Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 18, 2011

நான்கு வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டம் : உலகளாவிய ஒப்பந்தம் கோரும் பணி தீவிரம்

சென்னை : சென்னையில் நான்கு வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான உலகளாவிய டெண்டர் விரைவில் கோரப்படவுள்ளது.

சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து தேவையைக் கருத்தில் கொண்டு, குறைந்த செலவில், விரைந்து செயல்படுத்தும் வகையில், மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என, கவர்னர் அறிக்கையில் கூறப்பட்டது. முதல் கட்டமாக, 111 கி.மீ., தூரத்திற்கு மோனோ ரயில் அமைக்கப்படும் எனவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், புதிதாக அமையவுள்ள மோனோ ரயில் பாதை குறித்த ஆய்வு பணி, சென்னை பல்லவன் போக்குவரத்து ஆய்வுக் குழுவிடம், தமிழக அரசு அளித்தது. சென்னை மாடி ரயில் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் செல்லாத வழித்தடங்களில், மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதன்படி, வண்டலூரில் இருந்து ஆவடி வழியாக புழல் (54 கி.மீ.,), வண்டலூரிலிருந்து கிழக்குத் தாம்பரம் வழியாக வேளச்சேரி(23 கி.மீ.,), பூந்தமல்லியில் இருந்து போரூர் வழியாக கத்திப்பாரா வரை(54 கி.மீ.,), பூந்தமல்லியிலிருந்து வளசரவாக்கம் வழியாக, வடபழனி வரை (54 கி.மீ.,)என நான்கு வழித்தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மொத்தம், 111 கி.மீ., தூரம் மோனோ ரயில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மோனோ ரயில் திட்டத்தை கட்டி, பராமரித்து, பின்னர் ஒப்படைக்கும் முறையில், இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, உலகளாவிய ஒப்பந்தம் கோரும் பணியில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பழைய திட்டம் : கடந்த 2006ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது, மோனோ ரயில் திட்டம் கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அதற்காக, திட்டம் செயல்படுத்துவதன் சாத்தியக் கூறுகள் குறித்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம் ஆய்வு செய்தது. அதன்படி, குன்றத்தூர், பூந்தமல்லி, மாதவரம் போன்ற புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு எளிதில் வரும் வகையில், மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தலாம் என, சி.எம்.டி.ஏ., அறிக்கை சமர்ப்பித்தது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட வழித்தடத்தில், மெட்ரோ ரயில் செல்லும் பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் மோனோ ரயில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...