Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 16, 2011

அமெரிக்காவில் பரவும் மக்கள் கிளர்ச்சி - ஒரு பார்வை

அரபுலகின் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக இவ்வாண்டின் தொடக்கத்தில் அரபுமக்கள் கொதித்தெழுந்தனர். அதன் பலனாக, துனீசியா, எகிப்து, யேமன், சிரியா என்று பல அரபுநாடுகளில் ஆட்சிமாற்றத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ‘அரபு வசந்தம்’ என்றழைக்கப்படும் இந்தப் புரட்சி, சில நாடுகளில் வெறுமே ‘கிளர்ச்சி’ என்ற அளவில் நின்றுபோனதற்கு அந்நாடுகளின் சமூக அரசியல் சார்ந்த காரணிகள் இருக்கக்கூடும். ஆனாலும், நாம் இந்தப் புரட்சிகளின் ஊடாகக் காண வேண்டியது ‘அமெரிக்கா’ ‘இங்கிலாந்து’ உள்ளிட்ட ‘மேலை’நாடுகளின் முகத்தைத் தான்.

அரபு வசந்தம்’ என்கிற புரட்சிக்கு முன்பு, அந்தந்த ஆட்சியாளர்களின் அத்யந்த நண்பர்களாயிருந்த அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் , புரட்சியாளர்களின் ‘கை’ ஓங்கத் தொடங்கிய போது, நண்பர்களை ‘கை கழுவி’ விட்டு, ‘ஜனநாயகம்’ பேசின.

அமெரிக்காவுக்குப் பிடிக்கவே பிடிக்காத ஈரானிலும் கிளர்ச்சி தொடங்கிய போது, “மக்கள் விருப்பத்திற்குச் செவிசாய்க்க வேண்டும்” என்று அமெரிக்கா ஈரானைக் கோரியது. அமெரிக்காவிற்குச் சளைக்காமல் பதிலளிக்கும் ஈரான், அன்று பதிலடியாகச் சொன்ன கருத்து 2011 ஆம் ஆண்டு முடிவடையத் தொடங்கும் இந்தத் தருணத்தில் உண்மையாகியிருக்கிறது.

அப்போது ஈரான் அதிபர் அஹமத்நிஜாத் சொன்னது இதுதான்: “எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம். அப்படித் தலையிட்டு மகிழ்ச்சி அடையாதே அமெரிக்காவே, இதுபோன்ற மக்கள் எழுச்சி உன் நாட்டிலும் விரைவில் வரும்” என்பதே அந்த பதில்.

ஆம். அமெரிக்க அரசின் மோசமான நிதிக்கொள்கையாலும், அரசின் கொள்கை முடிவுகளில் ‘கார்ப்பரேட்’ எனப்படும் வல்லாதிக்க நிறுவனங்களின் தேவையற்ற ஆளுமையாலும், அதனால் உருவாக்கும் பொருளாதார இடைவெளியாலும் கொதிப்படைந்துள்ள அமெரிக்க நடுத்தர வர்க்க மக்கள் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி ஆயிரக்கணக்கில் கூடி ‘வால் ஸ்ட்ரீட் ஆக்ரமிப்புக் கிளர்ச்சியை நடத்தினர்.

ஆனாலும், இந்த ‘அமெரிக்கர்’களை நம்பி, இதை செய்தியாக வெளியிடத் தயங்கின ஊடகங்கள். வேலை வெட்டி அற்றவர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியோ என்பது போலவே அந்தப் போராட்டத்தை
ஊடகங்கள் ‘ஒரு நாடகமாகப் பார்த்தன என்றால் மிகையில்லை. ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ போன்ற புகழ்பெற்ற ‘கார்ப்பரேட்’ ஊடகங்களும் அவ்வாறே கருத்து தெரிவித்தன.

ஆனால், ஒருமாதத்துக்கும் குறைவான இந்தக் கால அளவில், வால் ஸ்ட்ரீட் ஆக்ரமிப்பு இயக்கம் நன்கு வலுவடைந்து, அமெரிக்காவின் மற்ற நகரங்களுக்கும் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. வாஷிங்டன் ஆக்ரமிப்பு இயக்கம், லாஸ் ஏஞ்சலீஸ் ஆக்ரமிப்பு இயக்கம் என்ற நகர்சார் பெயர்களில் கிளைகளாகப் பரவும் ‘ வால்ஸ்ட்ரீட்’ ஆக்ரமிப்பு' (Occupy Wall Street) இயக்கம் மிக அமைதியான முறையில் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறது.

இப்போராட்டத்திற்கான முதல் அழைப்பு, கனடாவில் இருந்து வெளிவரும், "ஆட்பஸ்டர்ஸ்' இதழில், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி, முதலில் வெளிவந்தது. அந்த இதழில், எகிப்திய போராட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, அமெரிக்காவிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, லட்சக்கணக்கானோர் வால் ஸ்டிரீட்வில் திரள வேண்டும் என்று, பிப்ரவரி 2ம் தேதி, தலையங்கம் அறைகூவல் விடுத்தது.

தொடர்ந்து, ஜூலை 13ம் தேதி, இந்தப் போராட்டத்திற்காக,"ஆக்குபை வால்ஸ்ட்ரீட்' என்ற "ட்விட்டர்' கணக்கை, "ஆட்பஸ்டர்ஸ்' துவங்கியது. இதையடுத்துத் தான், செப்டம்பர் 17ம் தேதி, ஆயிரம் பேர் திரண்டு வால் ஸ்டிரீட்வில், புகழ்பெற்ற பங்குச் சந்தை அடையாளமான காளைச் சிற்பத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்' முழக்கம், "நாங்கள் 99 சதவீதம்” (We, the 99 Percent ) என்பதாம். மீதமுள்ள ஒரு சதவீதம் தான், அரசியல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பது இதன் உட்பொருள்.


கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்ததைப் போல, நியூயார்க்கின் ஜுகோட்டி பூங்காவில் திரண்டுள்ள மக்கள், தங்கள் உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கும், பூங்காவின் தூய்மைக்கும், தாங்களே பல குழுக்களை அமைத்துச் செயல்படுகின்றனர்.


அரபு நாடுகளின் போராட்டங்கள் ‘சீர்திருத்தம்’ என்று ஆரம்பித்து 'ஆட்சி மாற்றம்' என்று முடிந்தாலும், அந்தப் பாதையில் இந்த அமெரிக்கக் கிளர்ச்சி செல்லும் சாத்தியங்களில்லை.

ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும், அகிம்சை வழியிலேயே திகழ வேண்டும் என, "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு' இயக்கத்தின் இணையதளத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தங்கள் கோரிக்கை உலகளவில் ஆதரவைப் பெறும் எனவும், இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் மையங்கொண்டிருந்தாலும், இந்த கிளர்ச்சிப் புயலானது ஐரோப்பாவின் ரோம், ஏதென்ஸ், மாட்ரிட் போன்ற நகரங்களிலும், தென்னாப்ரிக்காவின் டர்பன், கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் நகரங்களிலும், ஜெர்மனியின் பிராங்பர்ட்டிலும் நேற்று பரவி, அங்கும் போராட்டங்கள் நடந்துள்ளன.


பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த போராட்டத்தில் "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கலந்து கொண்டிருக்கிறார். இத்தாலியின் ரோம் நகரில் நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் கண்டு கொள்ளாமல் இருந்தாலும், அமெரிக்க ஊடகங்கள் இப்போராட்டத்தின் தாக்கத்தைக் குறித்து, ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் குவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், இத்தாலி போன்றவை பொருளாதாரத்தில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில், ஐரோப்பாவும் மிகக் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிகிறது.

இந்தப் போராட்டங்களின் வீச்சு, அமெரிக்க அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில், இந்த போராட்டத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அதே நேரம், பிரிட்டிஷ் பொருளாதார ஆய்வாளர் கில்ஸ் வொய்ட்டெல் கூறுகையில் “இந்த வால்ஸ்ட்ரீட் முற்றுகை அணி”யினரிடம் தெளிவான செயல்திட்டம் இல்லை. அதனால் இது வெற்றியடையும் என்று(ம்) சொல்வதற்கில்லை. உணர்ச்சி இருக்குமளவுக்கு ‘இலக்கு நோக்கும் போக்கு’ இவர்களுக்கு இல்லை என்று கருத்தளித்துள்ளார்.

பார்க்கலாம், என்ன நடக்குமென்று!
source: inneram.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...