Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 09, 2011

உலக வரலாறு படைத்த மேற்குவங்க சபாநாயகர்

மேற்குவங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரி கூட்டணி, தொடர்ந்து, 34 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்ததை போல, அம்மாநில சபாநாயகர் ஹசிம் அப்துல் கலிம், 1982, மே 6ம் தேதியில் இருந்து, தொடர்ந்து, 29 ஆண்டுகள், இடது சாரி கூட்டணி ஆட்சிக்கு சபாநாயகர் பதவி வகித்தார்.

இதன் மூலம், உலகிலேயே, அதிக ஆண்டுகள், சபாநாயகராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹசிம் அப்துல் கலிம். மேற்குவங்கத்தில், நடப்பு தேர்தலில், ஆட்சி மாற்றம் இருக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கூறி வரும்போது, "போதும் இந்த வருத்தம் அளிக்க கூடிய சபாநாயகர் வேலை' என்கிறார்.

மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்கு முன், கடைசியாக நடந்த சட்டசபை கூட்டத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் அப்துல் கலீம் பேசினார். சபாநாயகர் பணி குறித்து இவர் கூறியதாவது: கடந்த, 29 ஆண்டுகால சபாநாயகர் பணியில், முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ், மறைந்த மேற்குவங்க முன்னாள் முதல்வர்கள் அனைவருக்கும் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். என்னுடன், நெருங்கிய உறவு வைத்திருந்த, அரசியல் தலைவர்கள் இறந்த போது, இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். அப்போது என் மனம் பாரமாக இருந்தது.

மாற்றம் தேவை என்று மக்கள் கூறி வருகின்றனர். மாற்றம் என்பது ஒரு தொடர்கதை. 2000வது ஆண்டில், முதல்வர் பதவி ஜோதி பாசுவிடம் இருந்து, புத்ததேவ் கைக்கு மாறியது. 1977ம் ஆண்டில் இருந்து கிராமங்கள், நகரங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால், இன்னும் அதிக மாற்றம் தேவைப்படுகிறது. அடுத்த முறை, யார், மேற்குவங்க எம்.எல்.ஏ.,க்களாக வருகிறார்களோ, அவர்கள், மாநிலத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

மாற்றம் என்பது மக்களுக்காக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். என் பதவி காலத்தில், சட்டசபையில், 158 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெண்கள் பாதுகாப்பு, விதவைகள் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை ஆகியவை முக்கியமானவை. நாட்டிலேயே, மேற்குவங்க மாநிலத்தில் தான், முதன் முறையாக, ஓட்டு போடும் வயதை, 18 ஆக, சட்டத்தின் வாயிலாக கொண்டு வரப்பட்டது. முதுமை காரணமாக இனி தேர்தலில் போட்டியிட்டு, சபாநாயகர் பதவி வகிக்க விரும்பமில்லை. அடுத்தது, இடது சாரி ஆட்சி அமைந்தாலும், நான் சபாநாயகராக பொறுப்பு ஏற்க போவதில்லை. இவ்வாறு அப்துல் கலீம் கூறினார்.
சபாநாயகராக இருந்தாலும், இவர் அரசியல் சர்ச்சைக்கு உட்பட்டவர் தான். இவர் குறித்து திரிணமூல் கட்சி எம்.எல்.ஏ., பார்த்தா சாட்டர்ஜி கூறும்போது, "நந்திகிராமில், 14 பேர், போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக, எங்கள் கட்சி, இரங்கல் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கேட்டது. ஆனால், சபாநாயகர் ஒப்பு கொள்ளவில்லை. பாரபட்சத்துடன் நடந்து கொண்டார்' என்கிறார். அதே நேரத்தில், "சட்டசபை என்ற கப்பலை, பல முறை மூழ்கடிக்க நடந்த முயற்சிகளை முறியடித்து, திறமையாக கப்பலை சபாநாயகர் ஓட்டி சென்றார்' என்று, இவருக்கு, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா புகழாரம் சூட்டுகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...