Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 26, 2011

புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimester' கல்வி முறை அறிமுகம்!

சென்னை: பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக கல்வித் திட்டத்தில் சில மாற்றங்களை சட்டசபையில் ஜெயலலிதா இன்று அறிவித்தார். அதன் விவரம்:

அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது என்ற இந்த அரசின் நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும்; ஆக மொத்தம் 775 பள்ளிகளை ரூ. 419.60 கோடி செலவில் நிலை உயர்த்த நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிகளைத் தரம் உயர்த்துவதினால் மட்டும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியாது. தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்பதை எனது அரசு உணர்ந்துள்ளது. எனவே, நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும், ஆசிரியர்- மாணவர் விகிதத்தின் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவெடுத்து உள்ளது.
அதன்படி, 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்களை, ரூ. 315.30 கோடி செலவில் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்த ஆணையிட்டுள்ளேன்.

உண்மையான சீரான கல்வி என்பது பாடப் புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில், உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றுக்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

இதனால் இப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.99.29 கோடி செலவு ஏற்படும்.

முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, சமச்சீர் கல்விக்கு மிகவும் இன்றியமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள். பொதுப் பாடத் திட்டம் மட்டும் சமச்சீர் கல்வி ஆகாது.

இதனை நன்கு உணர்ந்த எனது அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இந்தக் கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை மிகவும் உவகையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்வி ஆண்டில் ரூ.1,082.71 கோடி மதிப்பீட்டில் இவை ஏற்படுத்தப்படும்.

மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.

மேலும், நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, ரூ. 90.70 கோடி செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

1985ம் ஆண்டிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள்; கற்றலுக்குத் தேவையான ஜியோமென்ட்ரி பாக்ஸ், கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் போன்றவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக ரூ.119.48 கோடி செலவிடப்படும்.

சுத்தம் மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் பள்ளிக் கூடங்களில் அமையப் பெற வேண்டும் என்பது எனது திடமான எண்ணம் ஆகும். எனவே, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதன் காரணமாக, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 60 கோடி செலவு ஏற்படும்.

அதிமுக தேர்தல் அறிக்கையில், குழந்தைகளின் புத்தகச் சுமை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது, Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும்.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன், 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.

கணினி மூலம் கற்பது பள்ளிகளில் தற்போது இன்றியமையாததாக உள்ளது. மாணவ, மாணவியர்கள் தமது பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, பற்பல குறிப்புகளையும் பாடத்திற்கு ஏற்ற மேற்கோள்களையும் மற்றும் தேவையான தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு கணினி முக்கியமான ஒன்று என்பதனை உணர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் +1 மற்றும் +2 பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ளேன்.

அதனைத் தொடர்ந்து, எல்லா வகுப்புகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் விதத்திலும், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்/ ஆசிரியைகளின் வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும் ICT@Schools (Information and Communication Technology@Schools), Tamil Nadu என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.

இத்திட்டத்தில் எல்லா வகுப்புகளுக்கும் ஆன பாடப் புத்தகங்களின் உட்பொருளை கணினிமயமாக மாற்றி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்க வழிவகை செய்யப்படும். எல்லா மாணவ, மாணவியர்களும் பயன் அடையும் பொருட்டு சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கைகோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைய இத்திட்டத்தின் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்த அவைக்கு பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக் கல்வித் துறை மூலம் எனது அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத்
திட்டங்களால், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், உரிய உட்கட்டமைப்பு
வசதிகளுடன் கூடிய பள்ளிகளில், மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்கும் நிலை
உருவாகி, உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க வழி வகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...