நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து மாநகராட்சிகளை கைப்பற்றியதுடன் பெரும்பாலான உள்ளாட்சி பதவிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் உள்ளது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியான நிலையில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 39.02 சதவீத ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
அ.தி.மு.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 39.24 சதவீத ஓட்டுகளும், நகரப் பகுதியில் 38.69 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. இதன்மூலம் கிராமங்களில் அதி.மு.க. செல்வாக்கு அதிகரித்துள்ளது. மேலும் சமீபத்திய சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 38.4 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தது. அதன்பிறகு 4 மாதத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 39.02 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளது. 4 மாத இடைவெளியில் அ.தி.மு.க.வுக்கு 0.62 சதவீத ஓட்டு அதிகரித்து இருக்கிறது. அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கை அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 26.09 சதவீத ஓட்டுகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு கிராமப் பகுதியில் 25.71 சதவீதமும், நகரப்பகுதியில் 26.67 சதவீத ஓட்டும் கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் 22.38 சதவீத ஓட்டுகளே பெற்ற தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் 26.1 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இதன்மூலம் தி.மு.க.வுக்கு 3.72 சதவீத ஓட்டுகள் அதிகரித்துள்ளது.
தே.மு.தி.க. உள்ளாட்சி தேர்தலில் பெற்ற இடங்களின் அடிப்படையில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் ஓட்டு சதவீத அடிப்படையில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு 10.11 சதவீத ஓட்டு கிடைத்துள்ளது. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டபோது 2006 சட்டசபை தேர்தலில் 8.38 சதவீதமும், 2009 பாராளுமன்ற தேர்தலில் 10.08 சதவீத ஓட்டும் பெற்று இருந்தது. தற்போது அதன் ஓட்டு 10.11 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் மட்டும் தே.மு.தி.க. அ.தி. மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. தற்போது உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து 10.11 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.
தே.மு.தி.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 11.93 சதவீதமும், நகரப்பகுதியில் 7.4 சதவீத ஓட்டும் கிடைத்துள்ளது. இதன்மூலம் தே.மு.தி.க. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா 2006 சட்டசபை தேர்தலில் 2.02 சதவீத ஓட்டுக்களையும், 2009 பாராளுமன்ற தேர்தலில் 2.34 சதவீத ஓட்டுக்களையும் பெற்றது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் 1.35 சதவீத வாக்குகளை மட்டும் அக்கட்சி பெற்றுள்ளது. இதன் மூலம் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு சதவீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.
பா.ம.க. 1998 பாராளுமன்ற தேர்தல் முதல் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. அணியில் மாறிமாறி கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 3.5 சதவீத ஓட்டுகளை பெற்று காங்கிரசுக்கு அடுத்தப்படியாக 5-வது இடத்தில் உள்ளது. பா.ம.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 4.63 சதவீத ஓட்டுகளும், நகரப் பகுதியில் 1.93 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. நகரங்களில் பா.ம.க.வுக்கு ஆதரவு இல்லை. கடந்த சட்டசபை தேர்தலை புறக்கணித்த ம.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 1.7 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.
தனித்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டுக்கு 0.71 சதவீத வாக்குகளும், தே.மு.தி.க.வுடன் இணைந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 1.02 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. தனித்துப்போட்டியிட்ட காங்கிரஸ் 5.71 சதவீத ஓட்டுகள் பெற்று தே.மு.தி.க.வுக்கு அடுத்தப்படியாக 4-வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட்டதன் மூலம் அந்த கட்சிகளுக்கு செல்வாக்கு என்ன என்பது வெட்ட வெளிச்சமாகியது.
கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்:-
அ.தி.மு.க. 39.02
தி.மு.க. 26.09
தே.மு.தி.க. 10.11
காங்கிரஸ் 5.71
பா.ம.க. 3.55
ம.தி.மு.க. 1.70
பா.ஜனதா 1.35
மார்க்சிஸ்ட் கம்யூ. 1.02
இந்திய கம்யூ. 0.71 மற்ற கட்சிகள் 1.28
சுயேச்சைகள் 9.46
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...