Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 24, 2011

கல்லூரி மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு வசதி: பிரவீன் குமார் தகவல்

சென்னை: "வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்கு, சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

மேலும், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 2012 ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல், இன்று(நேற்று) வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ள இப்பட்டியலின் படி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், பெயர் மற்றும் முகவரியில் உள்ள பிழை திருத்தம் போன்ற மாற்றங்களை, வாக்காளர்கள் செய்து கொள்ளலாம். வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள், 18 வயது பூர்த்தி அடைவோர், தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இவற்றுக்குரிய படிவங்களை, அனைத்து ஓட்டுச் சாவடிகள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலங்கள் ஆகிய இடங்களில் பெறலாம். பூர்த்தி செய்த படிவங்களை, அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். படிவங்கள் சரிபார்ப்புப் பணி, அடுத்த மாதம் 15ம் தேதி துவங்கும். புதிய வாக்காளர் பட்டியல், 2012 ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். புதிய வாக்காளர் அடையாள அட்டை, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், ஜனவரி 25ம் தேதி வழங்கப்படும்.
அனைத்துக் கல்லூரிகளிலும், தாசில்தார், ஆர்.டி.ஓ.,க்களை கொண்டு, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில், புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் கல்லூரி மாணவர்கள், அதற்கான படிவத்தை தங்கள் கல்லூரிகளிலேயே பெற்று, அங்கேயே தரலாம். வரும் 30ம் தேதி, அடுத்த மாதம் 6ம் தேதி, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கு, சிறப்பு முகாம் நடைபெறும். கிராம சபைகளில், அடுத்த மாதம் 2ம் தேதி, வாக்காளர் பட்டியல் வாசிக்கப்படும்.

தமிழகத்தில், தற்போது நான்கு கோடியே 73 லட்சத்து 45 ஆயிரத்து 489 வாக்காளர்கள் உள்ளனர். இது, மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 65.6 சதவீதம். வாக்காளர் பட்டியலில், 1,000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். சங்கரன்கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி, இன்னும் முடிவாகவில்லை. வரும் ஏப்ரல் 21ம் தேதிக்குள், இத்தேர்தல் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில், சில வாக்காளர்களின் பெயர் இரு இடங்களில் இடம் பெற்றுள்ளது. இத்தவறு, புதிய வாக்காளர் பட்டியலில் சரி செய்யப்படும். இவ்வாறு, பிரவீன்குமார் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...