Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 06, 2011

அமெரிக்காவில் அடி... இந்தியாவில் வலி... அதிர்ந்தது உலக பங்கு வர்த்தகம்

மும்பை,: 'தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரிகட்டும்' என ஒரு பழமொழி உண்டு. இது எதற்காக சொல்லப்பட்டது என்ற ஆய்வில் நாம் ஈடுபடாமல், எங்கோ நடக்கும் ஒரு செயல், மற்ற இடங்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை மட்டும் இதன் மூலம் அறியலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, உலக பங்குச் சந்தை நிலவரம் உள்ளது.

சென்ற வெள்ளியன்று, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு நிலை, அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் பொருளாதாரம், கடுமையாக சரிவடையும் என்ற அச்சப்பாட்டால், கடந்த வியாழக்கிழமையன்று அந்நாட்டின் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சி கண்டது.

இதனை தொடர்ந்து, வெள்ளியன்று நமக்கு முன்பாக, வர்த்தகம் தொடங்கப்பட்ட ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் பங்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது. இந்த சுனாமியின் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் அதிர்வை அளித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' வர்த்தகத்தினிடையே 702 புள்ளிகள் வரை சரிவடைந்து போனது. இது, 25 மாதங்களில் இல்லாத அதிகபட்ச குறைந்த அளவாகும்.இந்நிலையில், மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலர், நம்நாட்டின் பொருளாதாரம் வலுவாகவே உள்ளது. சந்தையில் சரிவு நிலை என்பது இதர நாடுகளின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ளது என்று அறிவித்தார். இதையடுத்து, 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி' ஆகிய குறியீட்டு எண்கள் அதிக சரிவிலிருந்து மீண்டன.
வெள்ளியன்று இறுதியாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 387 புள்ளிகள் சரிவடைந்து, 17,305 புள்ளிகளிலும்,'நிப்டி' 121 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 5,5211 புள்ளிகளிலும் நிலை கொண்டன.ஏன் இந்த அளவிற்கு வீழ்ச்சி கண்டது? அமெரிக்க பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும் என்ற அச்சப்பாடு ஒரு புறம் இருக்க, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போலானது. இந்த பொருளாதார சரிவு நிலை, சீனாவின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சப்பாடு உள்ளது.அமெரிக்க பங்குச் சந்தைகளின் நிலவரத்தால், நம்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறைதான் அதிகம் பாதிப்புக்குள்ளானது. வெள்ளியன்று இத்துறைக்கான குறியீட்டு எண் 3.9 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்திருந்தது.

மேலும், கட்டுமான துறை (3.1 சதவீதம்), மின்சாரம் (3.1 சதவீதம்) ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்து போயின. உலக நிலவரம்: சென்ற வாரம் மட்டும், உலக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு நிலையால், உலகளவில், நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 2.50 லட்சம் கோடி அளவிற்கு இழப்பை கண்டன. இத்தொகை, அமெரிக்கா வரும் பத்து வருடங்களில், அரசு செலவுகளை குறைக்க வேண்டும் என்று மதிப்பிட்ட அளவாகும்.

கச்சா எண்ணெய்: மிகப்பெரிய சரிவு நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது மட்டும்தான் தற்போது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. நடப்பு வாரத்தில் மட்டும் இதன் விலை, 11 சதவீதம் குறைந்துள்ளது. நம்நாடு, மொத்த பெட்ரோலிய பொருள்களுக்கான தேவையில், 80 சதவீதத்தை இறக்குமதி செய்து கொள்கிறது. இதன் மதிப்பு, 4.50 லட்சம் கோடி ரூபாயாகும். தற்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. அதற்கேற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைத்தால், அது உள்நாட்டில் பணவீக்கத்தை வெகுவாக குறைப்பதுடன், பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படவும் வழிவகுக்கும்.புதிய வெளியீடுகள்: அண்மையில், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்கிய, எல் அண்டு டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வரும் 10ம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தை நிலவரம் நன்கு இல்லை என்றாலும், சரியாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இதன் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.இன்வென்சர்ஸ் குரோத் நிறுவனத்தின் பங்குகள் இவ்வாரம், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. தொடக்கத்தில், 117 ரூபாய்க்கு, விலை போன இதன் பங்கு ஒன்று, பின்பு 225 ரூபாய் வரை சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.என்ன பங்குகள் வாங்கலாம்? இப்பகுதியில், வாங்குவதற்கு சிறந்தவை என பல நிறுவனங்கள் குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய சந்தை நிலவரத்தால், இவற்றின் பங்குகளின் விலை,வாங்கிய தொகையை விட குறைந்திருக்க கூடும். இது குறித்து அச்சப்படாமல், அந்நிறுவனப் பங்குகளை மேலும், சிறிதளவு வாங்கி உங்கள் தொகுப்பில் வைத்துக் கொள்ளலாம். அது நீண்ட கால அடிப்படையில் பயனளிக்கும். தற்போதைய நிலையில், ஜெயின் இரிகேஷன்ஸ், ஆஸ்ட்ரால் பாலிடெக்னிக், எலிகான் இன்ஜினியரிங் போன்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம்.

வரும் வாரம் எப்படி இருக்கும்? ஸ்டாண்டர்ட் அண்டு புவர் நிறுவனம், அமெரிக்கா குறித்த தரக்குறியீட்டை 'ஏஏஏ' என்ற அளவிலிருந்து, 'ஏஏ+' ஆக குறைத்துள்ளது. ஆனால் குறைந்த கால அடிப்படையிலான தரக்குறியீட்டை மாற்றவில்லை. இது, பங்கு சந்தைகளை, வரும் திங்களன்று எப்படி பாதிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

திங்களன்று நமக்கு முன்பு வர்த்தகம் தொடங்கும், இதர ஆசிய பங்குச் சந்தைகளின் நிலவரத்தை பொறுத்தே, நம்நாட்டின் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...