Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 06, 2011

ஆறு மாதங்களில் மின்கட்டணம் உயர்கிறது?

சென்னை: விவசாயிகள் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின் இணைப்புகளுக்கு, 100 சதவீத மீட்டர் பொருத்த வேண்டுமென்றும், ஆறு மாதங்களில், கட்டண விகிதத்தை மாற்றி உயர்த்த வேண்டுமென்றும், தமிழக மின்வாரியத்திற்கு, மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் நுகர்வோர் அசோசியேஷன் மற்றும் சதர்ன் இந்தியா மில்ஸ் லிமிடெட் சார்பில், புதுடில்லி மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பாய உறுப்பினர்கள், நீதிபதி பி.எஸ்.தத்தா மற்றும் ராஜேஷ் நாத் பெஞ்ச், அளித்த தீர்ப்பு வருமாறு:
தேசிய மின்சார சட்டம் மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, அனைத்து மாநில மின் வாரியங்களும், ஒவ்வொரு நிதி ஆண்டிலும், தாங்கள் எதிர்பார்க்கும் வருவாய் அறிக்கையை, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன், நவம்பர், 30க்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதன் படி, கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
ஆனால், 2003 முதல், ஏழு ஆண்டுகளாக தமிழக மின்வாரியம், எதிர்பார்ப்பு வருவாய் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை; கட்டணமும் உயர்த்த வில்லை. இதுகுறித்து, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கவில்லை. இனி, ஒவ்வொரு ஆண்டும், நவம்பர், 30க்குள், எதிர்பார்ப்பு வருவாய் அறிக்கையை, தமிழக மின்வாரியம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். தமிழக மின்வாரியம், கோடிக்கணக்கான ரூபாய் கடனில் தவிக்கும் நிலையில், ஏழு ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தவில்லை. கடந்த ஜூலையில், சில பிரிவினருக்கு மட்டும் உயர்த்தி, 79 சதவீத நுகர்வோருக்கு உயர்த்தாதது ஏன்? இந்த நிலை தொடர்ந்தால், மின்வாரியத்தால் எதிர்காலத்தில் சரியாக மின்சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்படும். வருவாய் எதிர்பார்ப்பு அறிக்கை மற்றும் கட்டண உயர்வு விண்ணப்பத்தை குறிப்பிட்ட காலத்திற்குள், மின்வாரியம் தாக்கல் செய்யாவிட்டால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தாமாக முன்வந்து (சுவோமோட்டோ) நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் சப்ளையின் தரம், செலவுகள் அடிப்படையில், கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகள் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின் சப்ளையின் அளவை கணக்கிட, பல உத்தரவுகள் பிறப்பித்த பின்னும், தமிழக மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. மின்பகிர்மானத்தால் ஏற்படும் இழப்பு, 18 சதவீதம் என, மின்வாரியம் கூறியது, சரியான மதிப்பீடல்ல. கடன்களை குறைத்து மின்வாரியம் சரியாக இயங்க, 2012க்குள் அனைத்து விவசாயம் மற்றும் குடிசை சப்ளைகளுக்கு, 100 சதவீத மீட்டர்கள் பொருத்த வேண்டும். மின்சப்ளையின் செலவுக்கேற்ற கட்டணத்தை உயர்த்த, ஆறு மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முறையாக கண்காணித்து, உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிலை என்ன? : மின்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தீர்ப்பாய உத்தரவுப்படி, இலவச மின்சப்ளைக்கு மீட்டர்கள் பொருத்த வேண்டும். குறிப்பிட்ட அளவை மீறி, மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆண்டு வருவாய் எதிர்பார்ப்பு அறிக்கைப்படி, அனைத்து தரப்புக்கும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்துவதில், தமிழக அரசுக்கு பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யுமா அல்லது தீர்ப்பாய உத்தரவை அமல்படுத்துமா என தெரியவில்லை. ஆனால், இந்த நடவடிக்கைகளால், மின்வாரியத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...