Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 16, 2011

தேர்தல் முடிந்ததும் மக்கள் தலையில் "பெட்ரோல் குண்டு!'

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் மூன்று முறை ஏற்பட்டுள்ள விலை உயர்வு இத்தோடு நிற்காது என்றும், இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் எகிறும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து கொள்ள, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் 2010, ஜூன் 26ல் அனுமதி அளித்தது. விலை உயர்வுக்குமுன் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற பின் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதன்விளைவாக பெட்ரோல், டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு டிச.,15ல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 86 அமெரிக்க டாலராக இருந்தது. இதனால், பெட்ரோல் விலையில் 2.96 ரூபாய் உயர்ந்தது. மக்களுக்கு லிட்டர் 60.47ரூபாய்க்கு விற்க்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் பேரல் கச்சா எண்ணெய் விலை 92 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் தெரிவித்தன. இதைஏற்றுக்கொண்ட மத்திய அரசு கடந்த ஜன., 15ம் தேதி நள்ளிரவு முதல் விலையை உயர்த்த அனுமதி வழங்கியது. இதனால், கடந்த ஜன., 15ம் தேதி நள்ளிரவு 12.00மணி முதல் மீண்டும் லிட்டருக்கு 2.75 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு, லிட்டர் பெட்ரோல் 63.21 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 2ல் மாநில அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான விற்பனை வரியை 30 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக குறைத்தது. இதன் காரணமாக, லிட்டர் பெட்ரோல் விலை 63.21 ரூபாயிலிருந்து 61.78 ரூபாயாக குறைக்கப்பட்டது; 1ரூபாய் 43 காசுகள் குறைக்கப்பட்டன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை தற்போது 113 அமெரிக்க டாலராக உயர்ந்த காரணத்தால் பெட்ரோல் லிட்டருக்கு 5.25 ரூபாய் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கோவையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 67.03ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் வழக்கம்போல 40.49 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு, விற்பனை வரியை கணிசமான அளவு குறைத்தால் பெட்ரோல் விலை கணிசமான அளவுக்கு குறையும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறியதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை தற்போது 113 அமெரிக்க டாலராக உள்ளது. இதன் காரணமாகவே பெட்ரோல் லிட்டருக்கு 5.25 ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு முன் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 120 அமெரிக்க டாலராக விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8.50 ரூபாயும், டீசலுக்கு 18 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாகவே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 நாட்களில் பெட்ரோல் விலை மேலும் உயர்த்தப்படும் சூழ்நிலை உள்ளது. வரும் 17, 18ம் தேதிகளுக்கு பின் டீசல் விலையும் உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து மக்கள் கருத்து:கிசோர், ஈவன்ட் மேலாளர், கோவை: நடுத்தர மக்களின் மீது சுமையை ஏற்றுவது மத்திய அரசுக்கு வாடிக்கை யாகிவிட்டது. பல்வேறு நுகர்பொருட்களின் விலை உயர்வுக்கும் பெட்ரோலிய பொருட் களின் விலை உயர்வு காரணமாக அமையும். எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதே விலையேற்றத்துக்கு காரணம் எனக்கூறுகின்றனர். ஆனால், பொதுத்துறை நிறுவனங்கள் ஆண்டறிக்கை வெளியிடும் போது லாபத்தில் இயங்குவதாக காட்டப்படுவது எப்படி? வெளிப்படையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
"தவிர்க்க முடியாதது' என்ற நிலை இருந்தால், தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு முன்னரே விலையேற்றத்தை அறிவித்திருக்க வேண்டியதுதானே? பிரகாஷ், தகவல் தொழில்நுட்ப துறை யாளர், கோவை: அண்டை நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களின் விலை, இந்தியாவோடு ஒப்பிடுகையில் குறைவு. இந்தியாவில் தனிநபர் வாகனப் போக்குவரத்து அதிகம். பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளிடம் எந்த திட்டமும் இல்லை. இறக்குமதி வரியை குறைத்தால், பெட்ரோல் டீசல் விலையையும் குறைக்க முடியும். தேவையற்ற திட்டங்களுக்கு பணத்தை வீணடிக்கும் மத்திய, மாநில அரசுகள், அத்தியாவசியப் பண்டங்களின் விலையை கட் டுக்குள் வைக்க தவறுகின்றன. நடுத்தர வர்க்கத்தினரின் சராசரி ஆண்டு வருமானம் உயரும் வேகத்தை விட, விலைவாசி உயர்வு சதவீதம் மிக அதிகமாக இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வே இதற்கு அடிப்படை காரணம். இந்தியாவை 50 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டு விட்ட காங்., அரசுக்கு பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைக்கும் திறன் இல்லை.
தவறானவர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தால் இப்படித்தான் மக்கள் திண்டாட வேண்டி இருக்கும் என்பதற்கு, பெட்ரோலிய பொருட்களின் தொடர் விலையேற்றம் நல்ல உதாரணம்.தண்டபாணி, லிப்ட் டெக்னீசியன், கோவை:கடந்த ஐந்தாண்டுகளில் ஏறத்தாழ 80 சதவீதத்துக்கு மேல் பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறது. மக்களின் வருவாய் அந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறதா? என்றால் இல்லை. பிறகு மக்களால் எப்படி வாழ முடியும்? விலை உயர்வு முடிவை எடுக்கும் அதிகாரத்தை பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தாரை வார்த்திருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் விலையேற்றத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள பார்க்கிறது.
மாற்று எரிபொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நடுத்தர வர்க்கத்தினரை மிக மோசமான நிலைக்கு தள்ளுவதற்காகவே பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. கச்சா எண்ணெயின் விலை உயரும்போதெல்லாம் உள்நாட்டில் விலையை உயர்த்துபவர்கள், கச்சாஎண்ணெய் விலை குறையும் போது, குறைப்பதில்லை. மஞ்சு, தனியார் நிறுவன ஊழியர், கோவை: "பெட்ரோல் விலையை எவ்வளவு ஏற்றினாலும் மக்களால் எதுவும் செய்ய முடியாது' என்று மத்திய அரசு நினைக்கிறது போலும். வேறு பொருட்கள் விலை ஏறினால் மாற்றுப் பொருளை வைத்துச் சமாளிக்க முடியும். ஆனால், பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் இல்லையே. எதற்கெடுத்தாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது என, அரசு காரணம் சொல்கிறது; இன்றும் பாகிஸ்தானில் லிட்டர் 40 ரூபாய்க்கும் குறைவுதானே. தங்களின் சம்பள உயர்வுக்கு குரல் கொடுக்கும் எம்.பி.,க்கள், நடுத்தர வர்க்கத்தினரைப் பாதிக்கும் இதுபோன்ற விஷயத்துக்கு குரல் கொடுப்பதில்லை. அரசின் எல்லா முடிவுகளுமே நடுத்தர வர்க்கத்தினர் மீது சுமை ஏற்றுகிறது. பெட்ரோல் மீதான இறக்குமதி வரியை அரசு கட்டாயமாக குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு ஈடாக, எம்.பி.,க்கள் ஊழியத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம். "பழசை மறக்கக்கூடாது' எனச் சொல்வார்கள். அரசும் அதையே வலியுறுத்துகிறது போலும். பழையபடி மாட்டு வண்டிகளில்தான் பயணம் செய்ய வேண்டி இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...