Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 19, 2012

கடலூர் மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தில் அலைமோதும் இளைஞர்கள் கூட்டம்!


திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றொரு பழமொழி உண்டு. ஆம், உள்நாட்டில் வாய்ப்பு இல்லாவிட்டால் வெளிநாடு சென்று பொருள் சேர்க்க வேண்டும் என்பதே இதன் பொருள். அந்த வகையில் இன்று வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஸ்போர்ட் அலுவலங்களில் குவியும் இளைஞர்கள் கூட்டத்தை வைத்தே இதை கணிக்க முடிகிறது.

அதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கிற அனைவரும் உடனடியாக வெளிநாடு சென்று விடுவதில்லை. என்றாலும் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் அருகில் மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு விடுமுறை நாட்களை தவிர இந்த அலுவலகத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் நீண்ட வரிசையில் நின்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து செல்வதை காண முடிகிறது.

முன்பு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறிப்பட்ட பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்களில்தான் விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதன் பின்னர் மாவட்டங்கள் தோறும் இது விரிவுபடுத்தப்பட்டது. தற்போது நேரில் சென்று விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஆன் லைன் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியும் வந்துவிட்டது.

ஆன் லைன் மூலம் தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க ரூ.2,500 கட்டணமும், சாதாரண முறையில் விண்ணப்பிக்க ரூ.1,000 கட்டணமும் செலுத்த வேண்டும். சாதாரண முறையில் விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் கையில் வந்து சேர 4 மாதங்கள் ஆகும். தட்கல் முறையில் விண்ணப்பித்தால் 10 முதல் 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வீடு தேடி வந்துவிடும்.

ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றாலும் பாஸ்போர்ட் அலுவலகங்களில் இளைஞர்களின் கூட்டம் குறைந்த பாடு இல்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில் 75 பேர் பாஸ்போர்ட்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

ஒரு காலத்தில் வெளிநாடு செல்பவர்கள் மட்டுமே பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தார்கள். ஆனால் இன்று அப்படி அல்ல, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும் ஒரு அடையாள அட்டையாக பாஸ்போர்டையும் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே ஒரு குடும்பத்தில் ரேஷன்கார்டு, வங்கி பாஸ் புத்தகம் என்ற வரிசையில் பாஸ்போர்டும் இடம் பிடித்துவிட்டது.

அடுத்து பள்ளிகளில் தேர்வு முடிவுகள் வெளியானதும் மேல்படிப்பு செல்வதற்கு முன்னதாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து விட வேண்டும் என்று நினைத்து இளைஞர்களும், இளம்பெண்களும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வருகிறார்கள். சிறுவயது முதலே தங்கள் பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் எடுத்துவிட வேண்டும் என்றும் பெற்றோர்கள் வருகிறார்கள். இப்படி பல்வேறு வகையிலும் பொதுமக்கள் பாஸ்போர்ட் எடுக்க வருவதால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூட்டம் அதிகரித்து கொண்டே போகிறது.

கடலூர் மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 40 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மாதம் என்று பார்க்கும் போது 1,200 விண்ணப்பங்களும், ஆண்டு கணக்கை பார்த்தால் குறைந்தபட்சம் 14,400 விண்ணப்பங்களும் பெறப்படுகின்றன. 

தமிழ்நாட்டிலேயே பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்படுவதில் வேலூர் மாவட்டம் முதல் இடத்திலும், கடலூர் மாவட்டம் 2-வது இடத்திலும் உள்ளதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...