Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 30, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!


நெல்லூர்: ‌டெல்லியில் இருந்து சென்னை ‌நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 47 பயணிகள் உடல் கருகி பலியாயினர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீ பிடித்த ‌‌ரயில்‌ எஸ்-11 கோச்சில் இருந்த மொத்தம் 72 பேரில் இன்னும் சிலர் தீயில் சிக்கி இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்து பின்னர் அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எஸ்-11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ‌பலர் காயமடைந்துள்ளனர். 

நெல்லூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்‌கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அங்கு கலெக்டர் கூறுகையில், இது வரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என்றார். 

சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு?
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. சென்ட்ரலில் காலை  10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. மேலும், சென்ட்ரலில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயிலில் பாதிக்கப்பட்டோரின் உறவினர் இலவசமாக அழைத்து செல்லப்படுவர் எனவும் கூறப்பட்டு உள்ளது. 

ரயில் விபத்து முதல்வர் விரைகிறார்

ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ஹெலிகாப்டரில் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்கிறார், ஜதராபத்திலிருந்து சென்னை வந்து பின்னர் கார் மூலம் நெல்லூர் செல்கிறார். நெல்லூர் மாவட்ட ஆட்சியர், ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.

விபத்து எப்படி?
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நெல்லூர் அருகே வரும் போது எஸ்-11 பெட்டியில் தீப்பிடித்தது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தீப்பிடித்தது. எஸ்-11 கோச்சில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தால், ஐதாரபாத்தில் இருந்து சென்னை வர வேண்டிய சார்மினார் எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்து சேரும் என கூறப்பட்டு உள்ளது. 
அதிகாலையில் தீ விபத்து

விபத்துள்ளான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சனி கிழமை டெல்லியில் இரவு 10 மணியளவில் புறப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூரை கடந்ததும் விபத்துக் கண்டறியப்பட்டுள்ளது. விபத்தை அறிந்ததும் பயணிகள் ரயிலில் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தியுள்ளனர். தீ பிடித்த படுக்கை வசதிக் கொண்ட 2ஆம் வகுப்பு  பயணிகள் இருக்கையில் 72 பேர் இருந்துள்ளனர். விபத்தால் 7.15 வர வேண்டிய ரயில் 11.45க்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரூ. 5 லட்சம் நிதியுதவி

ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. பலத்த காயமடைந்தோருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், லேசான காயமடைந்தோருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவலறிந்ததும் ரயில்வே துறை அமைச்சர் முகுல் ராய் சம்பவ இடத்திற்கு விரைகிறார்.

சிறப்பு ரயில் புறப்பட்டது

பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது. சிறப்பு ரயிலில் பாதுகாப்பு உபகரணங்கள், உயிர்காக்கும் மருந்துகள், மீட்பு பணிக்கான உபகரணங்கள் ஆகியவை எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களும் சிறப்பு ரயிலில் நெல்லை புறப்பட்டுள்ளனர்.

22 பேர் சென்னைவாசிகள்

விபத்தில் உயிரிழந்த 47 பேரில் 22 பேர் சென்னை வாசிகள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. எஸ்-11 கோச்சில் இருந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணை தொடங்கியது

ரயில் விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் விபத்திற்கான காரணம் அறியும் விசாரணையைத் தொடங்கினர். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் தலைமையிலான குழு இதற்கான ஆய்வினை தொடங்கியதாக தெரிகிறது.

10 பேருக்கு பலத்த காயம்

பலத்த தீக்காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 10 பேர் நெல்லூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 90 கதவீதம் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை வந்தது ரயில்

விபத்துக்குள்ளான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தற்போது சென்னை கொண்டு வரப்பட்டது. பலத்த காயமடைந்த 12 பேர் ஆம்புலன்சில் மருத்து மனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 7.15க்கு வர வேண்டிய ரயில் தீ விபத்தின் காரணமாக 12 மணிக்கு சென்னைக் கொண்டு வரப்பட்டது. தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
பயணிகள் குற்றச்சாட்டு
தீப்பிடித்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அடுத்தப் பெட்டியில் இருந்த பயணிகளின் முயற்சியால் தான் மற்ற பெட்டிகளுக்கு தீ பரவுவது தவிர்க்கப்பட்டதாகவும், தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல் அளித்து 1 மணி நேரம் கழித்து தான் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சற்று முன்னதாகவே மீட்பு படையினர் வந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...