Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 27, 2012

மின்வெட்டு:தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் எத்தனை மணி நேரம் மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது என்பது குறித்த விரிவான அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அசோக் நகரைச் சேர்ந்த குடிமக்கள் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் வி. ரவிச்சந்திரன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். சென்னை மாநகரிலும் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அடிக்கடி மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின்சாரம் வழங்கப்படும் நேரத்திலும்கூட மின் அழுத்தம் குறைவாகவே உள்ளது.

இதனால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும். மாநிலத்தில் தேவையான அளவில் துணை மின் நிலையங்களை தொடங்குவது உள்பட மின்சார விநியோகத்துக்கான வலிமையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் ரவிச்சந்திரன் கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

 அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மாநிலத்தின் பல மாவட்டங்களில் தினமும் சில மணி நேரத்துக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாகவும், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் எத்தனை மணி நேரத்துக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்பது பற்றிய விரிவான அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் நேரங்கள்
பற்றிய தகவலை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு முன்னதாகவே தெரியப்படுத்தாதது ஏன் என்பது பற்றியும் மின்சார வாரியம் தனது அறிக்கையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...