Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 12, 2011

ஓட்டு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு : 234 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு ஆரம்பம்

""வழக்கமான ஓட்டுஎண்ணிக்கையை விட முடிவுகளை வெளியிட, 10 முதல் 15 சதவீதம் கூடுதல் நேரம் ஆகும்,'' என, தலைமை தேர்தல் அதிகாரிபிரவீன்குமார் தெரிவித்தார்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்துபிரவீன்குமார் கூறியதாவது:தமிழகத்தில் 91 மையங்களில் 234 தொகுதிகளுக்கான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகிறது. இதில், 16 ஆயிரத்து 966 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பாதுகாப்பு பணியில் 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், 27 கம்பெனிகள் ஏற்கனவே வந்துவிட்டன. மீதம் 18 கம்பெனிகள் இன்று வருகின்றன.காலை 5 மணிக்கே, ஓட்டுஎண்ணிக்கை மையத்துக்கு,தொகுதியின் பார்வையாளர்,தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி வந்துவிடுவர். எந்தெந்த மேஜையில் ஓட்டு எண்ணிக்கைக்கு எந்த ஊழியரை பயன்படுத்துவது என்பது அப்போது முடிவு செய்யப்படும். காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், தொகுதி தேர்தல் அதிகாரியின் மேஜையில் தபால் ஓட்டுகள்எண்ணப்படும்.அரை மணி நேரத்துக்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு சுற்று ஓட்டுஎண்ணிக்கை முடிந்ததும்,அதற்கான படிவம் நிரப்பப்பட்டு, தேர்தல் அதிகாரியின் பார்வைக்கு அனுப்பப்படும். அனைத்து மேஜைகளிலும் ஒரு சுற்று ஓட்டுஎண்ணப்பட்டு, தேர்தல் அதிகாரி கையெழுத்திட்ட பின், அந்த சுற்று விவரம் அறிவிக்கப்படும்.மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பலகையில் எழுதப்படும். இது தவிர, ஒவ்வொரு மேஜையிலும் ஓட்டு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்படும். அந்த வீடியோ காட்சிகள், "சிடி'யாக வேட்பாளர்களுக்கு வழங்கப்படும்.தபால் ஓட்டு எண்ணிக்கைவிவரங்களை அறிவிக்காமல், கடைசி இரண்டு சுற்றுகளுக்கான ஓட்டு எண்ணிக்கையை துவங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் முதலில் வருபவர், இரண்டாவது வருபவர் ஆகியோருக்கு இடையேயான ஓட்டு வித்தியாசம், தபால்ஓட்டுகளை விடகுறைவாக இருந்தால், தபால் ஓட்டுகள் மீண்டும் ஆய்வுசெய்யப்படும். இவை வீடியோவில் பதிவு செய்யப்படும்.

இதை தவிர, ஓட்டு எண்ணிக்கை துவக்கம், இயந்திரங்கள் திறக்கப்படுவது, பாதுகாப்பு ஏற்பாடுகள், அசம்பாவித சம்பவங்கள் என அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.தேர்தல் அதிகாரியின் மேஜைக்கு அருகிலேயே, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கான இருக்கையும் ஒதுக்கப்படும். இதனால், அ.தி.மு.க., புகார் கூறியிருப்பது போல, தவறாக எண்ணிக்கையை பதிவு செய்ய வாய்ப்பில்லை. மேலும், வீடியோ பிரதிகளும் உள்ளன. பார்வையாளர், தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் ஒரிஜினல் படிவங்கள் இருக்கும். டேட்டா பதிவுடன், அதை ஒப்பிடலாம். ஒவ்வொரு சுற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின், அடுத்த சுற்று துவங்கஉள்ளதால், வழக்கமாக ஆகும் நேரத்தை விட, 10 முதல் 15 சதவீதம் கூடுதல் நேரம் ஆகும்.

தேர்தல் வழக்குகளை பொறுத்தவரை, சுவர்களில் விளம்பரம் செய்தல், வாகனங்களை அனுமதியின்றி பயன்படுத்துதல் போன்ற குற்றங்கள், இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் வராது. எனவே, அவை தவிர சீரியஸ் குற்றங்கள் செய்ததாக, 6,818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 5,435 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. 383 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. மீதம் 389 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்ட வழக்குகளில், 1,378 வழக்குகளில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மீதம் 4,547 வழக்குகள் விசாரணையில் உள்ளன. பெரும்பாலும், பணம் கடத்தல், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது, வன்முறை செயல்களில் ஈடுபட்டது போன்ற வழக்குகள் இவை. இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

யாருக்கு சாதகம்?தமிழகத்தில், மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், 4 கோடியே, 70 லட்சத்து, 49 ஆயிரத்து, 529 வாக்காளர்கள் ஓட்டுப் போட தகுதி பெற்றுஇருந்தனர். புதுச்சேரியில், 8 லட்சத்து, ஐந்தாயிரத்து, 124 வாக்காளர்கள் தகுதி பெற்று இருந்தனர். ஓட்டுப்பதிவில்,தமிழகத்தில், ஒரு கோடியே, 83 லட்சத்து, 81 ஆயிரத்து, 236 ஆண்கள், ஒரு கோடியே, 83 லட்சத்து, 71 ஆயிரத்து, 744 பெண்கள், 134 மற்றவர்கள் என, 3 கோடியே, 67 லட்சத்து, 53 ஆயிரத்து, 114 பேர் ஓட்டுப் போட்டனர். இதன் சதவீதம், 78.12. இதில், தபால் ஓட்டுகள் சேர்க்கப்படவில்லை.மற்ற மாநிலங்கள் பற்றி வெளிவந்த கருத்துக் கணிப்புகளில், குறிப்பிட்ட கூட்டணிக்கு சாதகமாக தெரிவிக்கப்பட்ட போதிலும், தமிழகத்தில், தி.மு.க., அணியா, அ.தி.மு.க., அணியா என்பதை எந்த கருத்துக் கணிப்பும் உறுதிபடத் தெரிவிக்கவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க., 119 தொகுதிகளிலும், அ.தி.மு.க., 160 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தி.மு.க., அணியில் காங்கிரஸ் 63, பா.ம.க., 30, விடுதலைச் சிறுத்தைகள் 10, கொங்குநாடு முன்னேற்ற கழகம் 7, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி 3, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவை தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிட்டன.

அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., 41, மார்க்சிஸ்ட் 12, இந்திய கம்யூனிஸ்ட் 10, மனிதநேய மக்கள் கட்சி 3, சமத்துவ மக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 2, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, பார்வர்டு பிளாக் ஆகியவை தலா ஒரு இடங்களில் போட்டியிட்டன.கூட்டணி பலம், ஓட்டு வங்கி, இலவசங்கள், வாக்காளர்களுக்கு பணம் போன்ற பல்வேறு அம்சங்களையும் கணக்கிட்டு, இரு அணிகளுமே மிகுந்த நம்பிக்கையோடு உள்ளன. இதுதவிர, இந்ததேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிட்டுள்ளது. இந்திய ஜனநாயக கட்சி, சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது.

எனவே, இரு அணிகளுக்கும் ஓட்டுப் போட விரும்பாதவர்கள், இந்த அணிகளுக்கு ஓட்டுப் போட்டிருக்க வாய்ப்புள்ளது. அதேபோல, இந்த தேர்தலை புறக்கணித்துள்ள ம.தி.மு.க.,வின் ஓட்டு வங்கிஎந்தப் பக்கம் சென்றது என்ற குழப்பமும் நிலவுகிறது.இத்தனை கேள்விகளுக்கும், நாளை பிற்பகலில் விடை கிடைத்துவிடும். தமிழகத்தை அடுத்து ஆளப் போவது யார் என்பது நாளை முடிவாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...