி மாவட்டங்களில் 80 மிமீ மழை பெய்துள்ளது. மாரண்டஹள்ளி, கரூர், பரமத்தி, கோவை ஆகிய இடங்களில் 70 மிமீ மழை பெய்துள்ளது. இதற்கிடையே நேற்று மதியம் வட தமிழகத்தில் அடங்கிய திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்ட பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக அரக்கோணத்தில் பெய்த மழையில் வானில் இருந்து ஐஸ்கட்டிகள் விழுந்தன. அதை மக்கள் ஆர்வமுடன் எடுத்து பார்த்தனர். ஒருபுறம் இப்படி இருக்க சென்னையில் மீனம்பாக்கத்தில் நேற்று 105 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 104 டிகிரியும் வெயில் கொளுத்தியது. அதேபோல வேலூரில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது.

இது தவிர மதுரை 93.2, கோவை 90, திருச்சி 100.4, சேலம் 93, கடலூர் 100.4, புதுச்சேரி 102.4, நாகப்பட்டினம் 99, பாளையங்கோட்டை 104, தூத்துக்குடி 97, கன்னியாகுமரி 95, வால்பாறை 82, கொடைக்கானல் 68 டிகிரியும் வெயில் நிலவியது. கத்தரி வெயில் தொடக்க நாளான நேற்று வெயில் கொளுத்தியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெயிலில் செல்லவே பலர் அச்சம்காட்டினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...