Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 30, 2011

விடியலை நோக்கியே பயணம் -எம். அப்துல் ரஹ்மான் எம்.பி

பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!

எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளுமே தனித்தனியே போட்டியிட்டு அவரவர் பங்கிற்கு மக்களிடத்திலிருந்து முடிவுகளையும் பெற்றிருக்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் சட்டமன்றத் தேர்தல் முடிவுற்று ஆளுங்கட்சிக்கு அபரிமிதமான இடங்கள் கிடைத்து, மக்களின் மனநிலையில் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படாத நிலையில் தமிழகம் இன்னொரு தேர்தலைச் சந்தித்திருப்பதால் உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்திற்குரியவை அல்ல என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

ஆனால், சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க வேண்டிய உண்மை வெளிச்சம் ஒன்று நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த வெளிச்சம் வெளிப்படும் தருணம் விரைவில் தேர்தல் முடிவுகளாகத் தென்படும் என்று பிறைமேடை இதழின் முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.அது என்ன?

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் அதிகமாக, இன்னும் சொல்லப் போனால் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாழக்கூடியவை. அவை இஸ்லாமிய மார்க்கக் கலாச்சாரப் பெருமை கொண்ட பகுதிகள். காலம், காலமாக முஸ்லிம் சமுதாயப் பிரமுகர்களில் யாரேனும் ஒருவர்தான் அந்த நகராட்சியின், அல்லது பேரூராட்சியின் அல்லது ஊராட்சியின் தலைவராக இருந்திருப்பார். ஆனால், துரதிருஷ்டவசமாக இதுபோன்ற பல பகுதிகளில் நம்முடைய மார்க்க ஒழுக்க நிலைகளைக் காப்பாற்றி, பேண முடியுமா? என்கிற கேள்விகள் எழக்கூடிய அளவுக்கு இந்த தேர்தலில் முஸ்லிம் அல்லாதவர்கள், சில இடங்களில் முஸ்லிம் விரோத அரசியல் நடத்துவோர்கூட பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். ஜனநாயக ரீதியில் நம்முடைய வாழ்த்துக்களைச் சொன்னாலும்,சட்டரீதியாக
எந்தக் குறையும் சொல்ல முடியாது என்றாலும், இத்தகைய விபத்துகளுக்கு என்ன காரணம் என்பதை மட்டும் நாம் சிந்திக்கத் தவறக்கூடாது.

அது என்ன? நம்மவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நம்மை தலைமையேற்று வழிநடத்தி அப்பகுதி மக்களுக்கு அதிக சேவைகள் புரியும் நல்ல குணநலன் உள்ள ஒருவரை ஜமாஅத் ஒன்றுகூடி தேர்ந்தெடுத்து, ஒருவேளை போட்டி இல்லாமல் ஆகிவிட்டால் சிறந்தது; இல்லையானால் போட்டியிலும் களம் இறக்கச் செய்து நிச்சயமாக வெற்றியைப் பெற்றாக வேண்டும். இதுதான் அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான செயல்முறையாக இருக்க முடியும். இந்த மையக் கருத்தை முன்வைத்துதான் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் தலைமை ஒரு தெளிவான முடிவை அறிவித்தது.

��உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்யும் வேட்பாளர்களை ஜமாஅத்துடன் கலந்து பேசி, முஸ்லிம் லீக் நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட்டு ஜமாஅத் அமைப்புகளின் ஆதரவோடு இணங்கி செயலாற்றி நம் சமுதாயத்தவர்களின் வெற்றி வாய்ப்பினை நழுவவிடாமல் நல்ல முடிவுகளைப் பெற வேண்டும்�� என்பதுதான். அதன்படி ஒத்துவந்த பகுதிகளிளெல்லாம் நம்முடைய சமுதாயப் பிரதிநிதிகளே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற நல்ல செய்திகளும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அதே நேரத்தில் ஒத்துப் போகாத பல இடங்களில் நாம் எண்ணியபடியே உள்ளாட்சித் தலைமைப் பொறுப்புகளை மற்றவர்களுக்குத் தாரை வார்த்திருக்கிறோம். இதுதான் வேதனையின் உச்ச நிலையாக இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கும் படிப்பினை.

நம் சமுதாயத்தின் கட்டமைப்பு என்பது ஜமாஅத் ஒன்றுதான். அந்த ஜமாஅத் ஐக்கியத்தில் உள்ளவர்கள் எந்த அமைப்பு, எந்த கட்சி, எந்த இயக்கம் என்று பாராமல் சமுதாயம் என்கிற சமுத்திரத்தில் சங்கமம் ஆகவேண்டும் என்பதே முஸ்லிம் லீக் தலைவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாடம். இஸ்லாமும் அதைத் தானே சொல்கிறது. நம்மில் அந்த மனநிலை உருவாகாத காரணத்தால் நம்மை மற்றவர்கள் ஆளுகிற மற்றும் ஆட்டிப் படைக்கிற காட்சிகள் ஆங்காங்கே அரங்கேறுகிற நிலையினைப் பார்க்கிறோம்.

ஒரே ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிதான் எனது சொந்த ஊர். சென்ற ரமளான் மாதத்தில் ஊருக்குச் சென்றபோது அனைத்து ஜமாஅத்துகளும் ஒருங்கிணைந்து கலந்து கொண்ட இஃப்தார் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்நிகழ்ச்சியில் பேசுகிறபோது ��நமக்குள் போட்டியில்லாமல் ஒருமித்த கருத்தொன்றை உருவாக்கி ஒருவரை மட்டும் களத்தில் போட்டியாளராக ஆக்குங்கள்; அத்தகைய ஒருமித்த கருத்து உருவாகவில்லையெனில் களம் காணவிரும்புவோரின் பெயர்களை எழுதிப் போட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து, நமக்குள் ஒத்துப்போய் தேர்தல் களத்தைச் சந்தித்தால் நமக்குத் தலைமையேற்று நமதூர் பேரூராட்சி மன்றத் தலைவராகப் பணிசெய்யும் ஒருவரை மிக எளிதாகத் தேர்ந்தெடுத்துவிடலாம். தேர்தல் நாள் வரையிலும், தேர்தல் முடிவு வரும் வரையிலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இத்தகைய அறிவுப்பூர்வமான, தார்மீக அடிப்படையிலான, பெருந்தன்மைமிக்க செயல்முறையைத் தட்டிக் கழித்தால் நம்மில் ஆளுக்கொரு முடிவெடுத்து பல எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களம் கண்டு, நமது வாக்குகளெல்லாம் பலருக்கும் சிதறிப்போய் நம்மில் யாருக்கும் பலன் இல்லாமல் மற்ற ஒருவர் வெற்றி பெற்றுவிடுவார் என்று இதயப்பூர்வமாக எச்சரித்தும் குறிப்பிட்டேன்.

அதற்கு ஒரு உதாரணமாக, உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பாராளுமன்ற தொகுதியில் 65 சதவிகித மக்கள் முஸ்லிம்களாக இருந்தும் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் பி.ஜே.பி. கட்சியைச் சார்ந்தவர்; காரணம் நம்மில் போட்டியாளர்களாக 15 பேர் களம் கண்டார்கள்; மற்றவர்களில் பி.ஜே.பி. கட்சியைச் சார்ந்த ஒருவர் மட்டும்தான் போட்டியில். அதனால் நம்மவர்களின் வாக்குகள் சிதறிப் போய் ��யார் வரக்கூடாது�� என்று சொல்லி நாம் எல்லோரும் பிரச்சாரம் செய்தோமோ அவரையே மறைமுகமாக வெற்றிபெறச் செய்துவிட்டோம்�� என்கிற நிகழ்வினை நினைவூட்டி இதுபோன்ற ஒரு நிலை நமதூருக்கு வந்துவிடக் கூடாது என்று விளக்கமாக எடுத்துரைத்தேன். கேட்டபாடில்லை.

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்குப் போட்டியிட்ட நம்மவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒன்பது பேர். முடிவு என்ன தெரியுமா?

இந்த பேரூராட்சிப் பகுதியின் பெரும்பான்மையான முஸ்லிம் மக்களுக்குத் தலைவர் திரு. அருணாச்சலம் அவர்கள். நாம் அருணாச்சலத்தைக் குறை சொல்லவில்லை. அவரை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஆனால், நாம் எப்போது நம்முடைய பலவீனத்தை உணர்ந்து பலத்தை நிரூபிக்கப் போகிறோம்?

சமுதாயத்தில் அமைப்புகளும், இயக்கங்களும் பல்வேறு பெயர்களில் இருந்தாலும் அரசியலில் ஒன்றுபட்டு, ஒரு தலைமையில் நின்றுவிட்டால் நம்மை மீறி வெற்றிகள் எங்கே போய்விடும்?

முஸ்லிம் லீக் பேரியக்கம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறது. அந்த விடியலை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறோம்.

வல்ல இறைவன் துணைபுரிவானாக!

இன்ஷா அல்லாஹ்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...