![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgckvEFztnFWCiqaZaXsHl0pQjUVyP23I7lkrVVSKel3WCBkrvA5UrCXSiM7U-v97rZpk8kE1YOCMhc_HStyfylqDMe8QJW4-UXOVgPXee-jNHXdgDx7nYUnWcu3KF0ztmS0Y-xqyGpG7jM/s320/madhina+ifthar.jpg)
நபிகளாரின் பள்ளி என்று அழைக்கப்படும் மதீனா பள்ளிவாசலில் நோன்புக்காலத்தில் தினமும் பத்து இலட்சம் மக்கள் நோன்பு துறக்க ‘இஃப்தார்’ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவாம்.
விருந்தோம்பலுக்கும் உபசரிப்புக்கும் பெயர்பெற்ற மதீனாவாசிகள் நோன்பாளிகளுக்கு உணவு வழங்கி மகிழ்வதை பெருமிதமாகவும் பாக்கியமாகவும் கருதுகின்றனர். இவ்வகையில் நாளொன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் சவூதிரியால்கள் செலவிடப்படுகின்றதாம்.
மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரம் என்னும் பெரிய பள்ளியில் நோன்பு துறக்க பேரீச்சம் பழங்களும், சவூதி கஃவா என்னும் காஃபி வகை பானமும் மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள “புனித பள்ளிகள் துறை அமைச்சகம்”, மதீனாவாசிகளின் விருந்தோம்பல் உணர்வுக்கு மதிப்பளித்து, அவர்கள் விருப்பத்திற்கேற்ப நோன்பு துறப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அனுமதித்துள்ளது. இத்தகவல்களை அத்துறையின் மக்கள் தொடர்பாளர் அப்துல் வாஹித் அல்ஹத்தாப் தெரிவித்துள்ளார்.
மதீனாவாசிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 பேர் கொண்ட குழு, மாலைநேரத்தொழுகைக்குப் பிறகு இதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறது. பகுதி, பகுதியாக, குழு,குழுவாக தினமும் சுமார் 10 இலட்சம் (1மில்லியன்) மக்களுக்கு இஃப்தார் உணவு வழங்கப்படுகிறது.
ஈத்தம்பழம், தயிர், ஷ்ரைக் எனப்படும் ரொட்டி, டக்கா எனப்படும் கஞ்சி போன்ற உணவு, சவூதி கஃவா ஆகிய உணவு வகைகள் விநியோகிக்கப்படுகின்றனவாம். மட்டுமின்றி, 20,000 குளிர்விகளில் புனித ஜம்ஜம் நீரும் வழங்கப்படுகிறது. பெருமளவு மதீனா பெண்களும் இதில் பங்கெடுக்கின்றனர்.
12 நிமிடங்கள் நீடிக்கும் இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின் 2,000க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மின்னணு துடைப்பான்கள் மூலம் சுத்தம் செய்கின்றனர். அதன் பின் மஃக்ரிபு தொழுகை முடிந்த பின்னாலும், ஈத்தம் பழங்களும், கஃவா பானமும் வழங்கப்படுகிறதாம்.
நோன்பு துறப்பு மட்டுமின்றி, நோன்பு வைப்பதற்கான சஹர் உணவும், இந்திய மற்றும் சவூதி உணவு வகைகளாக, சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு வழங்கப்படுகிறதாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...