Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 15, 2011

சட்டம் ஒழுங்கு, தடையற்ற மின்சாரம், கட்டுக்குள் விலைவாசி: மக்கள் ஆர்வம்

மக்களின் கடும் அதிருப்தியை சந்தித்த, தி.மு.க., ஆட்சிக்கு, மக்கள் முடிவு கட்டியுள்ளனர். அடுத்து அமையும், அ.தி.மு.க., ஆட்சியிடம் மக்கள் அதிகளவு எதிர்பார்த்து உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக நடந்த, தி.மு.க., ஆட்சியில், மின்வெட்டு, எங்கும் ஊழல், ஸ்பெக்ட்ரம் விவகாரம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, உள்ளாட்சி பிரதிநிதிகளின் அட்டகாசம், நில ஆக்கிரமிப்புகள் போன்றவற்றால் அதிருப்தியடைந்திருந்த மக்கள், இந்த தேர்தலில், தி.மு.க.,வை படுதோல்வி அடையச் செய்துள்ளனர்.அடுத்து அமையும், அ.தி.மு.க., ஆட்சி, இவற்றை எல்லாம் சரிசெய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதலில், மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண, அ.தி.மு.க., அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அடுத்த மூன்று மாதங்களுக்கு காற்றாலை மின்சாரம் கிடைக்கும் என்பதால், அதை பயன்படுத்தி மின்வெட்டை குறைக்கலாம். அதேநேரத்தில், புதிய மின் உற்பத்தி திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால், காற்றாலை மின்சாரம் நின்றவுடன், மீண்டும் பழைய நிலைக்கு தமிழகம் போய்விடும்.

தமிழகத்தின் நிதிநிலைமை கடந்த ஐந்தாண்டுகளில் மிகவும் சீர்குலைந்து விட்டது. தற்போதைய நிலையில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. எனவே, நிதிநிலையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலவசங்கள் அதிகம் வழங்குவது ஓட்டுக்காக மட்டுமே. ஆனால், இலவசங்கள் பற்றிய அறிவிப்புக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிந்து விட்டது. எனவே, அ.தி.மு.க.,வும் தன் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட இலவசங்கள் பற்றிய அறிவிப்புகளை, உடனே செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டக் கூடாது. முதலில் நிதிநிலையை சீர் செய்துவிட்டு, அதன்பின் இலவசங்களை வழங்கலாம்.

அடுத்ததாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நல்ல போலீஸ் அதிகாரிகள் பலர் இருந்தும், ஆளுங்கட்சிக்காரர்களின் மிரட்டல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை இருந்தது. குறிப்பாக, மதுரை உட்பட தென் மாவட்டங்களில், ஆளுங்கட்சியினரின் வேலைக்காரர்களாகவே போலீசார் செயல்பட்டனர்.சில அமைச்சர்கள், தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யாராவது சொத்து வாங்கினால் கூட, தங்களிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வைத்திருந்தனர். இதை எல்லாம் முறியடித்து, போலீசாருக்கு முழு அதிகாரம் வழங்கி, தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும்.

அதேபோல, அதிகளவில் ஊழல் செய்து சொத்துக்களை குவித்து வைத்துள்ள, "மாஜி'யாகிவிட்ட, அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இவை தவிர, வேளாண்மை துறையின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழகம் தொழில் துறையில் வளர்ந்துள்ள போதிலும், வேளாண்மை வளர்ச்சி மிகவும் மோசமாக உள்ளது. இத்துறையில் நடந்த ஊழல்களை களைந்து, விவசாயிகளுக்கு உண்மையான பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இதேபோல, கல்வி, சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி, மக்களுக்கு அதன் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்தால், அரசுக்கு கெட்ட பெயர் வராது. அடுத்தடுத்து வரும் தேர்தல்களை தைரியமாக சந்திக்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...