Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 04, 2013

கொடுமையான பாலியல் குற்றத்துக்கு தூக்குத் தண்டனை : அமைச்சரவை முடிவு !

கொடுமையான பாலியல் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தண்டனையை கடுமையாக்குவது,துரிதமாக வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பளிப்பது பற்றி பரிந்துரைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை கடந்த 23 ஆம் தேதி மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அதில், பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், கும்பலாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கும்படி பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

ஆனால், மரண தண்டனை விதிக்க வர்மா குழு பரிந்துரை செய்யவில்லை. இந்நிலையில், வர்மா குழுவின் அறிக்கையை பரிசீலிக்க மத்திய அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் டெல்லியில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங்தலைமை தாங்கினார். கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்து அந்த பெண்ணுக்கு கடுமையான காயம் ஏற்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்க அவசர சட்டம் வழி செய்கிறது.இப்படி ஆயுள் தண்டனை பெறுபவர்கள் சாகும்வரை சிறையிலேயே இருக்கவேண்டும்.முன்கூட்டியே விடுதலை ஆக முடியாது. இந்த அவசர சட்டத்தில், பாலியல் பலாத்கார குற்றம் என்பதற்கு பதிலாக பாலியல் வன்முறை குற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுமையான பாலியல் குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படும். இது தவிர பெண்கள் மீதான ஆசிட் வீச்சுக்கும் அவசர சட்டத்தில் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆசிட் வீசுபவருக்கு
குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கலாம். பெண்களை மானபங்கப்படுத்துவோருக்கு தற்போது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இது இனி 5 ஆண்டாக அதிகரிக்கப்படும். பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இப்போது, இந்த குற்றத்துக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த அவசர சட்டம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டதும் அமலுக்கு வரும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...