Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 01, 2011

வீராணம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது எப்போது : தள்ளிப் போவதால் விவசாயிகள் புலம்பல்

சிதம்பரம் : வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் துவங்கி, தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வரை அமைச்சர்களின் தேதி கிடைக்காததால் தண்ணீர் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போகிறது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடியை துவக்க முடியாமல் உள்ளனர்.காவிரி டெல்டா கடைமடை பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் தண்ணீர் திறப்பு காலதாமதமாகியது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் ஜூன் 12ம் தேதிக்கும் முன்பாக 6ம் தேதியே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணையில் தேக்கப்பட்டு கடந்த மாதம் 29ம் வீராணத்திற்கு திறந்து விடப்பட்டது. விராணம் நிரம்பியதையொட்டி கடந்த 12 ஆண்டுகளில் ஜூலை மாதம் வீராணத்தில் இருந்து சம்பா சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுகிறது என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.ஆனால் வீராணம் பாதியளவு நிரம்பியதுமே கடந்த ஜூலை 10ம் தேதி அவசர, அவசரமாக சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி துவங்கியது.
இதையறிந்த விவசாயிகள் மேட்டூரில் இருந்து தண்ணீர் குறைவாகவே வருவதால் பாசனத்திற்கே போதுமானதாக இல்லை. விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.மாவட்ட அமைச்சர்களுக்கு தெரியாமல் எப்படி சென்னைக்கு கொண்டு செல்லலாம் என அவர்களும் கோபப்பட, அன்று இரவே சென்னைக்கு கொண்டு செல்வது நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட அமைச்சர்கள் சம்பத், செல்வி ராமஜெயம் பங்கேற்று விழா நடத்தப்பட்டு மீண்டும் சென்னைக்கு தண்ணீர் அனுப்பும் பணி துவக்கி வைக்கப்பட்டது.சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் ஆர்வம் காட்டும் அதிகாரிகள், விவசாயிகளுக்கு காட்டவில்லை என கோபமடைந்த சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள், பாசனத்திற்கு வீராணத்தில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு ஜூலை 27ம் தேதி தண்ணீர் திறப்பது என்றும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 30ம் தேதி தண்ணீர் திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.அதன்படி 30ம் தேதி அமைச்சர்கள் சம்பத், செல்வி ராமஜெயம் ஆகியோர் தண்ணீர் திறப்பதாக இருந்தது. ஆனால் திடீரென தண்ணீர் திறப்பு ஆகஸ்ட் 2ம் தேதிக்கு (நாளை) மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.அமைச்சர்களுக்கு நேரம் கிடைக்காமல் பிசியாக இருப்பதால் தண்ணீர் திறப்பு விழா தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை ஆர்.டி.ஓ., அல்லது டி.ஆர்.ஓ., அளவிலான அதிகாரிகள்தான் திறந்து வைப்பார்கள். கலெக்டர்கள் கூட இதுவரை திறந்து வைப்பதில்லை. ஆனால் அமைச்சர்கள் வருகைக்காக தண்ணீர் திறப்பு ஒத்தி வைக்கப்படுவதால் விவசாயிகள் வேதனையில் புலம்புகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...