Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 05, 2011

ஊழியர் ஸ்டிரைக் வங்கிகள் முடங்கின : பண பரிவர்த்தனை, வர்த்தகம் பாதிப்பு!

புதுடெல்லி : நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கி தொடர்பான பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி துறையில் தனியார் முதலீட்டை அதிகரிப்பது, வங்கிப் பணிகளை அவுட்சோர்சிங் செய்வது உள்பட பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கந்தல்வால் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், அதிகாரிகளின் வேலை நேரம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்னைகளும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என ஊழியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என ஊழியர் சங்கங்கள் முடிவு செய்தன. இதையடுத்து, நேற்று முன்தினம் மத்திய அரசின் நிதி சேவை செயலாளர் மற்றும் இந்திய வங்கிகள் சங்க தலைவர் ஆகியோர், வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (யுஎப்பியு) பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, திட்டமிட்டபடி இன்று வேலை நிறுத்தம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கிகள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊழியர்கள் யாரும் வராததால் பண பரிவர்த்தனை, வர்த்தகம் உள்ளிட்ட வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கின.

இதுகுறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்க பிரதிநிதி விஷ்வாஸ் உதகி கூறுகையில், ' வங்கிகளை தனியார் மயமாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தம் நடக்கிறது. இதில் நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார், வெளிநாட்டு, கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட 10 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். ஸ்டிரைக்கால் வங்கி பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது' என்றார்.

சென்னையில் வங்கிகள் அதிகமாக காணப்படும் பிராட்வே உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான வங்கிகளின் முன்பாக ‘வங்கிகள் இன்று செயல்படாது’ என்று அறிவிப்பு பலகைகள் தொங்க விடப்பட்டிருந்தன. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக வங்கிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் வெங்கடாசலம் கூறியதாவது: நாடு முழுவதும் 65 ஆயிரம் வங்கி கிளைகளும், தமிழகத்தில் 5,500 வங்கி கிளைகளும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் 60 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஸ்டிரைக்கை தொடர்ந்து அடுத்த கட்டமாக பெங்களூரில் வரும் 10-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏடிஎம் சேவை பாதிப்பு

வங்கி ஊழியர் ஸ்டிரைக் அறிவிப்பை தொடர்ந்து நேற்றிரவு முதலே ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் நேற்று நள்ளிரவுக்கு மேல் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. நகரில் பல ஏடிஎம்கள் இன்று மூடப்பட்டிருந்தன. இதனால் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். சில தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியருக்கு வங்கிகள் மூலம் சம்பள பட்டுவாடா செய்கின்றன. அந்த நிறுவன ஊழியர்களும் சம்பளம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

நாளை சனிக்கிழமை என்பதால் வங்கிகள் அரை நாள் மட்டுமே இயங்கும். ஊழியர்கள் பணிக்கு திரும்பினாலும் பணிகள் முழுமையாக நடக்க வாய்ப்பில்லை. அடுத்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். அதனால், திங்கட்கிழமையில் இருந்துதான் வங்கிப் பணிகள் சீராகும் என தெரிகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...