தமிழகத்தில் தற்போது புத்துயிர் பெற்று வரும் ஒரே தொழில் ரியல் எஸ்டேட் தொழில். இந்த தொழிலில் ஈடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும் பணம் கொண்ட முதலைகள் இந்த தொழிலில் கொடி கட்டி பறந்து வருகின்றனர்.
இதில் கொடுமை என்னவென்றால் வடநாட்டினரும், பெரும் பண முதலைகளும் விளைநிலங்களை அழித்து மனைகளாக மாற்றி வருகின்றனர். இதனால் விவசாயத்தை நம்பியுள்ள கிராமத்தினரின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.
சென்னை முதல் குமரி வரை விளைநிலங்களை மனைகளாக ஆக்கி வரும் இந்தப் பண முதலைகள், ஏழ்மையில் இருப்பவர்களை குறிவைத்து அவர்களிடம் பண ஆசை காட்டி குறைந்த விலையில் விளைநிலங்களை பெற்றும் வருகின்றனர்.
தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு அரசு குறிப்பிட்ட இடங்களில் நிலங்களை ஒதுக்கி கொடுக்கிறது. இது விளைநிலங்கள் என்று கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. இதனால் அந்த நிலங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்குவதில் தமிழக அரசு பின்வாங்கி விடுகிறது.
தற்போது சென்னையில் விமான நிலைய விரிவாக்கத்தில் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டமே நடத்தினர். இதனால் அந்த நிலங்களை கையகப்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கியது. தற்போது தமிழகத்தில் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் கொடைக்கானலிலும் இதே நிலை தொடர்ந்து வருகிறது.
மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்ல ரியல் எஸ்டேட் சுயதொழிலில் ஈடுபடுவோரையும் பெரிதும் கவர்ந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
பெரும் பணம் முதலைகளும், வடநாட்டினரும், ரியல் எஸ்டேட் துறையினரும் கொடைக்கானலில் உள்ள விளைநிலங்களை வாங்கி பிளாட்டுகளாக மாற்றி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
''கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடங்களில் நன்றாக விவசாயம் நடந்து வந்துக் கொண்டிருந்தது. தற்போது அந்த இடங்களை பிளாட் போட்டு விற்பனை செய்து விட்டதால் விவசாயம் செய்வதற்கே இடம் இல்லை'' என்று விவசாயிகள் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பூண்டு, கேரட், உருளைகிழங்கு போன்ற பயிர்களின் விவசாயம் நலிவடைந்து வருவதாக கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், அதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் பயிர் செய்ய நிலமே இல்லாத நிலை ஏற்பட்டு விடும் என்று வேதனையுடன் கூறுகின்றனர்.
நல்ல விளைநிலங்கள் விவசாயத்திற்கு உகந்தது அல்ல என்று போலியாக சான்று பெற்று நிலங்களை கையப்படுத்தப்படுவதாகவும், பச்சைபசேல் என்று காணப்படும் நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாகவும், குடியிருப்பு கட்டிடங்களாகவும் மாறி வருவது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
பண பலத்தால் விதிமுறைகளை மீறி விளை நிலங்களையும், வளங்களையும் ஆக்கிரமிக்கும் கும்பல் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாகும்.
1 கருத்துகள்:
விளை நிலங்கள் எல்லாம், விலை நிலங்களாக மாறி வரும் அவலம் தடுத்து நிறுத்தப்படாவிடில், உணவு பஞ்சம், இந்தியாவில் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...